search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோத்தகிரியில் தும்பிக்கையால் பலாப்பழங்களை பறித்து ருசித்த காட்டு யானை
    X

    கோத்தகிரியில் தும்பிக்கையால் பலாப்பழங்களை பறித்து ருசித்த காட்டு யானை

    • யானைகள் குடியிருப்பை ஓட்டிய பகுதியிலும், சாலையோரங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது.
    • கோத்தகிரி பகுதியில் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    அரவேணு:

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பானை, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாமரங்கள் உள்ளன.

    இதுதவிர இங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ஊடு பயிராக பலா மரங்களும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் அதிகளவில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை ருசிப்பதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன. இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில மாதங்களாக யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் முகாமிட்ட ஒற்றை காட்டு யானை தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த பலா மரத்தில் உள்ள பழங்களை தனது தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டது.

    வெகு நேரமாக அங்கேயே நின்றிருந்த யானை, பலாப்பழங்களை ரசித்து, ருசித்து சாப்பிட்டது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, தங்கள் சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.

    தொடர்ந்து யானைகள் குடியிருப்பை ஓட்டிய பகுதியிலும், சாலையோரங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது. இதனால் ஒரு வித அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் அந்த வழியாக பயணித்து வருகின்றனர்.

    இரவு நேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்க வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    Next Story
    ×