என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் ஆலையில் கரும்புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இவர் கடந்த வாரமும் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது."

    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர்

    பெரம்பலூர்:

    ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனுவில் கொடுத்தனர். அதில், தங்கள் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் தான் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை தரப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு அந்த திட்டத்தில் உள்ள நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்"

    • மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு மாலையணிந்து, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

    • பெரம்பலூரில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • ஆர்வத்துடன் வந்து செலுத்தி கொண்டனர்

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 32-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 15,187 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்களிடம் இருந்து 2022-ம் ஆண்டிற்கான சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக், உத்தம் ஜீவன் ரக்சா பதக், ஜீவன் ரக்சா பதக் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத்தில் நீரில் மூழ்கியவர்களை மீட்டவர்கள், தீ விபத்து, மின் கசிவு விபத்துகள், மண் சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்துகள் போன்ற மீட்பு பணிகளில் உயிர்களை காப்பாற்றிய சாதனையாளர்களிடம் இருந்து வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 7502034646, 8838872443 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    • மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதில் வேண்டுதல் நிறைவேறிய 250 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சள் ஆடை உடுத்தி, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாக விரதமிருந்து மருவத்தூர் அம்மன் குளத்தில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பேரூராட்சி துணைதலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியில் துணைதலைவராக இருப்பவர்செல்வலட்சுமி. தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், பேரூர் கழக தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் துணைதலைவர் செல்வலட்சுமி, தான் வெற்றிபெற்ற ஏழாவது வார்டுக்குட்பட்ட அரசடிக்காடு பகுதியில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பேரூராட்சியில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் உள்ளாட்சி பணிகளை நிறைவேற்றுவதில் துணைத்தலைவர்செ ல்வ லெட்சுமி ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டிக்கும் விதமாக அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஏழாவது வார்டு பொதுமக்களுடன் சென்று செல்வலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாலா தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
    • உயர் மின்னழுத்த கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பாலா (வயது 23). இவர் தனியார் நிறுவன ஓட்டல் பராமரிப்பு பணியில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை பாலா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது உயர் மின்னழுத்த கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து பாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் ஒரு வாலிபர், மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்
    • அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று மதியம் ஒரு வாலிபர், மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் மில்லத் நகர், அல்கோசர் தெருவை சேர்ந்த காதர்கானின் மகன் முகம்மது சலீம்(வயது 28) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    • தொடர் மின் தடையை கண்டித்தும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டியும் பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • புதிய மின்மாற்றி அமைத்து முறையாக மின் வினியோகம் செய்யப்படும். துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி கிராமத்தில் தொடர் மின் தடையை கண்டித்தும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டியும் பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், விசுவக்குடி கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சில சமயங்களில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்படுகிறது. இதனால் விசுவக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    மேலும் விசுவக்குடியில் சாக்கடைகளை சுத்தம் செய்யாமல் இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்று வலியுறுத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் அரும்பாவூர் போலீசார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, புதிய மின்மாற்றி அமைத்து முறையாக மின் வினியோகம் செய்யப்படும். துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது.
    • பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த மிக மிக விசேஷமான தினமாகும். எல்லா மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், தை, கிருத்திகை மற்றும் ஆடிக் கிருத்திகை தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் தமிழ் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும். ஜோதிட அடிப்படையில், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது மேன்மையைத் தரும். கிருத்திகை பெண்களை போற்றும் வகையில், "கிருத்திகை" விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    இதன்படி பெரம்பலூர் பாலமுருகன் கோயில் ஆடி கிருத்திகையை யொட்டி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அர்ச்சகர் ரமேஷ் தலைமையிலான அய்யர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதே போல் செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ×