என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது
    • 136 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாவட்ட அளவிலான கவுன்சிலர்கள் கூட்டம் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழ வேண்டும். அவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும், வளமாகவும் அமைய கவுன்சிலர் பெருமக்கள் அரும் பாடுபட வேண்டும். அபாயகரமான கொரோனா காலத்தில் மாணவர்களிடையே நிறைய பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருக்கின்றன. அவர்களை நல்வழிப்படுத்தி, திருத்தி, செம்மைப்படுத்த வேண்டியது கவுன்சிலர்களின் தலையாய கடமையாகும் என்றார்.

    மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத்தின் ரெட் கிராஸ் செயல்பாடுகளை பள்ளியிலும் சமுதாயத்திலும் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து அமைப்பில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்று கொண்டனர்.

    இதில் மாவட்ட இணை கன்வீனர்கள் கிருஷ்ணராஜ், ரகுநாதன், துரை, பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் ஜெயக்குமார், செல்வகுமார், காசிராஜா, செல்வசிகாமணி, ஆனந்தகுமார், தேவேந்திரன், பூவேந்தரசு, நல்லத்தம்பி மற்றும் 136 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜேஆர்சி பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல் நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • ரங்கோலி கோலம் போட்டனர்

    பெரம்பலூர்:

    சென்னையில் நடைபெற உள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ஜூலியஸ் தேயொடர், மாநில பல பயிற்றுநர் செந்தில்முருகன், வட்டார இயக்க மேலாளர் ராஜேஸ்வரி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர்-துறையூர் சாலை விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது

    பெரம்பலூர்:

    சென்னை-கன்னியாகுமரி தொழில் தடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 30.057 கி.மீ. தொலைவு கொண்ட இச்சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.150 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள உரிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடப்பட்டு, 27.1.2021 அன்று ரூ.143.83 கோடிக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது. அப்போது, பணியை உடனே தொடங்கி, 2 ஆண்டுகளுக்குள் முடித்து, நெடுஞ்சாலைத்துைறயிடம் ஒப்படைக்க வேண்டும் என டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து டெண்டர் இறுதி செய்யப்பட்ட இரண்டே வாரங்களில், சாலை அமைக்கும் பணி தொடங்கின. இதன்படி 9.2.2023 அன்று சாலை விரிவாக்கப் பணிகளை ஒப்பந்ததாரர் முடித்து, நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, முழுவீச்சில் நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இது குறுத்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தபோது, 7 மீட்டர் அகலம் கொண்ட பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை 10 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தம், கல்வி நிலையங்கள், அணுகு சாலைகள் சேரும் இடங்கள் ஆகிய பகுதிகளில், அந்தந்தப்பகுதியின் தேவைக்கேற்ப சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சாலையை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் அநாவசியமாக சாலைைய பயன்படுத்துவதை தடுக்கும் விதமாகவும், விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் விதமாகவும், நடைபாதையில் மூடப்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் இரும்பு கிரில்கள் அமைக்கப்படுகின்றன.

    இந்த சாலை அமையும் வழித்தடத்தில் ஒரே ஒரு இடத்தில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அந்த இடத்தில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை பணிகளை அதிகாரிகள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்கள், மின் விளக்குகள், இரும்பு கிரில்கள் அமைத்தல், தார் சாலை அமைத்தல் போன்ற இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதனால் இந்த சாலை திட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே, நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    • பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது

    பெரம்பலூா் :

    பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும், பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே. நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (21-ந் தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவத்துள்ளார்.

    • ரத்ததான முகாம் நடைபெற்றது
    • 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் கவுள்பாளையம் நகர் புற வாழ்விடவாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ராஜேஷ், கவுல்பாளையம் ஒற்றுமையே பலம் நலசங்க தலைவர் உத்திரகுமார், செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் முகாமினை தொடங்கிவைத்தார்.

    பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா தலைமையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தொகை, சங்கத்திற்கு ஸ்பீக்கர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ரத்தம் கொடையாளர்கள மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 200 பேருக்கும், சாலையோர பாதசாரிகள் 50 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    இதில் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன், லயன் தைரியம், லயன்ஸ்கிளப் செயலாளர் தமிழ்மாறன், இணை பொருளாளர் செல்வராஜ், செந்தில், உதிரம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1928 மாணவர்களுக்கு ரூ.1.27 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் உதவிவழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித் தொகை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியடைந்த ஆயிரத்து 928 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் 2022 கடந்த மார்ச் மாதம் உதவித் தொகை க்கான தேர்வு பெரம்பலூர் , அரியலூர் ,கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 392 பள்ளிகளிலிருந்து 28 ஆயிரத்து 431 மாணவ,மாணவிகள் தேர்வெழுதினர்.

    இந்த தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 234 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 618 மாணவர்களும், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 757 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 241 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியில் 53 மாணவர்களும், தனலட்சுமி சீனிவாசன் உடற் கல்வியியல் கல்லூரியில் 25 மாணவர்களும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகள் கல்வி பயிலசேர்ந்துள்ளனர்.

    கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 30 ஆயிரமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, உடற்கல்வியியல் , பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும் என மொத்தம் ஆயிரத்து 928 மாணவ,மாணவிகளுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 92 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் கல்விநிறுவன முதல்வர்கள் இளங்கோவன், உமாதேவிபொங்கியா, வெற்றிவேலன், சுகுமார், சாந்தகுமாரி, பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கை.களத்தூர் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கலெக்டரிடம் மனு
    • துணைத் தலைவர் உள்ள பட 6 பேர் கலெக்டரிடம் மனு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் ஊராட்சி தலைவர் சுமதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இதுகுறித்து கை.களத்தூர் ஊராட்சி துணை தலைவர் செல்வக்குமார் தலைமையில் 6 வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதில் கை.களத்தூர் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி தலைவராக முருகேசன் மனைவி சுமதி என்பவர் உள்ளார். 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காந்தி நகர், பாதாங்கி ஆகிய பகுதிகளில் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் எங்களது பகுதி மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க தலைவரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.

    குடிநீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடந்த 25ம்தேதி சாலைமறியல் நடந்தது. மக்களின் பிரச்சனையை சரி செய்ய கூறினால் துணை தலைவர் மற்றும் எங்களது பகுதியை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களை தலைவரின் கணவர் முருகேசன் தகாத வார்த்தையால் திட்டி அவமதிப்பு செய்கிறார். மேலும் பல்வேறு முறைகேடுகளில் தலைவர் ஈடுப்பட்டுள்ளார். ஆகையால் ஊராட்சி மக்கள் நலனில் அக்கரை இல்லாத ஊராட்சி தலைவர் சுமதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வடடம் பிலிமிசை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி 11-ந் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். பின்னர், அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேதர் மலைியில் நிலையை அடைந்தது.

    • கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா மலையப்ப நகரை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை, இரவு நேரத்தில் வெளியேறும் கரும்புகையினால், அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்தவுடன் நிலக்கரி மூலம் அனைத்து எந்திரங்களையும் இயக்குவதற்கு ஆலை தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆலையை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் பின்புறம் உள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களும், ராமலிங்க நகரில் வசித்து வரும் கலைக்கூத்தாடிகள் குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தி குறைகளை கேட்டு வரும் முதல்-அமைச்சர், ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அந்த ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நாளை (புதன்கிழமை) ஆலையில் நிலக்கரி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்க நடைபெற்ற வரும் விழா ஏற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த டயர் தொழிற்சாலையில் எப்போதுமே நிலக்கரியை பயன்படுத்தக்கூடாது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்றதை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    • கீழுமத்தூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பெரம்பலூர்

    குன்னம் தாலுகா கீழுமத்தூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், அறுவடை செய்த நெல்மணிகளை சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நன்னை கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஆன்லைனில் பதிவு செய்து 50 விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கிறோம். இதேபோல் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 200 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டனர். இதனால் நெல்மணிகளை விற்பனை செய்ய காலதாமதம் ஆவதால் வங்கிகளில் விவசாயத்துக்காக வாங்கியிருந்த கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் பதிவு செய்யப்பட்ட எங்களது நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • மைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தப்பட்டன.
    • இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை

    பெரம்பலூர்:

    நாம் தமிழர் கட்சியின் செட்டிகுளம் கிளை சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சுற்றியுள்ள குளங்களில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, கோவில்பாளையத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் கொடுத்த மனுவில், கடந்த 2013-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அனுமதிக்கப்பட்டதில், இன்னும் 109 பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை. துங்கபுரம் (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்க முறையான நடவடிக்கை எடுக்காததால், அவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். விடுபட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்று கூறியிருந்தனர்.

    ×