என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல்
- குன்னம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- திருமாவளவன் பிளக்ஸ் போர்டு கிழிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிறுத்தம் அருகே அனுமதியின்றி அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் கட்சியின் பொன்விழா மாநாட்டை வாழ்த்தி அக்கட்சியினர் சார்பில் பதாகையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளையொட்டி அவரை வாழ்த்தி அக்கட்சியினர் சார்பில் பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த 2 பதாகைகளும் நேற்று முன்தினம் மாலை கிழிக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பதாகையை கிழித்தவரை குன்னம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் குன்னம் பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பதாகையை கிழித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டனர். இதனால் 1¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை போலீசார் சீர் செய்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பதாகையை கிழித்ததாக குன்னம் மெயின் ரோட்டை சேர்ந்த மகாராஜனின் மகன் நீதிபதியை (வயது 33) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






