search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் கனமழை- 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    நீலகிரியில் கனமழை- 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழையும், கடும் பனிமூட்டமும் நிலவுதால் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வெயிலே அடிக்கவில்லை. பகல் வேளையிலும் பனிமூட்டமும், மேகமூட்டமும் திரண்டு இரவு போன்றே காட்சியளிக்கிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

    தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், பிற வேலைகளுக்கு செல்வோரும் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

    அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் பொதுமக்கள் கூட குடை பிடித்தபடியே வெளியில் வந்தனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், குன்னூர், கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    மாவட்டத்தில் தொடர்ந்து மழையும், கடும் பனிமூட்டமும் நிலவுதால் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிரால் குழந்தைகளும், பெரியவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    குளிரில் இருந்து காத்து கொள்ள மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகிறன்றனர். ஆட்டோ, வேன் டிரைவர்கள் சாலைகளின் ஓரம் தீமூட்டி குளிர்காய்கின்றனர்.

    சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×