என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூரில் இலங்கை அகதிக்கு சரமாரி வெட்டு - போலீசார் விசாரணை

    பெரம்பலூரில் இலங்கை அகதியை சரமாரியாக வெட்டிய பிரபல ரவுடி உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை தர்ஷினி நகரை சேர்ந்தவர் சுதர்சன் என்ற சூரி கண்ணன் (வயது 40). இலங்கை அகதியான இவர் பெரம்பலூர் பாலக்கரையில் தள்ளுவண்டியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். சுதர்சன் நேற்று மாலையில் வீட்டில் இருந்து பெரம்பலூருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அப்போது அவருக்கு தெரிந்த நண்பரான வினோத் என்பவர் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். பெரம்பலூர் உழவர் சந்தையை அடுத்து சென்றபோது, திடீரென்று வினோத் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சுதர்சனிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய வினோத் அங்கு மறைந்து இருந்த கும்பலுடன் சேர்ந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக சுதர்சனை வெட்டி சாய்த்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதர்சனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சுதர்சன் மீது ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், வினோத் என்பவர் ரவுடி என்பதும் தெரியவந்தது. சுதர்சனும், வினோத்தும் ஒரே கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கோஷ்டிக்குள் உள்ள சிலரை சுதர்சன் போலீசாரிடம் காட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு அரங்கேறி வந்த சூழ்நிலையில் தற்போது ரவுடியிசம் தலை தூக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×