என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நிற்கும் நாவல் மரங்களில், நாவல் பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.
    • நாங்கள் ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை 50 கிலோ முதல் 60 கிலோ வரை நாவல் பழங்களை பறிக்கிறோம்.

    அரவேணு:

    கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலை நாவல் மரங்கள் அதிகளவில் உள்ளன. ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு மலை நாவல் பழ சீசன் தொடங்கும்.

    இந்த ஆண்டுக்கான மலை நாவல் பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நிற்கும் நாவல் மரங்களில், நாவல் பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இதனை நாவல் பழ தொழிலாளர்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் நாவல் பழம் ரூ.200 விற்பனையாகி வருகிறது.

    இதுகுறித்து நாவல் பழம் பறிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், மனிதர்களுக்கு பலவித நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். அது 2 வகைப்படும். பெரிய நாவல் பழம். சிறிய நாவல் பழம். மலைப்பகுதிகளில் விளைவது சிறிய நாவல் பழமாகும்.

    இதனை மலை நாவல் பழம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை 50 கிலோ முதல் 60 கிலோ வரை நாவல் பழங்களை பறிக்கிறோம். எங்களிடம் மொத்த கொள்முதல் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.80 கொடுத்து நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    அந்த வகையில் நாவல் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்தும் இனிப்புச் சுவை குறைவாகவும் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று என்பதால் நாவல் பழத்தை அனைவருமே உண்ணலாம். ஆனால், அளவோடு உண்பதே நல்லது.

    • விபத்துக்கள் எதிரொலியாக கல்லட்டி சாலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாரின் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து தலைக்குந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதேபோல் முதுமலை, மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது.

    36 கொண்டை ஊசி வளைவு கொண்ட செங்குத்தான மலைப்பாதை என்பதால் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வெளிமாநில வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2-ம் தேதி இரவு சென்னையில் இருந்து சுற்றுலா வேனில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ஊட்டிக்கு வந்தனர்.

    தொடர்ந்து ஊட்டியில் இருந்து மசினகுடி செல்வதற்காக கல்லட்டி மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவில் வேன் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெண் பலியானார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் வினோத் குமார், அவரது உதவியாளர் ஜோசப் ஆகியோரை கைது செய்தனர். விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இனி வரும் நாட்களில் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கும், முதுமலையிலிருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு வெளி மாநில வாகனங்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு, மாவனல்லா, கல்லட்டி, தலைக்குந்தா ஆகிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்

    • ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழையும், கடும் பனிமூட்டமும் நிலவுதால் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வெயிலே அடிக்கவில்லை. பகல் வேளையிலும் பனிமூட்டமும், மேகமூட்டமும் திரண்டு இரவு போன்றே காட்சியளிக்கிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

    தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், பிற வேலைகளுக்கு செல்வோரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

    அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் பொதுமக்கள் கூட குடை பிடித்தபடியே வெளியில் வந்தனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், குன்னூர், கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    மாவட்டத்தில் தொடர்ந்து மழையும், கடும் பனிமூட்டமும் நிலவுதால் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிரால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    குளிரில் இருந்து காத்து கொள்ள மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகிறன்றனர். ஆட்டோ, வேன் டிரைவர்கள் சாலைகளின் ஓரம் தீமூட்டி குளிர்காய்கின்றனர்.

    சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த 2-ந் தேதி கோகிலத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஊட்டி சேட் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்
    • இந்த சம்பவம் குறித்து ஊட்டி மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்செல்வம். இவர் கேரளாவில் கூலித்தொழியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோகிலம் (வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோகிலத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஊட்டி சேட் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனால் கோகிலத்தின் உறவினர்கள், அவரது கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க நகை, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை கழற்றி சிறிய பையில் வைத்து, அங்குள்ள ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றனர்.

    இதையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கும், இங்கும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    மர்மநபர் யாரோ அந்த பையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கோகிலத்தின் உறவினர்கள் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    ஊட்டி:

    கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராம பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான இந்த தடுப்பணையில் அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகிலுள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதுடன், தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

    தற்போது கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்த குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பல ஆண்டுகளாக பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
    • என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு சார்பாக, தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது எவ்வாறு என்று செய்முறை விளக்கமும் மாணவ- மாணவிகளிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்பத்தப்பட்டது.

    என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணர்வும் மற்றும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

    • 22 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    ஊனமுற்றோா் மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 பெறுவதற்கான ஆணையினையும், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 2 நபா்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், 22 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கெத்தை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் உள்ள சர்க்கார் மூலா பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.

    இதேபோல் கூடலூர்-ஊட்டி சாலையில் பைக்காரா என்ற இடத்திலும் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-61, அப்பர்பவானி-50, பந்தலூர்-42, சேரங்கோடு, 37, பாடந்தொரை-24, நடுவட்டம்-23, கூடலூர்-19, அப்பர், செருமுள்ளி-19 கூடலூர்-18.

    • கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன.
    • மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.

    நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மஞ்சூருக்கு அரசு பஸ் சென்றது. இரவு 8 மணியளவில் கெத்தை அருகே பஸ் வந்தபோது, குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து நின்றது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரத்தில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளும் அச்சம் அடைந்தனர். பஸ் சாலையோரம் நிற்பதை பார்த்ததும் தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது.

    45 நிமிடங்களுக்கும் மேலாக சாலையில் சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் சாலையோரம் இருந்த மரக்கிளைகள், நெடுஞ்சாலை சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அடித்து நொறுக்கிவிட்டு வனத்திற்குள் சென்றது. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    நேற்று காலை மஞ்சூர் பகுதியில் கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் காட்டு யானைகள் வழிமறித்தன. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து தனியார் வாகனம் புறப்பட்டு சென்றது.

    கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன. ஆனால் தற்போது மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக்கூடாது என்றனா்.

    மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ், வாகனங்களை வழிமறித்து ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை கூட்டம்.

    • கோத்தகிரி பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.
    • இதமான காலநிலை என்பதால் இனப்பெருக்கத்துக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. மேலும் மாவட்டத்தின் 62 சதவீதப்பகுதி வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு கோத்தகிரி பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.

    கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை ஆகிய பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வலசைப்பயணமாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    தற்போது சீசன் காரணமாக இந்த பகுதியில் மரங்கள் உள்பட தாவர இனங்களில் பழங்கள் அதிகமாக காணப்படுவதால் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கிறது. மேலும் இதமான காலநிலை என்பதால் இனப்பெருக்கத்துக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன.

    கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் லாங்வுட் சோலை உள்ளிட்ட பகுதிகளில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

    இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து அவற்றை புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பறவைகளை ஆவணப்படுத்தி வரும் ஊட்டியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதிமாறன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் வனப்பகுதியில் பறவைகளுக்கு ஏற்ற பழ வகைகள் அதிகமாக உள்ளது.

    இந்த பழ வகைகளை உண்ணவும், இனப்பெருக்கத்திற்காகவும் தற்போது சமவெளி பகுதியில் இருந்து பறவைகள் உள்ளூர் வலசையை தொடங்கியுள்ளது.

    இதில் நீலகிரி பிளைகேச்சர், மலபார் விசிலிங் திரஸ், நீலகிரி லாப்பிங் திரஸ், ஒயிட் சீக் பார்பிட், ஒயிட் ஜ, ஆரஞ்சு ஏல்லோ பிளைக்கேச்சர் உள்பட நூற்றுக்கணக்கான அரிய வகை பறவையினங்கள் கோத்தகிரி பகுதியில் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.
    • தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    ஊட்டி:

    கர்நாடக மாநிலம் கோபால்சாமி பேட்டையை சேர்ந்தவர் கவியப்பா (வயது 58). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகள் மேய்க்க சென்றார்.

    அப்போது லக்கிம்புரா வனத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி ஒன்று கடித்தது. இதைக் கண்ட கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.

    இதில் வலது கண் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக புலியிடம் இருந்து கவியப்பா உயிர் தப்பினார். மேலும் புலியும் அங்கிருந்து சென்றது. பின்னர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து கவியப்பாவை மீட்டு மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே அதே நாளில் மாலை நேரத்தில் மற்றொரு தொழிலாளி ராஜேஷ் என்பவரையும் புலி தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து பொதுமக்கள் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர்.

    இதனால் சம்பவ இடத்துக்கு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியை தேடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு கும்கி யானை மீது பந்திப்பூர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தனியார் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கண்டனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் வெங்கடேஷ் புலி மீது மயக்க ஊசியை செலுத்தினார். 10 வயது ஆண் புலி சிக்கியது இதனால் வலியால் புலி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி மயங்கி விழுந்தது.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் ராட்சத வலைக்குள் புலியை அடைத்து கொட்டும் மழையில் தூக்கிச் சென்றனர். பிடிபட்ட ஆண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் புலியை கூண்டில் அடைத்து மைசூரு வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறும் போது, ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. இதனால் வேட்டையாடும் திறனை இழந்துள்ளதால் மாடு, மனிதர்களை தாக்கி வருகிறது. இதைத் தொடர்ந்து அதைப் பிடித்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதன் காரணமாக அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா். ஊட்டி குன்னூரிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது

    ×