என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் கூட்டம்
- ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது
- 136 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாவட்ட அளவிலான கவுன்சிலர்கள் கூட்டம் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழ வேண்டும். அவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும், வளமாகவும் அமைய கவுன்சிலர் பெருமக்கள் அரும் பாடுபட வேண்டும். அபாயகரமான கொரோனா காலத்தில் மாணவர்களிடையே நிறைய பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருக்கின்றன. அவர்களை நல்வழிப்படுத்தி, திருத்தி, செம்மைப்படுத்த வேண்டியது கவுன்சிலர்களின் தலையாய கடமையாகும் என்றார்.
மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத்தின் ரெட் கிராஸ் செயல்பாடுகளை பள்ளியிலும் சமுதாயத்திலும் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து அமைப்பில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்று கொண்டனர்.
இதில் மாவட்ட இணை கன்வீனர்கள் கிருஷ்ணராஜ், ரகுநாதன், துரை, பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் ஜெயக்குமார், செல்வகுமார், காசிராஜா, செல்வசிகாமணி, ஆனந்தகுமார், தேவேந்திரன், பூவேந்தரசு, நல்லத்தம்பி மற்றும் 136 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஜேஆர்சி பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல் நன்றி கூறினார்.






