search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்
    X

    ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் இயங்கிய தனியார் தங்கும் விடுதிக்கு சீல்

    • சுற்றுலா வேன் கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • கல்லட்டி மலைப் பாதையில் விபத்து நிகழ்ந்த இடத்தை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    ஊட்டி:

    சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் 20க்கும் ஐ.டி. மேற்பட்டவர்கள் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்தனர்.

    நேற்றுமுன்தினம் இரவு சுற்றுலா வேன் கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் நெல்லையை சேர்ந்த முத்துமாரி(24) என்ற பெண் உயிரிழந்தார். பாண்டிச்சேரியை சேர்ந்த பிரதீப் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த புதுமந்து போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில, வெளி மாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி தடை செய்யப்பட்ட வழியாக சுற்றுலா வேன் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லட்டி மலைப்பாதையில் தங்கும் விடுதி நடத்தி வரும் வினோத்குமார் என்பவர் தனது உதவியாளர் ஜோசப்புடன் சேர்ந்து தடைசெய்யப்பட்ட வழியாக அவர்களை அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கல்லட்டி சோதனை சாவடி பகுதியில் உள்ள அந்த விடுதியையும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த விடுதிக்கு சீல் வைத்தனர். இதற்கிடையே கல்லட்டி மலைப் பாதையில் விபத்து நிகழ்ந்த இடத்தை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப் பாதையில் செல்லாமல் தலைக்குந்தா பகுதியில் வாகனங்களைத் தடுத்து கூடலூா் வழியாக திருப்பிவிடுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

    தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன், ஊட்டி தாசில்தார் ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×