search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைநிறுத்தம் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் படத்தில் காணலாம்.
    X
    வேலைநிறுத்தம் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் படத்தில் காணலாம்.

    சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

    சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடை செய்யக்கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்டம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கால் டாக்சிகள் பேக்கேஜ் முறையில் ஓட்டுவதை தடை செய்யக்கோரியும் மாவட்டம் தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுலா நகரமான ஊட்டியில் ஓட்டுனர்கள் தங்களுக்கான வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்தினர்.

    வேலைநிறுத்தம் காரணமாக அந்த வாகனங்கள் பின்னோக்கி திருப்பி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் கோவர்தன் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரியில் சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். இந்த நிலையில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கால் டாக்சிகள் பேக்கேஜ் என்ற முறையில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.

    வெளிஇடங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஊட்டியில் ஓட்டல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறார்கள். அதனால் உள்ளூர் சுற்றுலா வாகனங்களுக்கு வாடகை கிடைப்பது இல்லை. தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனியார் அமைப்பினர் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட உள்ளனர்.

    இந்த வாகனங்களை இயக்க போக்குவரத்துத் துறையின் அனுமதி பெறவில்லை. எனவே, சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டி சேரிங்கிராசில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா வாகனத்தை உள்ளூர் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×