என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் பாலையூரில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமி
- பொதுமக்கள் கையில் சிக்காமல் மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமி திடீரென மூதாட்டி செல்லம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து மூதாட்டியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் அந்த ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லெப்பைக்குடிகாடு கிராமத்தில் கஞ்சா விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார்
- அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு கிராமத்தில் சிலர் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அடியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஜமாலயா நகரை சேர்ந்த நியாஸ் அகமது (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பெரம்பலூர் அருகே சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்
- லிப்ட் கேட்டு ஏறியவருக்கு நேர்ந்த சோகம்
குன்னம்,
பெரம்பலூர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர்கொடி (வயது 47), பலூன் வியாபாரி.
இவா் பல்வேறு ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்ற பலூன் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு ஊருக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துறையூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம் வந்தது. மலர்கொடி அந்த வாகனத்தில் ஏறி பயணம் செய்தாா்.
ஆலத்தூர் கேட்-துறையூர் சாலையில் குரூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் செய்த மலர்கொடி உள்பட 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொபட் மோதி நடந்து சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
- பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே குரும்பலூர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி பார்வதி (வயது 42). இவா் பெரம்பலூர்-துறையூர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆலத்தூர் தாலுகா, காரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வல்லரசுவின் மகன் நல்லதம்பி (19) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக பார்வதி மீது மோதியது. இதில் பார்வதியும், நல்லதம்பியும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். நல்லதம்பிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- கும்பாபிஷேக விழாவில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கிழுமத்தூர் கிராமத்தில் சௌந்தரிய நாயகி அம்மன், சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை தீர்த்த ஊர்வலம், கோ பூஜை, அதனை தொடர்ந்து மறுநாள் திருப்பள்ளி எழுச்சி, முதல் கால வேள்வி வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல், மருந்து சாத்துதல் நடைபெற்றன.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி வழிபாடு திருமுறை விண்ணப்பம், அருளார் அமுதம் வழங்குதல், அருட்பிரசாதம் வழங்குதல், நடைபெற்றன.
நேற்று காலை மூன்றாம் கால வேள்வி வழிபாடு, நாடி சந்தன வழிபாடு, கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க திருகலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன.
தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கிழுமத்தூர், பெருமத்தூர், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை குன்னம் காவல்துறையினர் செய்திருந்தனர்
இதேபோல் அத்தியூர் குடிகாட்டில் திரோபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளை மங்களமேடு காவல்துறையினர் செய்து இருந்தனர்
- சிறுவாச்சூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டு உள்ளது
- பராமரிப்பு பணிகள் நடைபெற போவதால் மின் நிறுத்தம் என அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தை சேர்ந்த சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனபாடி, கவுல்பாளையம், தீரன் நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்ப நகர், பெரகம்பி ஆகிய பகுதிகளிலும், செட்டிகுளம், நாரணமங்கலம், அயிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களிலும் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது.
பெரம்பலூர் கிராமியத்துக்குட்பட்ட எசனை துணை மின் நிலையத்தை சேர்ந்த கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் மற்றும் காவிரி நீரேற்றும் உந்து நிலையங்களான ஆலம்பாடி, எசனை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக கீழப்பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
- ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜிக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவராக சத்யா காமராஜ் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் கற்பகம், சுதந்திர தின விழாவின் போது சத்யா காமராஜிடம் பாராட்டி வழங்கினார்.
மேலும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காடூர் ஊராட்சியையும் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி, வார்டு உறுப்பினர்கள் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு, சுப்பிரமணியன் தொட்டி , புவனேஷ்வரி, ஜோதி, சீதா, ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- குன்னம் அருகே விஷம் குடித்த புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
- கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரத்குமார். இவருக்கும், அதேபகுதி சமத்துவபுரம் ரோட்டை சேர்ந்த சின்ன தம்பியின் மகள் பட்டதாரியான மீராவுக்கும் (வயது 22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மீராவின் பெற்றோர் சரத்குமாருக்கு வரதட்சணையாக நகையும், சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருட்களையும் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சரத்குமார் சவுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதையடுத்து மீரா தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மீராவை அவருடைய பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள சரத்குமார் செல்போனில் மீராவை தொடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மீரா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனைக்கண்ட அவருடைய குடும்பத்தினர் மீராவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மீரா பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மீராவின் பெற்றோர் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த மீராவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி விசாரணை நடத்தி வருகிறார்.
- 2024 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. புதிய பிரதமரை தேர்வு செய்து நீட் தேர்வை ஒழிக்கும் என்று பெரம்பலூரில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்
- தி.மு.க. இளஞைரணி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேச்சு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், நகராட்சி துணை தலைவருமான ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
திமுக துணை பொதுச்செயலாளர் ராஜா எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், மத்தியில் தர்பார் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கும்பலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் விரட்டியடிப்போம், புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தி.மு.க. இருக்கும். அப்போது நீட் ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட அவை தலைவர் நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், நூருல்ஹிதா, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், ஜெகதீசன், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், அண்ணாதுரை, டாக்டர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன் மீனாம்பாள், ராமலிங்கம், பிரபா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் சாரண ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் சாரணியர் கூட்டரங்கில் நடைபெற்றது
- முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் சாரணியர் கூட்டரங்கில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட சாரண முதன்மை ஆணையரும், முதன்மை கல்வி அலுவலருமான மணிவண்ணன் புத்தாக்க பயிற்சியை தொடங்கிவைத்தார்.
முகாம் தலைவராக மதுரை மேலூர் மாவட்ட சாரண உதவி ஆணையர் மகபூப் கான், உதவி பயிற்சியாளராக முசிறி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் செயல்பட்டனர். இந்த பயிற்சி முகாமில் சாரண இயக்க வரலாறு, அணி பயிற்சி, சாரண சட்டம், இறை வணக்கம் பாடல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதலுதவி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 124 சாரண ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட சாரண செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முடிவில் வேப்பூர் மாவட்ட சாரண செயலாளர் தனபால் நன்றி கூறினார்.
- குன்னம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- திருமாவளவன் பிளக்ஸ் போர்டு கிழிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிறுத்தம் அருகே அனுமதியின்றி அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் கட்சியின் பொன்விழா மாநாட்டை வாழ்த்தி அக்கட்சியினர் சார்பில் பதாகையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளையொட்டி அவரை வாழ்த்தி அக்கட்சியினர் சார்பில் பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த 2 பதாகைகளும் நேற்று முன்தினம் மாலை கிழிக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பதாகையை கிழித்தவரை குன்னம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் குன்னம் பஸ் நிறுத்தம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பதாகையை கிழித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிட்டனர். இதனால் 1¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை போலீசார் சீர் செய்தனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பதாகையை கிழித்ததாக குன்னம் மெயின் ரோட்டை சேர்ந்த மகாராஜனின் மகன் நீதிபதியை (வயது 33) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற வீரர்களுக்கு தழுதாழை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராஜேஷ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் நடராஜன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வி.களத்தூர் அரசுப்பள்ளி 2-ம் இடத்தையும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பூலாம்பாடி அரசு பள்ளி முதலிடத்தையும், வி.களத்தூர் பள்ளி 2-ம் இடத்தையும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பூலாம்பாடி பள்ளி முதலிடத்தையும், வெங்கலம் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தழுதாழை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராஜேஷ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான மகளிர் கபடி போட்டி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.






