என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடி வாரண்ட் பிரப்பிக்கப்பட்டது
    • 3முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகவில்லை.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்லதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் பாஸ்கரன் (39). பெரியசாமி மகன் அருண்குமார். இதில் செல்லதுரைக்கும், பாஸ்கரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிந்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம்தேதி ஜாமீனில் வெளியே வந்த செல்லதுரையை அவரது வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த போது பாஸ்கரன், அருண்குமார் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் பாடுகாயமடைந்த செல்லதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்லதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டார்.

    இதுசம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்லதுரை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக செல்லதுரை வழக்கை பதிவு செய்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா சாட்சியமளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பட்டும் கோர்ட்டுக்கு வரவில்லை.

    இந்நிலையில் நேற்று (22ம்தேதி) வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராத அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருமான கலாவிற்கு பிணையில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும், வரும் ஆகஸ்ட் 1ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி உத்தரவிட்டார்.

    • 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடந்தது
    • 188 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

    பெரம்பலூர்:

    44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு வடிவிலான 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர்தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகளின் கைகளில் செஸ் போர்டு, செஸ் போர்டில் உள்ள நாணயங்கள் போன்ற வடிவிலான மெஹந்தி வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போனில் தொடர்பு கொண்டு வற்புறுத்தியுள்ளார்.

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மகன் ராஜேஷ். இவர் பெரம்பலூரில் தனியார் பள்ளியில் 12ம்வகுப்பு படிக்கும் மாணவியை போனில் தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க வேண்டும் என ஏற்கனவே வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி மாணவியை போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வற்புறுத்தியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளிக்கு சென்றபோது அங்கு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தனது மகளை சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குபதிந்து மாணவியை காதலிக்க கூறி வற்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் சுவாமி வீதி உலா நடைபெற்றது
    • ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் சுவாமி திருவீதி உலா நிகழ்வு வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதல் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக செல்லியம்மன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.அதனையடுத்து மாரியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. கிராம பொதுமக்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை முன்னிட்டு மங்கள இசை மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • வட்டார மகளிர் திட்ட மேலாளர் ஏற்பாடு செய்திருந்தார் .

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூரில் உள்ள ஓலைப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக சதுரங்க அமைப்பில் கோலமிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை வேப்பூர் வட்டார மகளிர் திட்ட மேலாளர் அமுதா ஏற்பாடு செய்திருந்தார் .

    வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், ராதிகா, மகளிர் திட்டம் உதவி அலுவலர் மகேசன் மற்றும் வட்ட வழங்க அலுவலர் சங்கர், வட்டார இயக்க மேலாளர் அமுதா, வட்டார ஒழுங்கங்கிணைப்பாளர்கள் புஷ்பா, மகாலட்சுமி, சரவணன், லதா, மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தபோது ஏற்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் உள்ள பரியேறும் குட்டையில் நேற்று காலை முதியவரின் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், குட்டையில் பிணமாக மிதந்தவர் அத்தியூர் கக்கன்ஜி நகரை சேர்ந்த முத்து கருப்பன் (வயது 85) என்பது தெரிய வந்தது. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலை குளிப்பதற்காக பரியேறும் குட்டைக்கு சென்றார். அப்போது குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையில், பெரம்பலூர் சித்த மருத்துவ அலுவலர் விஜயன் மற்றும் சித்த மருத்துவர்கள் கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொது உடல் பரிசோதனை மற்றும் அனைத்து தோல் நோய்கள், ஆஸ்துமா, அலர்ஜி, மூட்டு வலி, கழுத்து வலி, சிறுநீரக கல் உடைப்பு, பித்தப்பை கல்லடைப்பு, வயிற்றுப்புண், சர்க்கரை நோய், சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு நோய், கருப்பை கட்டி மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்தனர். முன்னதாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் இயற்கை மூலிகை குறித்து கண்காட்சியாக காட்சிப்படு த்தப்பட்டிருந்தது. இதே போல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவு பிரதி வாரம் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது."

    • வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடக்கிறது.
    • மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆவதால் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    பெம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமம் அரியலூர்- பெரம்பலூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் சசிகுமார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 23). மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆவதால் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்ற சசிகுமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விடியற்காலை சசிகுமார் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணி தமிழ்ச்செல்வி வெளியே வந்து பார்த்தபோது சசிகுமார் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, அவர் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து 5 பவுன் செயின், 1 பவுன் தோடு, 1 ஜோடி கொலுசு மற்றும் ரூ.2,500 ஆகியவை திருடு போய் இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது

    பெரம்பலூர்:

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும். இந்த சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடரும் மாணவர்களின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்."

    • மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணவர் தனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி வர மறுத்ததால், நீ வரவில்லையென்றால் பெற்ற மகளை தொடுவேன் என்று கூறி அவர் தூங்கி கொண்டிருந்த 16 வயதுடைய இளைய மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் தாம்பத்ய உறவுக்கு மனைவி சென்று விட்டாராம். மேலும் அந்த கணவர் தனது மனைவியை எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தாராம். இது தொடர்பாக மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாதுகாப்பு நலன் கருதி அச்சிறுமியை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • நகராட்சி ஆணையர்(பொறுப்பு) அறிவிப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், டோல்கேட் அருகே தாளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து காவிரி-கொள்ளிடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் உள்ள பிரதான நீர் வழங்கும் 3 குடிநீர் கிணறுகளும் நீரில் மூழ்கி உள்ளன. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு வழங்க வேண்டிய நீர் சரியான அளவில் வந்து சேரவில்லை. இதனால் நகராட்சி பகுதிகளுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்
    • ஈரத்துண்டை கம்பியில் காய போட முயன்றார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை அண்ணா நகர் பழைய காலனியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 65). விவசாயி கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் அதன் பின்புறம் உள்ள இடத்தில் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல் பச்சையம்மாள் விவசாய வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் கை, கால்களை கழுவிய பின்னர் துண்டால் துடைத்துவிட்டு, ஈரத்துண்டை தனது கொட்டகைக்கு வெளியே இருந்த கம்பியில் காய போட முயன்றார். அப்போது அவர் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததால் பச்சையம்மாள் சத்தம் போட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த காசிநாதனின் மனைவி செல்வி(48) ஓடி வந்து பச்சையம்மாளை பிடித்து இழுத்து, காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வி மீதும் மின்சாரம் பாயந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது."

    ×