என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
    • சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரங்கில் நடைபெறவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம்.

    மேலும், 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கிகடன் வழங்க ஆவன செய்யப்படும். வேலை வாய்ப்பு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய அசல் சான்றுகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    பெரம்பலூர்:

    பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டன.

    இதில் பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். இப் பள்ளிமாணவிகள் ஜி.கோமதி 600-க்கு 586 மதிப்பெண்களும், லாராஸ்ரீ 569 மதிப்பெண்களும், தர்ஷினி 567 மதிப் பெண்க–ளும் பெற்று சாதனை படைத்தனர்.

    திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளான கேசவராஜ் 600-க்கு 584 மதிப்பெண்களும் கவிப்பிரியா 573 மதிப்பெ–ண்களும், உதயபிரகாஷ் 571 மதிப்பெண்களும் பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரவிந்தன் 600-க்கு 583 மதிப் பெண்களும், பிரவீன் 568 மதிப்பெண்களும், கார்த்திகா 559 மதிப்பெண்களும் பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யாழினி 500-க்கு 483 மதிப்பெண்களும், கனிஷா பாக்கியலட்சுமி 479 மதிப்பெண்களும், தர்ஷினி 478 மதிப்பெண்களும் பெற்றனர். திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு–லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ஆதர்ஷனா 500-க்கு 488 மதிப்பெண்களும், லட்சனா 485 மதிப்பெண்களும், சுபஸ்ரீ 469 மதிப்பெண்களும் பெற்றனர்.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான புவனா 500-க்கு 466 மதிப் பெண்களும், நிஷா 463 மதிப்பெண்களும், பிருந்தா 460 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து, சாதனை படைத்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

    • பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா பெற்றது.
    • மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    பெரம்பலூர்:

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்கியது.

    இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடந்தது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது.

    பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா ரெங்கராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனுப்பிரியா செந்திலக், அனுசுயா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராமம் பள்ளி கூடதெருவை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் (வயது60). இவரது மனைவி அஞ்சலை. அஞ்சாலை வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

    இது குறித்து அவரது கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.

    இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடராஜன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

    இந்த கொலை வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் தொடரப்பட்டு நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார்.

    நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளி நடராஜனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பெண் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார்.
    • கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 60). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக அந்தூரில் இருந்து குன்னம் நோக்கி நடந்து சென்றார்.

    அப்போது குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசனின் மனைவி உஷா(26) என்பவர் குன்னம் தாலுகா அலுவலகம் செல்வதற்காக மொபட்டில் வந்தார். முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராவிதமாக மொபட் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் அண்ணாதுரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அதேபோல் உஷாவும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பின்னர் அண்ணாதுரையை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அண்ணாதுரையின் மனைவி சின்னம்மாள் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • லெப்பைக்குடிகாடு பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    • கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், கீழக்குடிகாடு தடுப்பணை பகுதியில் வெள்ளாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ெலப்பைக்குடிகாடு, பென்னகோணம், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் குடிநீர், பாசனத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றில் வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான ஆழ்துளை கிணறு அமைப்பதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, ெலப்பைக்குடிகாடு பேரூராட்சியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி அந்த பேரூராட்சி பகுதியில் உள்ள மருந்து கடைகள் மற்றும் பால் வினியோக கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தேவையான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    நீர்வழித்தடங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பேரளி கிராமத்தில் ஊர் ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள 2 ஏரிகளில் ஊருக்கு அருகில் உள்ளதால் இந்த ஏரிக்கு ஊர் ஏரி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை சமைப்பதற்கு இந்த ஏரியின் தண்ணீரைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ஏரியின் நடுவே உள்ள குடிநீர் கிணற்றுக்கு நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

    ஊர் ஏரிக்கான நீர்வழித்தடங்கள் முறையாக சீரமைக்கப்படாததால் தேவையான அளவிற்கு ஏரியில் நீர் நிரம்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு மண்வெட்டியை பயன்படுத்தி சிறுவாய்க்காலை சீரமைக்க ெதாடங்கி, தொடர்ந்து ஊர் ஏரி மற்றும் கல்லேரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அப்பகுதி இளைஞர்கள் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    அப்பகுதி இளைஞர்களின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு அலுவலர்களின் உதவியோடு ஏற்படுத்தப்பட்ட நடுப்பாதை வாய்க்காலை இளைஞர்கள் சீரமைத்து தொடர்ந்து பராமரித்து வந்ததன் பலனாகவும், மக்களும் வாய்க்காலில் ஆங்காங்கே பாலங்கள் அமைத்ததாலும் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஊர் ஏரி மற்றும் கல்லேரி நிரம்பி வழிந்தோடியது.

    இளைஞர்களின் விடாமுயற்சி மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் தற்போது பேரளி ஊர் ஏரிக்கரையில் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் உயரும்போது தெற்கு பகுதிக்கரையில் உள்ள துவாரம் வழியே நீர் வெளியேறுவதால் நீர்மட்டம் குறைகிறது. மேலும் ஏரிகள் நிரம்பிய பிறகு, முக்கிய வரத்து வாய்க்காலான நடுப்பாதை வாய்க்காலில் உள்ள குட்டையை உடைத்து ஓடைக்கு தண்ணீரை திருப்பும் நிலையும் உள்ளது.

    ஊர் ஏரிக்கு நீர் வரும் மற்றொரு வாய்க்காலின் குறுக்கே செல்லும் பேரளி- மருவத்தூர் சாலையில் உள்ள கற்பாலத்தை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். நடுப்பாதை வாய்க்காலில் சிமெண்டு சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இணையதளங்கள் வாயிலாகவும், கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாகவும் பலமுறை தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கி இளைஞர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • கிணற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் உயிரிழந்தார்.
    • கிணற்றில் பிணமாக மிதந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த ஜவகர்(வயது 34) குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கிணறு உள்ள பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் ஜவகர் பிணமாக மிதந்தார்.

    இதுபற்றி அவர்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் கிணற்றில் இறங்கி ஜவகரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெறும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள வேலை நாடுனர்களுக்கு பயன்படும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந் தேதி அன்று மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் இந்த முகாமில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்த தகவல்களை பொதுமக்களிடையே விளக்கிக் கூறும் வகையில் எசனை ஊராட்சியில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், 8-ம் வகுப்பு படித்தவர் முதல் பட்ட மேல்படிப்பு படித்தவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மற்றும் பஸ் நிலையம், தியேட்டர்கள், கல்லூரிகளில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பெண்களிடம் 4 பவுன் நகை-செல்போன் திருட்டுபோயின
    • காரில் தூங்கியபோது நடந்தது

    பெரம்பலூர்:

    சென்னை சோழபுரம் குமார் நகர் ஸ்ரீதர் அவன்யூவை சேர்ந்தவர் பிரதீப்குமார்(வயது 52). இவர் சென்னையில் இருந்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர் குடும்பத்தினருடன் மதுரையில் நடந்த காதணி விழாவிற்காக காரில் சென்றுவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர்.

    நேற்று அதிகாலை ஓய்வு எடுத்துவிட்டு செல்வதற்காக அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரம் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, காருக்குள் தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் காரில் தூங்கிய பெண்களிடம் இருந்து 4 பவுன் நகை, செல்போன் இருந்த கைப்பையை ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக பிரதீப்குமார் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வெளிநாட்டில் இறந்த டிரைவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி தாய் மனு அளித்துள்ளார்.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே செஞ்சேரி 2-வது வார்டை சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி கனகமணி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில், எனது மகன் பார்த்தீபன் (வயது 27) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி அங்கு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    எனவே எனது மகனின் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வீட்டைவிட்டு வெளியே சென்றவர்

    பெரம்பலூர்:

    மேலப்பழுவூர் கீழையர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அன்பரசன்(வயது 15). இவர் கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இதையடுத்து அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குளத்தூரில் உள்ள மாமா வீட்டிற்கு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அன்பரசன் 3 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அன்பரசன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.

    அப்போது கொளக்காநத்தம் ஓடைக்கரையில் உள்ள புங்க மரத்தில் துணியால் தூக்குப்போட்டு அன்பரசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து அன்பரசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×