என் மலர்tooltip icon

    நீலகிரி

    தேயிலை தோட்ட நிர்வாகம் ஒன்று தங்களது தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தி அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடை பிடித்த படி தொழிலாளர்களிடம் வேலை வாங்கி வருகின்றனர். அதன்படி தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கட்டங்கள் வரையப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 17-க்கும் மேற்பட்ட பெரிய தேயிலை எஸ்டேட்டுகளும், 200-க்கும் அதிகமான சிறு, குறு தேயிலை எஸ்டேட்டுகளும் உள்ளன. இங்கு 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தயாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக தேயிலை தொழில் விவசாயம் முடங்கி கிடந்தது. இந்த நிலையில் விவசாய பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஒரு சில இடங்களில் தேயிலை பறிப்பது நடந்து வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் தொழில்களிலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தொழிலாளர்களும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    “தேயிலை விவசாயத் தொழிலாக இருந்தாலும் அது வெறுமனே தேயிலை பறிப்பதுடன் நின்றுவிடுவதல்ல. தேயிலையை மூட்டை பிரிப்பது, லாரியில் ஏற்றி தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வது, தூளாக்கி பாக்கெட் செய்வது என பல கட்டங்களைக் கடக்கிறது. இதனால் அரசு அறிவுறுத்தியுள்ள சமூக இடைவெளியை தொழிலாளர்களால் கடைப்பிடிக்க முடியாது.

    குறிப்பாக, எஸ்டேட்டுகளில் இந்த ஒன்றரை மீட்டர் இடை வெளியில் ஒவ்வொருவரும் நிற்பது சாத்தியமே இல்லாதது என கூறப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அதை கோத்தகிரியில் இயங்கி வரும் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் ஒன்று தங்களது தொழிலாளர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தி அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடை பிடித்த படி தொழிலாளர்களிடம் வேலை வாங்கி வருகின்றனர். அதன்படி எஸ்டேட் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் நின்று ஒவ்வொரு தொழிலாளர்களும் தேயிலை பிரிப்பது, எடை போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. இது தற்போது தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
    குன்னூரில் சம்பளம் கேட்டு நடைபெற்ற போராட்டத்திலும் சமூக இடைவெளியை தொழிலாளர்கள் கடைபிடித்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்திலும், வால்பாறையிலும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் குன்னூரில் உள்ளது. குன்னூர் பகுதியில் டைகர்ஹில், கரன்சி, பக்காசூரன் மலை உள்ளிட்ட இடங்களில் டேன்டீ தேயிலை தோட்டங்கள் உள்ளன. அந்த தேயிலை தோட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பச்சை தேயிலை பறிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேயிலைத்தூள் உற்பத்தியை தொடங்குவதாக டேன்டீ நிர்வாகம் அறிவித்தது. அதனை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வந்தனர். அதன் முன்பு அவர்கள் சம்பளம் கேட்டு பணியை புறக்கணித்து, சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக அரசுக்கு தெரிவிப்பதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அதனால் சமரசம் அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர். 
    நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற் கொள்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகளவு இல்லை என்றாலும் தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் கொரோனா பரவலால் பெரிதளவு நீலகிரி மாவட்டம் பாதிக்கப்படவில்லை.

    கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அந்த பகுதி சீல் வைக்கப்படுகிறது. கொரோனா தொற்றுள்ள, 9 பேர் கோவை இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 232 பேர் வீட்டு கண்காணிப்பிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த, 800 பேர் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெயிடங்களுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது மக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற் கொள்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகன தொடங்கப்பட்டது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்:- பொதுமக்களுக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்வது, மூலம் நோய் தொற்று அபாயத்தை கண்டறிந்து தடுக்க முடியும் என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில், கொரோனா ஒரளவு கட்டுக்குள் உள்ளது. மக்கள், நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இறைச்சி கடைகள் நடப்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால், சமூக இடை வெளி கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனால், இறைச்சி கடைகளை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் ஒரு மணி வரை நடத்தி கொள்ளலாம். தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தன்னார்வலர்களிடம் கூறினால், அவர்கள், பொருட்களை வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்.

    மாவட்டத்தில், தனிமை படுத்தப்பட்டவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் குறைவு தான். தற்போதைக்கு 220 பேர் தான் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நீலகிரியில் கொரோனா பாதித்த 9 பேர் கோவை இ.எஸ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் இன்னும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டை விட்டு அத்யாவசிய பணிகளுக்கு வெளியே வரும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் போடாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூரில் அடிக்கடி வெளியே சுற்றுபவர்களை கண்டறிய வாகனங்களுக்கு அடையாள குறியீட்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    கூடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. கூடலூரில் மைசூரு, கேரளா, ஊட்டி செல்லும் சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டும் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வதாக கூறுகின்றனர். இதனால் போலீசார் செய்தவதறியாது தவித்தனர்.

    இந்த நிலையில் ஊரடங்கை மீறி அடிக்கடி வெளியே சுற்றுபவர்களை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வந்த வாகனங்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசாருடன் இணைந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் மஞ்சள் நிற வர்ணம் கொண்டு அடையாள குறியிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

    அத்தியாவசிய பொருட்கள் வாங்க வர வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். தினமும் வேறு, வேறு வர்ணங்கள் கொண்டு குறியிடப்படும். இன்று(அதாவது நேற்று) மஞ்சள் நிற வர்ணம் கொண்டு குறியிடப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    குன்னூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    ஊட்டி:

    குன்னூர் அருகே தனியார் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை பின்பற்றி போராட்டம் நடத்தினர். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை, தொழிலாளர் நல அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் 2 மாத சம்பளத்தை தர வேண்டும் என பொதுமக்கள் கூறினர். ஆனால் நிர்வாகம் தரப்பில் எஸ்டேட் உரிமையாளரிடம் கேட்டு தகவல் தெரிவிப்பதாக கூறப்பட்டது. இன்று நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    மஞ்சூர் அருகே வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் மாறு வேடத்தில் காத்திருந்து பிடித்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ளது கிண்ணக்கொரை. இங்குள்ள வனப்பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுவதாக மஞ்சூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா மேற்பார்வையில் மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் கிண்ணக்கொரை சுற்றுபுற பகுதிகளில் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர். இந்தநிலையியில் கிண்ணக்கொரை அடுத்துள்ள வனப்பகுதியில் புகை வருவதை கண்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சிலர் கள்ளச்சாரயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து கேன்களில் வைத்திருந்த 116 லிட்டர் கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கேரளா மாநிலம் மண்ணார்காடு பகுதியை சேர்ந்த சுகு (32), கிண்ணக்கொரை அருகே தனியகண்டி பகுதியை சேர்ந்த சரவணகுமார் (28), மூர்த்தி (22), கேரளா மாநிலம் தொடுபுழா இடுக்கியை சேர்ந்த பினு (40), கேரளா காவலன்காடு பகுதியை சேர்ந்த பால் (61) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மஞ்சூர் பகுதியில் விதிகளை மீறி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது குந்தா தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டபின் மதியம் 1 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை கிராமபுறங்களுக்கு கொண்டு சென்று காய்கறிகள் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மேலும் கடைகளை விட வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் கிலோவிற்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குந்தா தாசில்தார் சரவணன் விடுத்துள்ள எச்சரிக்கையில் குந்தா பகுதியில் ஊரடங்கை முன்னிட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும்.

    அதன் பின்னர் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. ஊரடங்கு உத்தரவை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக பொருட்களை விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஊட்டியை சேர்ந்த இளைஞர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியை சேர்ந்த ஆனந்த்(வயது 26) என்பவர் காய்ச்சலை கண்டறிய உதவும் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வடிவமைத்து உள்ளார். இந்த கருவியை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி ஆகியோர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து சோதனை அடிப்படையில் முன்னோட்டமாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வருகிறவர்களுக்கு கருவியில் பதிவாகும் வெப்ப அளவை கணக்கீட்டு, அதன்பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது:-

    நான் பி.இ., எம்.இ. படித்து முடித்து உள்ளேன். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதை கருத்தில் கொண்டு தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவியை வடிவமைத்தேன். ஸ்கேனர் கருவி முன்னால் நெற்றியை கொண்டு சென்றால், உடல் வெப்பத்தை தானாக அளவீடு செய்து திரையில் காண்பிக்கும். பரிசோதனை மேற்கொள்பவரின் அருகில் நின்று செவிலியர்கள் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    கருவியோடு இணைக்கப்பட்டு 2 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் திரையில் பார்த்து உடல் வெப்ப அளவை தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்தவாறே பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவேட்டில் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பரிசோதனை செய்பவருக்கும், அதனை கண்காணிப்பவர்களுக்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. மேலும் வைரஸ் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த கருவியை 50 மீட்டர் தொலைவில் இருந்து கண்காணிக்கும் வசதி உள்ளது. உடல் வெப்பநிலை 100 பாரன்ஹீட்டை தாண்டி செல்லும் போது, பொருத்தப்பட்டு உள்ள சிவப்பு விளக்கு எரிந்தும், ஒலி எழுப்பியும் தெரிவிக்கும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து டாக்டரை அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நீலகிரி மாவட்டம் கூடலூரில் பசியால் வாடிய தெருநாய்களுக்கு பிஸ்கட், பிரெட் உள்ளிட்டவற்றை தீயணைப்பு வீரர்கள் வழங்கினர்.
    கூடலூர்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தும் மூடி கிடக்கின்றன. மேலும் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாக உள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவுகின்றனர்.

    இந்த நிலையில் உணவு கிடைக்காத நிலையில் தெருநாய்களும் சுற்றித்திரிகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர், தொரப்பள்ளி, மாக்கமூலா, செம்பாலா உள்ளிட்ட இடங்களில் பசியால் வாடிய தெருநாய்களுக்கு பிஸ்கட், பிரெட் உள்ளிட்டவற்றை தீயணைப்பு வீரர்கள் வழங்கினர். மேலும் நடைபாதைகள், சாலைகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
    ஊட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானம், மத்திய பஸ் நிலையம் ஆகிய 2 இடங்களில் திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை கடைகள் செயல்படுவதால் தினமும் குப்பைகள் சேகரமாகிறது. இதை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

    ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அன்றாடம் வார்டு, வார்டாக வாகனங்களில் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறைகளை அணிந்து குப்பைகளை அகற்றுவது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகளில் நேரம் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ஊட்டி காந்தலில் இருந்து தூய்மை பணியாளர்கள் தினமும் நகருக்கு பணிக்கு வந்து விட்டு திரும்புகிறார்கள்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஊட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மருத்துவ பரிசோதனை நேற்று நடந்தது. இதற்காக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து 10, 10 பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளி நோயாளி சீட்டு பெற்ற பின்னர் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

    அதன் பிறகு 3 டாக்டர்கள் தனித்தனியாக பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கேற்ப அவர்கள் பதில் அளித்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி, இருமல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை பெற பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருந்து, மாத்திரைகளை பெற்று சென்றனர். நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மொத்தம் 316 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ஊட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் போலீசாருக்கும், கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. 
    கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பேரூராட்சியில் சுகாதார மற்றும் தூய்மை பணியாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிந்து வந்தாலும், அவர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கோத்தகிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் சுகாதார பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், டாக்டர் கார்த்திகா ஆகியோர் கபசுர குடிநீரை பணியாளர்களுக்கு வழங்கினர். அதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

    இதுகுறித்து டாக்டர் கார்த்திகா கூறும்போது, சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம், சிறு காஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதொடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறு தேக்கு, வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய் தோல் என 15-க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்கள் கலந்து கபசுர குடிநீர் செய்யப்படுகிறது. இந்த பொடியை காய்ச்சி சுண்ட வைத்து வடிகட்டி கால் டம்ளர் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாச பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்க உதவும் என்றார்.
    ×