என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டியில் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு இருக்கின்றன. வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. எனினும் விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. ஆனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அறுவடை செய்த காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் சிறு விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிப்பிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி, மூட்டைகளில் வைத்தாலும், அதனை விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வாகனங்கள் கிடைப்பது இல்லை. ஊட்டி நகருக்கு கொண்டு வந்தாலும் குறைந்த அளவே விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளை வெளியிடங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப இயலாத நிலை காணப்படுகிறது. இதனால் சிலர் விளைந்த பயிர்களை அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். இதுகுறித்து ஊட்டி சிறு விவசாயிகள் கூறியதாவது:-

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும், சுமை தூக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், மேலும் அத்தியாவசிய பொருட்களை வெளியிடங்களுக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதிக தோட்டங்கள் வைத்து உள்ள விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். சிறு, குறு விவசாயிகள் வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் வாகனங்களை இயக்க கட்டுப்பாடு போன்ற காரணங்களால் காய்கறிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ஊட்டியில் பசியால் வாடிய வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள், உணவகங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மேலும் கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானதால், அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முடங்கி உள்ளனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களுக்கு, அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

    ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவில்லை. இதனால் அவர்கள் பசியால் வாடி வந்தனர். இதையடுத்து ஊட்டி மற்றும் குந்தா தாலுகாவில் வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, அதற்கு ஏற்றவாறு காலை, மதியம், இரவு உணவு தயார் செய்து வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்சன், அருண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் பழைய ஊட்டியில் புதியதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் குடியிருப்புக்கு சென்று, அங்கு பசியால் வாடிய வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொட்ட லங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர். ஒவ்வொரு பகுதியாக வாகனத்தில் சென்று உணவு வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஊட்டி கோட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வயதானவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நீலகிரி மாவட்டத்தில் தையற்மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் 800 பேர் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    கூடலூர்:

    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப முகக்கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு முகக்கவசங்கள் விற்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முகக்கவசம் கிடைக்காமல் பொதுமக்கள் கைக்குட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள தையற்மகளிர் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தையற்மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் 800 பேர் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கூடலூர் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள் முகக்கவசங்களை தயாரித்து, அரசுக்கு வழங்குவதால் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு உள்ளது.

    தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் மகளிர் குழுக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 3 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக அமர்ந்து முகக்கவசங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் தயாரித்த முகக்கவசங்களை விற்பனைக்காக பார்சல் செய்து மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கின்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, இங்கு தயாரிக்கும் முகக்கவசம் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி உள்பட அனைத்து துறை அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுமார் 800 பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் மக்களின் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது என்றனர். 
    நீலகிரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திறந்தவெளி சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
    ஊட்டி:

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நீலகிரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கணிசமாக காணப்படுகிறது.

    நகராட்சி மார்க்கெட்டில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 14 நுழைவுவாயில்கள் பூட்டு போட்டு மூடப்படப்பட்டு உள்ளது. 3 நுழைவுவாயில்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதோடு, அதனை மக்கள் வாங்கி செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நிற்க கோடுகள் போடப்பட்டது.

    ஆனால் உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி இல்லாமல் வரிசையில் நின்றதோடு, கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை போலீசார், அதிகாரிகள் கண்காணித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டது. அங்கிருந்த 52 கடைகள் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் திறந்தவெளி சந்தையாக அமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு கடையும் 3 மீட்டருக்குள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கடையில் இருந்து மற்ற கடைக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கு முன்பாக 10 வட்டங்கள் போடப்பட்டு உள்ளது. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு ஒன்றன் பின் ஒன்றாக கோடுகள் போடப்பட்டு உள்ளன.

    அந்த வட்டங்களில் பொதுமக்கள் வரிசையாக சமூக இடைவெளி விட்டு நின்று, முன்னால் நிற்பவர்கள் காய்கறிகள் வாங்கி சென்ற பிறகு பின்னால் இருப்பவர்கள் வாங்குகின்றனர். மக்கள் வரிசையாக நின்று காய்கறிகள் வாங்குகிறார்களா என்பதை போலீசார் ரோந்து சென்று கண்காணிக்கின்றனர். முன்னதாக திறந்தவெளி சந்தைக்கு வருகிறவர்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்படுகிறது. நுழைவுவாயிலில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்களின் விலைப்பட்டியல்(கிலோவில்) வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் திறந்தவெளி சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கும் சமூக இடைவெளியை கடை பிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். 
    கூடலூர் அருகே ரேஷன் கடை, பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி போஸ்பாரா பகுதியில் உள்ள ரேஷன் கடையை நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு காட்டு யானை முற்றுகையிட்டது. பின்னர் கடையின் ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே நுழைத்தது. தொடர்ந்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து தின்றது. மேலும் சிதறடித்து அட்டகாசம் செய்தது.

    விடியற்காலை வரை அப்பகுதியில் நின்ற காட்டு யானை, அதன்பின்னர் வனத்துக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முதுமலை வனத்துறையினர், சேதம் அடைந்த ரேஷன் கடையை பார்வையிட்டனர்.

    இதேபோன்று கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடியில் அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் வந்தது. தொடர்ந்து பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானைகள் உடைத்து தள்ளியது. இதுகுறித்து தகவல் அறிந்த கார்குடி வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆதிவாசி மக்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளியை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் உரிய நிதி ஒதுக்கி சேதம் அடைந்த கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவரை சீரமைக்க வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ஊட்டி அருகே கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் கூலி தொழிலாளியை குத்தி கொன்ற போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 35).

    இவர் ஊட்டி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று வழக்கம்போல் ஜோதிமணி வேலைக்கு சென்றார். மதியம் வேலை முடிந்து டீ குடிப்பதற்காக ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு போண்டா மாஸ்டராக கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தேவதாஸ்(43) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    அங்கு அவர் வடை போடுவதற்காக வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு டீ குடிக்க வந்த ஜோதிமணியை அருகில் வராதே, தள்ளி நில் கொரோனா பரவுகிறது என்று கூறியுள்ளார். இதில் கோபம் அடைந்த ஜோதிமணி என்னால் கொரோனா பரவவில்லை.

    உனது சொந்த ஊரான கேரளாவில் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நீ தள்ளி நில் என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் வெங்காயம் நறுக்க பயன்படுத்திய கத்தியால் ஜோதிமணியின் கழுத்தில் குத்தினார்.

    இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் ஜோதிமணி சரிந்து கீழே விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் தேவதாஸ், ஜோதிமணியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவதாசை கைது செய்தனர்.
    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் தலைமை தாங்கினார். முகாமில் வங்கிக்கு வந்த பணியாளர்கள் மற்றும் பணம் செலுத்த, கடன் பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    வங்கியில் இருக்கைகள், மேஜைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தினமும் நுழைவுவாயிலில் இருமலுடன் யாரேனும் வந்தால், அவர்களுக்கு முகக்கவசம் வழங்கவும், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நிர்வாக இயக்குனர் வசந்தா, பொது மேலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    கூடலூர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய வாலிபர், அவருக்கு உதவியாக இருந்த தாய், சித்தப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    கூடலூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரை கூடலூர் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த விஜய் (22) என்பவர் காதலித்து வந்தார்.

    இந்நிலையில் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

    இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயிடம் அந்த இளம்பெண் கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார். இதனால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    மகளின் இந்நிலையை கண்ட பெற்றோர் விஜயின் வீட்டிற்கு சென்று தனது மகளுக்கு விஜயுடன் திருமணம் செய்து வைக்குமாறு விஜயின் தாய் விஜயலலிதா (44), சித்தப்பா ராஜன் (41) ஆகியோரிடம் கேட்டனர்.

    ஆனால் அவர்கள் இளம்பெண்ணின் பெற்றோரை தரக்குறைவாக பேசி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து மிரட்டி உள்ளனர். இது குறித்து இளம்பெண் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய விஜய் அவருக்கு உதவியாக இருந்த தாய் விஜயலலிதா, சித்தப்பா ராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் டெம்போ உருண்டு விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டக் கம்பையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் பாஸ்கரன் (வயது 25). டிரைவர். திருமணமாக வில்லை. இவர் நேற்று இரவு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு லோடு ஏற்ற டெம்போவை ஓட்டி வந்தார்.

    டெம்போ தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே லாரி வந்தது. லாரிக்கு வழிவிட டெம்போவை திருப்பினார். அப்போது டெம்போ நிலைதடுமாறி தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில் தடுப்பு சுவர் இடிந்து டெம்போ 150 பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் 150 பள்ளத்தில் இறங்கி சோதனை செய்தபோது இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 150 அடி பள்ளத்தில் கிடக்கும் டெம்போவை மீட்க முயற்சில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கோத்தகிரியில் காட்டெருமை தாக்கியதில் பெண் பலியான சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி ஜக்கனாரை கீழ்க்கேரியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பார்வதி (வயது 65).100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று விடுமுறை எடுத்த பார்வதி தனது தேயிலை தோட்டத்துக்கு சென்றார். அங்கு வேலை பார்த்த அவர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தபோது அங்குள்ள புதரில் இருந்த காட்டெருமை பார்வதியின் முதுகில் கொம்புகளால் குத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவல் அறிந்ததும் கோத்தகிரி வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், வீரமணி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வனவிலங்கு தாக்கி பலியாகும் நபரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட உதவி வன அலுவலர் சரவண குமார், வனச்சரகர் செல்வகுமார் ஆகியோர் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். மீதம் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினர்.

    வன அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டனர்.

    தற்போது வனவிலங்கு கணக்கெடுப்பு நடக்கிறது. குடியிருப்பு அருகே சுற்றும் வனவிலங்களை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
    கொரோனா பீதியை அடுத்து நீலகிரி, வால்பாறை சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
    ஊட்டி:

    உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கேரள எல்லையோரம் அமைந்துள்ள கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாங்கரை, வேலந்தாவளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதார துறையினர், மருத்துவ குழுவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனை செய்கின்றனர். மேலும் அதில் உள்ள டிரைவர், கண்டக்டர், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்து வருகின்றனர்.

    மேலும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வருகின்றனர்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கர்நாடகா, கேரள மாநில எல்லை பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்ட எல்லையில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    கொரோனா பீதியை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டா பெட்டா மலைசிகரம், பைக் காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஒரு சில இடங்களில் குறைவான சுற்றுலா பயணிகள் காணப்படுகிறார்கள். அவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஊட்டி சுற்றுலா தலங்களில் பணியாற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஸ் நிலையம், சுற்றுலா தலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ளார். மேலும் அவரை நேரிடையாக சென்று தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

    ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக பஸ்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதேபோல் வால்பாறையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் உள்ளிட்டவை மூடப்பட்டதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.


    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தற்போது ஒரு கட்டமாக தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் 2-ம் சீசனும் ஆரம்பமாகும்.

    இந்நிலையில் கோடை காலங்களில் பள்ளி விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் அவர்களை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உள்பட பல கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த ஆண்டின் மலர் கண்காட்சி சிறப்பு அம்சமாக, சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலஸ் உள்ளிட்ட புதிய ரகம் மற்றும் ஆர்னமென்டல் கேல், கேலா லில்லி, ஓரியன்டல் லில்லி, மைமுலஸ், ஸ்கேபியோசா, கலிபோர்னியா பாப்பி உள்ளிட்ட 400 வகை விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தற்போது ஒரு கட்டமாக தாவிரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.

    ×