என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கத்தினை கலெக்டர் தொடங்கிவைத்தாா்.
    • நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பிரசாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெற உள்ளன.

    ஊட்டி:

    தொட்டபெட்டா ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே கிராம அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவா் கூறியதாவது:-

    தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவா்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டம் என்ற நிலையை நீலகிரி அடைந்ததுபோல, குப்பைகளற்ற மாவட்டம் என்ற நிலையை விரைவில் அடைந்திட அனைவரின் பங்களிப்பும் அவசியமாகும்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது, பொது இடங்களில் குப்பைகளை போடுவதால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

    மேலும், பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கம் கிராமப்புற சமூகத்தினரிடையே தொடங்கப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு இயக்கம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 20-ந் தேதி முதல் அக்டோபா் 2-ந் தேதி வரை பல்வேறு பிரசாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெற உள்ளன. இதனை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் மண்டல அலுவலா்களும் ஊராட்சி அளவில் பொறுப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சாம் சாந்தகுமாா்,ஊராட்சி தலைவர் ஜவகர் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

     சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் ராஜன் அமைப்பின் கடந்த மாதத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வரும் எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ப–ட்டன. ஜான்சன்ஸ்கொயர் முதல் மார்கெட் வரை உள்ள பழுதான நடைபாதையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என்றும். வரும் 22ம்தேதி அமைப்பின் சார்பில் நடைபெறும் ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு பி.ஐ.எஸ் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளை அழைப்பது என்றும், கோத்தகிரி அரசு சித்தா மருத்துவ பிரிவில் மருத்துவரை நியமனம் செய்ய அதிகாரிகளை வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர்கள். ஜம்புலிங்கம், கண்மணி முகமது இஸ்மாயில், ஆலோசகர் பிரவின், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.

    • ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர்

     கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். ராதை வேடம் ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர்.


    தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

    • கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்
    • பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அணில் காடு பழங்குடியின கிராமத்தில் 8க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பழங்குடி கிராமத்தில் பல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.


    இந்த கிராமத்தில் சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது மின் இணைப்பு கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த குக்கிராமத்திற்கு மின்சாரம் இணைப்பு வழங்க மின்வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 8 பழங்குடியின குடும்பங்களுக்கு மின்சாரம் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தற்போது கம்பம் நடப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தி வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • காபி வாரியம் மற்றும் யு என் சி எஸ் இணைந்து காபி விவசாயிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
    • 41 காபி விவசாயிகளிடமிருந்து காபி வாரியத்தில் இணைவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    அரவேணு

    கெங்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழங்குடியின மக்கள் வாழும் மெட்டுக்கல் கிராமத்தில் காபி வாரியம் மற்றும் யு என் சி எஸ் இணைந்து காபி விவசாயிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காபி வாரிய இணை இயக்குநர் டாக்டர்.கருத்தமணி, காபி வாரிய அலுவலர் நித்தியா, யு.என்.சி.எஸ் , வி.டி.ஓ ரஞ்சித் குமார், சிவகுமார் மற்றும் 41 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் காபி செடிகள் நடவு முறைகள், காபி செடிகள் எத்தனை இலைகளில் நடவு செய்தல், காபி நர்சேரி அமைப்பது பற்றி தண்டு துளைப்பன், இலை துளைப்பன் நோய்கள் உரம் இடுதல், தொழுது உரம் பற்றி உரம் இடுதல் அளவீடு பற்றி காபி செடிகள் கவாத்து செய்வது பற்றி காபி விதை நர்சேரி அமைக்க விதை அக்டோம்பர் மாதம் பதிவு செய்தல் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அடுத்த ஆண்டு வரவுள்ள திட்டம் பற்றியும் விளக்கமாக கூறினார். 41 காபி விவசாயிகளிடமிருந்து காபி வாரியத்தில் இணைவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    • அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
    • விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.மேலும் அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    கூடலூர், தெய்வம லையில் ஏற்பட்டு உள்ள விரிசலை புவி யியல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் விதிமுறை களை மீறி கட்டப்பட்ட குடியிருப்பு களை அகற்றி விட்டு, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது. விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், குந்தா தாசில்தார் இந்திரா உடனிருந்தனர்.

    • தொடர் விடுமுறை என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • திடீரென சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து இதமான கால நிலை நிலவி வருகிறது. இதமான காலநிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள், சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இதமான கால நிலை நிலவுகிறது. அதிகாலையில் கடும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் ஊட்டி நகரில் வானில் சூரியனை சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் காணப்பட்டது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி நகர் மக்கள் இந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் மற்றும் சுற்றுலா வந்திருப்போரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சூரியனை சுற்றி காணப்படும் ஒளிவட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். திடீரென சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது.
    • சிறுத்தையும், கூண்டில் இருந்த ஆட்டை பார்த்தும் உள்ளே நுழைந்தது.

    ஊட்டி:

    ஊட்டி வடக்கு வன சரகத்துக்குட்பட்ட அரக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனா்.

    கடந்த 10-ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (4) தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தாள்.

    படுகாயமடைந்த சரிதா ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனா்.

    இருப்பினும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே இருந்தனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்தனர்.

    அப்போது வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ள அரக்காடு பகுதியில் 2 இடங்களில் கூண்டுகளை வைத்தனர். அந்த 2 கூண்டுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு ஒன்றையும் கட்டி வைத்து சிறுத்தை வருகைக்காக காத்திருந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே இருந்தனர்.

    எதிர்பார்த்தது போலவே இன்று அதிகாலையில் அரக்காடு பகுதியில் வைத்திருந்த கூண்டின் அருகே சிறுத்தை வந்தது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் கூண்டுக்குள் சென்றதும், அதனை பிடிக்கவும் தயாராக இருந்தனர்.

    சிறுத்தையும், கூண்டில் இருந்த ஆட்டை பார்த்தும் உள்ளே நுழைந்தது. இதையடுத்து வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு கூண்டை அடைத்தனர்.

    பின்னர் சிறுத்தையை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்தனர். இதற்காக லாரி கொண்டு வரப்பட்டு கூண்டில் சிக்கிய சிறுத்தையை ஏற்றினர். பின்னர் சிறுத்தையை லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    • நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாவட்ட, நகர, துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இளைஞர் அணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார்.

    வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கதுல்லா, செல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபல், பாபு, நாகராஜ், உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நீலகிரி மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இளைஞர் அணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 27-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் குன்னூர் விவேக் டூரிஸ்ட் ஹோம் கூட்ட அரங்கிலும், மாலை 4 மணி அளவில் ஊட்டி பிரீத்தி கிளாசிக் டவர்ஸ் கூட்ட அரங்கிலும், 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டங்களில் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கள் பெயர்களை பதிவுசெய்த இளைஞர் அணியினர் வெண் சீருடையில் கலந்து கொள்ள வேண்டும். இதுவரை பதிவு செய்யாத இளைஞர் அணியினர் தங்களது நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    அரவேணு:

    தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் மற்றும் மின்சார திருத்த மசோதாவினை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் பகுதியாக கோத்தகிரி நெடுகுளா உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இடை கமிட்டி செயலாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், கட்சியின் இடைக் குழு உறுப்பினர் சுந்தர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடை குழு செயலாளர் பகத்சிங், இந்திய மாணவர் சங்க செயலாளர் சச்சின் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    • யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குட்டியுடன் சுற்றி திரியும் யானை கூட்டம் நேற்று குமரமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியை சுற்றி, குமரமூடி, கரீக்கையூர், அரக்கோடு, குள்ளங்கரை, முடியூர், வக்கனாமரம், மெட்டுக்கல் என 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளது.

    இந்த பகுதிகளில் அதிகளவிலான பலாமரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன.

    யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் குட்டியுடன் சுற்றி திரியும் யானை கூட்டம் நேற்று குமரமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

    நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த யானை கூட்டம் அங்கிருந்த பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து சென்றது.

    இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீடுகளை விட்டு வெளியில் வரவும் பயமாக உள்ளது.

    எனவே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டங்களை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது.
    • கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஊட்டி,

    கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தலின் படி, 75-வது சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில்‌ 7 நாட்கள்‌ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடந்த 11-ந் தேதி முதல்‌ நேற்று வரை 7 நாட்கள்‌ தினமும்‌ காலை 9 மணியளவில்‌ கல்லூரி முதல்வர் எபனேசர்‌ (பொறுப்பு) தேசியக்கொடியை ஏற்றினார். கடந்த 11-ந் தேதி போதை விழிப்புணர்வு பேரணி‌, 13-ந் தேதி தேசியக்கொடி பேரணி, பேச்சு, நடனம், மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ஜான்சி ராணி உள்பட பல்வேறு வேடங்களில் தோன்றி மாணவர்கள் அசத்தினர். தொடர்ந்து கடைசி நாளான நேற்று 76-வது சுதந்திர தினம் தொடங்கி உள்ளதை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தாவரவியல் துறை சார்பில், புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு புத்தகங்களை வாங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ரவி செய்திருந்தார்.

    ×