search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elada"

    • ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    ஊட்டி:

    கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராம பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான இந்த தடுப்பணையில் அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகிலுள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதுடன், தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

    தற்போது கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்த குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பல ஆண்டுகளாக பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×