search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.
    X
    வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.

    ஊட்டியில் பசியால் வாடிய வடமாநில தொழிலாளர்கள் - உதவிக்கரம் நீட்டிய அதிகாரிகள்

    ஊட்டியில் பசியால் வாடிய வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி அதிகாரிகள் உதவிக்கரம் நீட்டினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகள், உணவகங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மேலும் கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலானதால், அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே முடங்கி உள்ளனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களுக்கு, அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

    ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவில்லை. இதனால் அவர்கள் பசியால் வாடி வந்தனர். இதையடுத்து ஊட்டி மற்றும் குந்தா தாலுகாவில் வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, அதற்கு ஏற்றவாறு காலை, மதியம், இரவு உணவு தயார் செய்து வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்சன், அருண் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் பழைய ஊட்டியில் புதியதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் குடியிருப்புக்கு சென்று, அங்கு பசியால் வாடிய வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொட்ட லங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர். ஒவ்வொரு பகுதியாக வாகனத்தில் சென்று உணவு வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஊட்டி கோட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வயதானவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×