என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோத்தகிரியில் கூட்டுறவு சங்கத்தேதலில் அதிமுக கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பஸ்நிலையம் அருகே உள்ளது தலைமை கூட்டுறவு பண்டக சாலை. இங்கு கடந்த 6-ந் தேதி 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் 26 பேர் போட்டியிட்டனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு ஆதரவாளர்கள் ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து இந்த பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தல் முடிந்த பிறகு தலைவராக சாந்தி ராமு அணியை சேர்ந்த வடிவேல் வெற்றி பெற்றதாகவும், துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட புத்திசந்திரன் அணியை சேர்ந்த பார்த்திபன் என்பவரது மனு உரிய முறையில் சமர்பிக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டு, அவருடன் போட்டியிட்ட மாதன் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலரும், கூட்டுறவு சார் பதிவாளருமான மது அறிவித்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த பார்த்திபன் தேர்தல் அலுவலரிடம் எனது மனு எந்த காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் எனக்கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அவர் கையில் வைத்திருந்த வேட்புமனு படிவத்தை பிடுங்கி கிழித்து எறிந்தார்.

    இதைபார்த்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பார்த்திபனை தாக்கினர். உடனே அவரது ஆதரவாளர்களும் திருப்பி தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கட்சி நிர்வாகிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனை தொடர்ந்து குன்னூர் எம்.எல்.ஏ. ஆதரவுடன் போட்டியிட்ட வடிவேல் தலைவராகவும், துணைத்தலைவராக மாதன் ஆகியோர் தேர்தெடுக்கப் பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

    இதுகுறித்த அறிவிப்பு அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சமூக வலைதளங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக வரும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பீதியால் கேரளாவில் உள்ள பல சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்கள் எதுவும் மூடப்படவில்லை. சமூக வலைதளங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாக வரும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். வழக்கம் போல் இந்த ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் கோடை மலர் கண்காட்சி நடைபெறும் என்றார். 
    கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி அருகே உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    கேரளாவில் இருந்து வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

    மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. எனவே சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழி தீவனம் ஏற்றி வரும் லாரிகளை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். மேலும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    கொரோனா பீதி காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 61 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வெளிநாடு, வெளி மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

    தற்போது கோடை காலம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்க உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான மக்கள் வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:-

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் அனைத்திலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சுற்றுலா பயணிகளின் கைகள் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு என கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பந்தலூர் அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கம் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தேவாலா போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை சின்ன சேலத்தை சேர்ந்த பெரியசாமி(26) என்பவர் கடத்தி சென்றதும், திருச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெரியசாமி மாணவியை அழைத்து கொண்டு பந்தலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு வந்தார்.

    இதுபற்றி அறிந்த தேவாலா போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் மாணவிக்கு 17 வயது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த பெரியசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடை செய்யக்கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்டம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கால் டாக்சிகள் பேக்கேஜ் முறையில் ஓட்டுவதை தடை செய்யக்கோரியும் மாவட்டம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுலா நகரமான ஊட்டியில் ஓட்டுனர்கள் தங்களுக்கான வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்தினர்.

    வேலைநிறுத்தம் காரணமாக அந்த வாகனங்கள் பின்னோக்கி திருப்பி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் கோவர்தன் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரியில் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். இந்த நிலையில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கால் டாக்சிகள் பேக்கேஜ் என்ற முறையில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.

    வெளிஇடங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஊட்டியில் ஓட்டல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். அதனால் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு வாடகை கிடைப்பது இல்லை. தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனியார் அமைப்பினர் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட உள்ளனர்.

    இந்த வாகனங்களை இயக்க போக்குவரத்துத் துறையின் அனுமதி பெறவில்லை. எனவே, சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டி சேரிங்கிராசில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா வாகனத்தை உள்ளூர் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    வயநாட்டில் குரங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானதையடுத்து மேலும் 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கூடலூர்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு கண்ணனூர் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் கூடலூர்-கேரளா எல்லையில் உள்ள வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலும் தீவரமாக பரவி வருகிறது.

    ஏற்கனவே உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் பறவைக்காய்ச்சல், குரங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கர்நாடகாவில் பரவிய குரங்கு காய்ச்சல் படிபடியாக கேரளாவிலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு 2010-ம் ஆண்டு 2 பேர் பலியானார்கள். இதன் பிறகு தான் குரங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    கடந்த 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக 11 பேர் குரங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். தற்போது வயநாட்டில் 20-க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா காட்டிகுளம் நாரஞ்சாகுன்னு காலனியை சேர்ந்த ராஜி என்பவரது மனைவி மீனாட்சி (வயது 48). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. ஆனால் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணி மீனாட்சி சரியான சிகிச்சை பெறாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

    பின்னர் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மீனாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரங்கு காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கியதால் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    யானை கூட்டம் குட்டிகளுடன் ஹில்குரோவ் அருகே மலை ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதில்லை.

    இதனால் யானை உள்பட வனவிலங்குகள் உணவுக்காக சமவெளி பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.

    நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாகவே 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவைகள் அந்த பகுதியில் உள்ள வடுக தோட்டம், சிங்காரா, ஹில்குரோவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து உலா வருகின்றன.

    இந்த நிலையில் இந்த யானை கூட்டம் குட்டிகளுடன் ஹில்குரோவ் அருகே மலை ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக மலைரெயில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் வரும் சத்தம் கேட்டதும் யானைகள் ஆக்ரோ‌ஷமாக தண்டவாளத்தை கடந்தது. இதை பார்த்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியானார்கள். சுமார் 5 நிமிடம் தாமதத்துக்கு பிறகு மலைரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதில்லை.

    இதனால் அவை வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைகிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன.

    கோத்தகிரி அருகே முருகன் காலனி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி வன அலுவலர் பெரியசாமி தலைமையிலான வனத்துறையினர் கால்நடை டாக்டர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    பின்னர் சிறுத்தையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உடலை அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோத்தகிரி அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.

    அதன் பேரில் நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு இறந்து கிடந்தது 6 வயதுடைய ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
    கொரோனா வைரஸ் காரணமாக குளிர் பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஆண்டு தோறும் ஏப்ரல்- மே மாதத்தில் ஊட்டியில் கோடை சீசனையொட்டி கண்காட்சி நடைபெறும்.

    இதனை காண்பதற்காக வெளி மாவட்டங்களான சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பல வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக காரில் வந்து செல்கின்றனர்.

    இதனால் அந்த காலகட்டத்தில் ஊட்டியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும். இதன் காரணமாக வியாபாரிகள், ஓட்டல் வைத்திருப்பவர்கள், விடுதி வைத்திருப்பவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த கொரோனா வைரஸ் காரணமாக குளிர் பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது.

    இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு காரணமாக நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்ட மலை ரெயிலில் வெறும் 7 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வரத்து குறைவால் அதனை நம்பி வியாபாரம் செய்து வரும் வியாபரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    குன்னூரில் விதிமுறைகளை மீறிய 10 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    குன்னூர்:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் நகராட்சியில் சமீப காலமாக விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் வீடுகளுக்கு என அனுமதி பெற்றுவிட்டு, அதனை வணிக வளாகங்களாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக குன்னூர் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவற்றை காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் யாரும் கட்டிடங்களை காலி செய்யவில்லை. இதையடுத்து நேற்று குன்னூர் நகராட்சி கமி‌‌ஷனர் பாலு அறிவுரையின்பேரில் பெட்போர்டு பகுதியில் உள்ள விதிமுறைகளை மீறிய 10 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஊட்டி:

    சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏ.சி., மெக்கானிக் மதுசூதனன், (21) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    பின்னர் மீண்டும் சென்னை செல்ல நேற்று மாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே வந்தபோது அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றனர்.

    அப்போது எதிரே கார் வந்ததால், நிலைதடுமாறி சறுக்கி சாலையில் விழுந்தனர். இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்த போதும், விஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காயமடைந்த மதுசூதனன், குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×