என் மலர்
உள்ளூர் செய்திகள்

16 தெரழிலாளர்கள் மீது நடவடிக்கை
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டு பணிக்கு வராத 16 பேருக்கு ஒரு வருட தடை
- மாவட்ட கலெக்டர் கற்பகம் திடீர் ஆய்வில் அதிரடி நடவடிக்கை
பெரம்பலூர்
வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பணிக்கு வராத 16 தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூரில் ஊரக வளர்ச்சித் துறையின் 15-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இக்குளத்திற்கான கரைகளை சமப்படுத்தி, பலப்படுத்தும் பணிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) மூலம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணியினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டினை பார்வையிட்ட கலெக்டர், பணியில் இருந்த தொழிலாளர்களை எண்ணிப்பார்த்தார்.
அப்போது வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொழிலாளர்களில் 16 பேர் குறைவாக பணி செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார்.
இதையடுத்து கலெக்டர் இதுகுறித்து பணி தள பொறுப்பாளரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் உரிய விளக்கம் அளிக்குமாறும், பணிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்த 16 தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை நீக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி 16 தொழிலாளர்களுக்கு அடுத்த ஓராண்டிற்கு 100 நாள் வேலையில் பணி வழங்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று 100 நாள் வேலை நடைபெறும் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். பணிகளில் ஏதேனும் முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்ட பணி தள பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் எச்சரித்தார்.






