என் மலர்
நீலகிரி
- சுற்றுலா வேன் கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- கல்லட்டி மலைப் பாதையில் விபத்து நிகழ்ந்த இடத்தை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஊட்டி:
சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 20க்கும் ஐ.டி. மேற்பட்டவர்கள் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு சுற்றுலா வேன் கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நெல்லையை சேர்ந்த முத்துமாரி(24) என்ற பெண் உயிரிழந்தார். பாண்டிச்சேரியை சேர்ந்த பிரதீப் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த புதுமந்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி தடை செய்யப்பட்ட வழியாக சுற்றுலா வேன் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லட்டி மலைப்பாதையில் தங்கும் விடுதி நடத்தி வரும் வினோத்குமார் என்பவர் தனது உதவியாளர் ஜோசப்புடன் சேர்ந்து தடைசெய்யப்பட்ட வழியாக அவர்களை அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கல்லட்டி சோதனை சாவடி பகுதியில் உள்ள அந்த விடுதியையும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். இதற்கிடையே கல்லட்டி மலைப் பாதையில் விபத்து நிகழ்ந்த இடத்தை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப் பாதையில் செல்லாமல் தலைக்குந்தா பகுதியில் வாகனங்களைத் தடுத்து கூடலூா் வழியாக திருப்பிவிடுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன், ஊட்டி தாசில்தார் ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
- பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன், படகில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, படகு இல்லம், பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.
ஊட்டி பைக்காரா அணை படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். படகு சவாரி செய்து மகிழ்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டு பெற்றனர். பின்னர் தங்கள் குடும்பத்தினருடன், படகில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
படகு சவாரி செய்து முடித்ததும் சுற்றுலா பயணிகள், பைக்காரா அணையின் இயற்கை அழகை காட்சி மாடத்தில் நின்றபடி கண்டு ரசித்தனர்.
அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படாததால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
ஊட்டி-கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா போன்ற இடங்களில் சாலையோரத்தில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முதலே தென்பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது.
அதிகாலையில் கடும மேகமூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர்ந்து கால நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கோத்தகிரியில் உள்ள காட்சி முனை முழுவதும் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இதனை பார்த்து உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- யானைகள் குடியிருப்பை ஓட்டிய பகுதியிலும், சாலையோரங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது.
- கோத்தகிரி பகுதியில் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
அரவேணு:
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பானை, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாமரங்கள் உள்ளன.
இதுதவிர இங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஊடு பயிராக பலா மரங்களும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் அதிகளவில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை ருசிப்பதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன. இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில மாதங்களாக யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த பலா மரத்தில் உள்ள பழங்களை தனது தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டது.
வெகு நேரமாக அங்கேயே நின்றிருந்த யானை, பலாப்பழங்களை ரசித்து, ருசித்து சாப்பிட்டது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, தங்கள் சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.
தொடர்ந்து யானைகள் குடியிருப்பை ஓட்டிய பகுதியிலும், சாலையோரங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் ஒரு வித அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்க வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
- கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள்- மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தேவாலா உட்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், காட்டு யானை, மான், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வனப்பகுதிகளில் காட்டு விலங்குகள் மர்மநபர்களால் வேட்டையாடப்படுவதாக உள்ளூர் மக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இதனை கண்காணிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருகேஸ்வரன், பிரதீப்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று சிலர் வனப்பகுதிக்கு வேட்டையாட செல்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார், தேவாலா பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 பைகளில் துப்பாக்கி குண்டுகள் மற்றும் மான்கறி வைத்திருந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், நாடுகாணியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல்(30), புஷ்பராஜ்(33), அருண்(26) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் மானை வேட்டையாடி, இறைச்சியை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மான்கறி மற்றும் துப்பாக்கி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது.
- விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.
அரவேணு :
கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.
கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
- பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள்.
- வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியின் 25-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:-
பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களுக்கு நேரத்தை செலவிட்டு வாழ்க்கையின் சாரத்தை மறந்து விடாதீர்கள்.
வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பது அல்ல. வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள். பள்ளிகளில் நேரடியாக கற்பிக்கப்படும் கல்வி, வலைத்தளங்களில் கிடைக்காது. இணையதள ஆய்வுகள் பள்ளியின் நேரடி கல்விக்கு இணையாக வர இயலாது.
கொரோனா தொற்றுக் காலத்தை நாம் கடந்து விட்டோம். அது ஒரு பின்னடைவு மட்டுமே, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அத்தகைய இணையதள வழிகள் தற்போது நமது ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.
- பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அரவேணு:
கொடநாடு ஈளடா பகுதியில் இடிக்கப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடையை உடனடியாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியை சுற்றி தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் ,கர்சன், பட்டக்கொரை, பாரதி நகர்,காந்திநகர், கதகஹட்டி, கதகத்துறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 900 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நான்கு மாத காலமாகியும் இதுவரை இடிக்கப்பட்ட நாளிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே அதிகாரிகள் இடிக்கப்பட்ட ஈளடா பகுதி பஸ் நிறுத்த நிழற்குடையை ஆய்வு செய்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- ஊட்டி தாலுகாவில் 22 கிராமங்களும், பந்தலூா் தாலுகாவில் 7 கிராமங்களும் பாதிக்கப்படும். மசினகுடி ஊராட்சி முழுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.
- 50 கிராமங்களை சரணாலய பகுதியின் வெளிவட்ட மண்டலத்தில் இருந்து நீக்க சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியின் எல்லையை ஒரு கிலோ மீட்டா் தூரம் விரிவாக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3.6.2022 அன்று உத்தரவு பிறப்பித்தது. புலிகள் காப்பக விரிவாக்கம் தொடா்பாக கூடலூரில் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்த பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனா். ஏற்னவே வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இது மேலும் மனச்சுமையை தருகிறது. இதனால் ஊட்டி தாலுகாவில் 22 கிராமங்களும், பந்தலூா் தாலுகாவில் 7 கிராமங்களும் பாதிக்கப்படும். மசினகுடி ஊராட்சி முழுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.
பாட்டவயல், பிதா்க்காடு, முதிரக்கொல்லி, விலங்கூா், மேபீல்டு ஆகிய கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. கூடலூா் தாலுகாவில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் 1860 வீடுகளும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்படுவா்.
மேற்கூறிய 50 கிராமங்களை சரணாலய பகுதியின் வெளிவட்ட மண்டலத்தில் இருந்து நீக்க சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசுதான் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் மண்டலத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், புலிகள் காப்பக வெளிமண்டல விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறை யிட்டு விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஒருங்கிணைப்பாளா் என்.வாசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் இளஞ்செழியன், செயற்குழு உறுப்பினா் பாண்டியராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் சபீக், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளா் மணி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சகாதேவன், நகரச் செயலாளா் துயில்மேகம், மசினகுடி வாழ்வுரிமை இயக்க நிா்வாகி வா்கீஸ், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ரசாக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
- நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்தாா்.
போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் அவர் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் முன்னிலையில் நடைபெற்ற 'இந்தியா ஐந்து டிரில்லியன் டாலா் பொருளாதார நிலையை அடைய மாநிலங்களின் வளா்ச்சி, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.
மாறிவரும் நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம் எனவும், சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் புகழைத் தாங்கி நிற்கும் இக்கல்லூரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் அமைச்சா் கூறினார்.
- கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகமது ரபீக்.
- மோட்டார் சைக்கிள் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து ஜல்லிக்கற்கள் மீது ஏறியது. தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் கடந்த சுமார் 3 ஆண்டுகளாக சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகமது ரபீக்(வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் முகமது ரபீக் இன்று காலை வழக்கு சம்பந்தமாக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக போலீஸ்காரர் அபுதாகீர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தொடர்ந்து அவர்கள் விசாரணையை முடித்து விட்டு, கடைவீதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்றனர். பின்னர் சோலூர் மட்டம் போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் ஓட்டினார்.
கோடநாடு செல்லும் வழியில் கேர்பெட்டா செம்மண் முடக்கு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து ஜல்லிக்கற்கள் மீது ஏறியது. தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது எதிரே தேயிலைத்தூள் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சக்கரத்தில் முகமது ரபீக் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதனலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது ரபீக் பரிதாபமாக உயிரிழந்தார். அபுதாகீர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கோடநாடு வழக்கு இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முகமது ரபீக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடலை பார்த்து சக போலீசார் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மேலும் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தனிப்படை விசாரிப்பதற்கு முன்பு விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆறுதல் கூறினார்.
- மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.
- பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும்.
ஊட்டி:
கோத்தகிரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர்(பொறுப்பு) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மார்க்கெட் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை புதிய உழவர் சந்தை அமைப்பதற்காக வேளாண் வணிக துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மன்ற உறுப்பினர்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும்.
மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இருந்து பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
பின்னர் 15-வது வார்டு உறுப்பினர் கணபதி பேசும்போது, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு கருவூலம் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சியின் முறையான அனுமதியை பெறாமல் பொது நடைபாதைக்கு நடுவே தனியார் மூலம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நுழைவு வாயிலை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவு, செலவு கணக்கு மேலும் கோத்தகிரி நகருக்கு குடிநீரை வினியோகம் செய்யும் ஈளாடா தடுப்பணையில் இருந்து கோத்தகிரி சக்தி மலைப்பகுதிக்கு குடிநீர் குழாய்கள் அமைப்பது, அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் மின்மோட்டார்கள் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதாவதை தடுக்கும் வகையில் புதிய மின் மாற்றி அமைப்பது, கோத்தகிரி கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையை ரூ.1 கோடி செலவில் புதுப்பிப்பது, பொதுப்பணித்துறையால் அரசு குடியிருப்பு கட்ட சக்திமலையில் 16 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த மாத வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யபட்டது. முடிவில் பேரூராட்சி அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.
- பாபு அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்.
அரவேணு:
கோத்தகிரி கூக்கல்தொரையை சேர்ந்தவர் பாபு. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார். பாம்பு நேராக கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் வாலிபர்கள் சிலர் கடைக்கு வந்து பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து பாம்பை வாங்கி சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.






