என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சுமங்கலி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். மது குடித்ததினால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாததால், மனமுடைந்த சக்திவேல் நேற்று அதிகாலை வீட்டில் தான் அணிந்திருந்த வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் தேர்வை 126 பேர் எழுதினர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. தனித்தேர்வர்களாக பிளஸ்-2 துணை தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தவர்களும், தங்களுக்கும் தேர்வினை ரத்து செய்து தேர்ச்சி மதிப்பெண் வழங்குமாறும், இல்லையென்றால் கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வினை நடத்துமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    ஆனால் தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. மாறாக கொரோனா தொற்று குறைந்ததால் ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தனித்தேர்வர்களுக்கு பிளஸ்-2 தேர்வை நடத்த அரசு உத்தரவிட்டது.

    ஏற்கனவே பிளஸ்-2 துணைத்தேர்வினை எழுத தனித்தேர்வர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் கல்வி மாவட்டத்தில் 129 பேரும், வேப்பூர் கல்வி மாவட்டத்தில் 27 பேரும் என மொத்தம் 156 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை எழுத தனித்தேர்வர்கள் மொத்தம் 200 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு நேற்று முதல் தொடங்கியது.

    நேற்று தமிழ் தேர்வு நடந்தது. இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரியலூர் மான்போர்ட்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 75 பேரில், 57 பேர் தேர்வு எழுதினர். 18 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 100 பேரில், 69 பேர் தேர்வு எழுதினர். 31 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் ஆகியோர் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி ராமன் பார்வையிட்டார். ஆங்கில தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
    பெரம்பலூரில் இலங்கை அகதியை சரமாரியாக வெட்டிய பிரபல ரவுடி உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை தர்ஷினி நகரை சேர்ந்தவர் சுதர்சன் என்ற சூரி கண்ணன் (வயது 40). இலங்கை அகதியான இவர் பெரம்பலூர் பாலக்கரையில் தள்ளுவண்டியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். சுதர்சன் நேற்று மாலையில் வீட்டில் இருந்து பெரம்பலூருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அப்போது அவருக்கு தெரிந்த நண்பரான வினோத் என்பவர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். பெரம்பலூர் உழவர் சந்தையை அடுத்து சென்றபோது, திடீரென்று வினோத் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சுதர்சனிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய வினோத் அங்கு மறைந்து இருந்த கும்பலுடன் சேர்ந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக சுதர்சனை வெட்டி சாய்த்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதர்சனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சுதர்சன் மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், வினோத் என்பவர் ரவுடி என்பதும் தெரியவந்தது. சுதர்சனும், வினோத்தும் ஒரே கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கோஷ்டிக்குள் உள்ள சிலரை சுதர்சன் போலீசாரிடம் காட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு அரங்கேறி வந்த சூழ்நிலையில் தற்போது ரவுடியிசம் தலை தூக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பாடாலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரது உறவினர்கள் அவரை தேடினர். அப்போது கிணற்றுக்குள் ராமசாமி இறந்து கிடந்ததை அறிந்த உறவினர்கள், இது பற்றி பாடாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து ராமசாமி உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வேப்பந்தட்டை அருகே முயல் வேட்டையாடிய 15 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர்-சிறுநிலா இடையே வனப்பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி குகனேசன் உத்தரவின்பேரில், வேப்பந்தட்டை வனசரக அலுவலர் மாதேஸ்வரன், வனவர்கள் பாண்டியன், சுப்பிரமணியன் மற்றும் வனக் காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது அப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 15 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட 3 முயல்கள், வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முயல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா கல்லை கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் (வயது 60), செல்வம் (30), சரவணன் (24), கண்ணுசாமி (38), மோகன்ராஜ் (21) உள்பட 15 பேர் என்பது தெரிய வந்தது.

    பின்னர் வேப்பந்தட்டை வனத்துறையினர் 15 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு பண்டிகை முடிந்த பிறகு ஊர் ஊராகச் சென்று முயல் வேட்டையாடி கிடைக்கும் முயல்களை தங்களது கிராமத்திற்கு கொண்டு சென்று சாமிக்கு வைத்து படைத்து, விழா கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு விழா கொண்டாட வந்தவர்கள் வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பெரம்பலூர் அருகே கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த செட்டிகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாஷா தலைமையில் போலீஸ் குழுவினர் செட்டிகுளத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் அப்பகுதியில் தெற்கு தெருவில் உள்ள முருகானந்தம் (வயது 31) என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகானந்தம் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று வழிபாடு செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிடலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

    தற்போது ஆடி மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் வருகிற 8-ந்தேதி ஆடி அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதற்கு ஆறு மற்றும் நீர்நிலைகளில் அதிகளவில் கூடுவார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் வருகிற 8-ந் தேதி வரை தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், கச்சேரி பிள்ளையார் கோவில், பாலமுருகன் கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை அபராதரட்சகர் கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், எசனை வேணுகோபால சுவாமி கோவில், காட்டு மாரியம்மன் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிகளின்படி பூஜைகள் செய்தனர்.

    ஆனால் அந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று வழிபாடு செய்தனர். இதில் சில கோவில்களில் வெளியே கதவுகள் மூடப்பட்டு, உள்ளே பூஜைகள் நடத்தப்பட்டது.

    நேற்று ஆடி கிருத்திகை என்பதால் பெரம்பலூர் பாலமுருகன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். ஆனால் அவர்கள் கோவிலின் உள்ளே சென்று சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது.

    பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டும், நேற்று திங்கட்கிழமை என்பதால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் கோவிலின் உள்ளே சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கோவிலின் முன்பு சமூக இடைவெளி இல்லாமல் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
    போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்க முயன்ற அண்ணன், பெண் போலீஸ் ஏட்டு காயமடைந்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அகிலா(வயது 27). இவரது கணவர் பாரதி. இந்த தம்பதிக்கு பரத்குமார் (9) என்ற மகனும், யாழினி (5) என்ற மகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது தாயார் ராணி வீட்டில் அகிலா வசித்து வருகிறார்.

    இந்நிலையில் வயலூரில் வசிக்கும் அமரதீபன்(29) என்பவருடன், அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் சென்றனர். இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மே மாதம் திருப்பூரில் தங்கியிருந்த அமரதீபன், அகிலா ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் சமரசம் செய்து 2 பேரையும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமரதீபனிடம் உள்ள 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பெற்றுத்தருமாறு போலீசில் ராணி புகார் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக நேற்று அமரதீபன் மற்றும் அகிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அமரதீபனுக்கு ஆதரவாக போலீசார் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அகிலா, போலீஸ் நிலையம் முன் ஸ்கூட்டரில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. போலீசார் அகிலாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகிலாவின் உடலில் தீப்பற்றி எரிந்தபோது, அவரை மீட்க முயன்ற அகிலாவின் அண்ணன் அசோக்ராஜ், பெண் ஏட்டு ரீத்தல் ஆகியோரின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சங்குப்பேட்டையில் கஞ்சா விற்ற, அதே பகுதி 13-வது வார்டு அழகிரி தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் செல்வகுமாரை (வயது 31) போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. ஆனால், இதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டம் நகர அ.தி.மு.க. சார்பில், மேற்கு வானொலி திடலில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தனது வீட்டின் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். முன்னாள் எம்.பி.யும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான மருதராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பூவை.செழியன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வகுமார் தலைமையில் கவுல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நகரத்தில் கிளை வார்டுகளிலும், குரும்பலூர் பேரூராட்சியிலும், ஊராட்சி, கிராமப்புற பகுதிகளிலும் தி.மு.க. வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பெருமத்தூரில், வேப்பூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய இணைச் செயலாளர் அமுதா கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் பகுதியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அடைக்கம்பட்டி கிராமத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ந் தேதி அன்று காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கனகராஜ்(வயது 27). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது வி.களத்தூர் ஏரிக்கு அருகில் உள்ள கிணற்றின் மேல்பகுதியில் கனகராஜ் அணிந்திருந்த காலணி மற்றும் உடைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவருடைய குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி, கனகராஜை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தண்ணீருக்குள் இருந்து கனகராஜை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். அவருடைய உடலை வி.களத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×