என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
    • வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி குன்னூர் குன்னூர் -மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. ரெயில் பாதையில் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் தற்போது மழையில்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியிலும் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன. மேலும் இவைகள் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முகாமிட்டு விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மலை ரெயிைல வழிமறித்தது தற்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை 3 யானைகள் மலைரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே நடமாடின. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரெயிலை இந்த யானைகள் மறித்தப்படி நின்றன. யானைகள் தண்டவாளத்தில் நின்றதால் மலை ரெயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமத்திற்குப்பின் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.

    • ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.
    • 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழைய தபால் நிலையம் பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை தின்றதால் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, மாணவியின் குடும்பத்தி னருக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3 லட்சத்திற்கான காசோ லையினை வழங்கினார்.

    பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ந் தேதி 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்தி ரையை தின்றதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இவர்களில் 4 மாண விகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இவர்களில் முகமது சலீம் என்பவரின் மகள் ஜெய்பா பாத்திமா, என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் மா ணவியின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோ லையினை வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நாசஜியா, ஆயிஷா மற்றும் செல்வி.குல்தூண் நிஷா ஆகி யோர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்ப டவுள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். இதில், ஊட்டி நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வட்டாட்சியர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • டிரைவர் காரை ஓரமாக ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பித்தார்.
    • இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகப்படியான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகள் உள்ள மரம் செடி கொடிகள் காய்ந்து வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி சாலை பகுதிகளில் அவ்வப்போது உலா வருகிறது.

    இதில் நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை அந்த காரை வழி மறித்து தாக்க முயன்றது. சுதாரித்து கொண்ட காரின் டிரைவர் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்த முற்பட்டார். அப்போது பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் கூச்சலிடவே அந்த யானை அவர்களை பார்க்கும் நேரத்தில், டிரைவர் காரை ஓரமாக ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பித்தார்.

    சிறிது நேரம் அங்கு நின்றிருந்த அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் மலைப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இந்த சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
    • பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஓரசோலை பகுதியில் நடந்த சாலை விபத்தில் கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து இறந்தவரின் உறவினரான மற்றொருவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ஒரசோலை சாலை பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து கூறியதாவது:- இந்த சாலையில் மட்டும் வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்கியவர்களில் 5 முதல் 6 பேராவது இறந்து விடுகின்றனர். பலர் பெரும் காயங்களுடன் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த சாலையில் 300 மீட்டர் அளவிற்கு வேகத்தடை இல்லாததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். இதனால் சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் இந்த சாலையை விபத்து பகுதியாக அறிவித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா-2023 கண்காட்சியை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    நாள்தோறும் பல் வேறு தலைப்புகளில் பேச்சாளர்களை கொண்டு சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு ஸ்ரீமதி வரலாற்று நாவல் ஆசிரியர் வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் என்ற தலைப்பில் சிறப்புரையும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிம்மதி நிறைந்தது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மணிஹட்டி சிவாவின் படுகா நடனம் ஆகிய நிகழ்சிகளும் நடைபெற்றது.

    இதில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.

    இதயைடுத்து இன்று நாஞ்சில்நாடன் சாகித்திய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் 'பூனையும் பாற்கடலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் 'காவல் பணியில் கடந்து வந்த தூரம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க உள்ளார். இதயைடுத்து ஊட்டி அரசு தொழில்நுட்பக்கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கும் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்.
    • ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    ஊட்டி:

    தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத கவர்னர் ஆர்.என்.ரவி, சில விளக்கங்கள் கேட்டு நவம்பர் 24-ந்தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

    தமிழக அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னரை சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.

    கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கவர்னர், அந்த மசோதாவை நேற்று முன்தினம் அரசுக்கே திருப்பி அனுப்பினார். மேலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

    இதனால் கவர்னரை கண்டித்து ஊட்டி ராஜ்பவன் மாளிகையை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பிய கவனர்னரின் நடவடிக்கையை கண்டித்து நடக்கும் இந்த போராட்டத்தில் அனைத்துக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அரசியல் கட்சியினர் போராட்ட அறிவிப்பால் இன்று ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஊட்டி ராஜ்பவன் மாளிகையை யாரும் நெருங்க முடியாதபடி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    250-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜ்பவன் மாளிகை பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணித்தபடி இருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் ராஜ்பவன் மாளிகை அருகே வர முடியாதபடி ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை நீலகிரியை ஒட்டிய கேரள மாநில பகுதியான வயநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி அவர் காலை 7.30 மணிக்கே காரில் வயநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் செல்லும் வழியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க கவர்னரின் காரை பின் தொடர்ந்து பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் வாகனங்களில் சென்றனர்.

    இதற்கிடையே கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் காலை 8 மணிக்கு ராஜ்பவன் அருகே உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜ்பவன் மாளிகை நோக்கிச் சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிலர் கைதாக மறுப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் தூக்கி வேனில் ஏற்றினர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    • மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி சத்து மாத்திரை கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என மாணவ-மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள், 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரையை சாக்லெட் சாப்பிடுவது போன்று போட்டி போட்டு 30 முதல் 60 வரை மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த 6 பேரும் ஊட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு, ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சேலம் தாண்டி வரும்போது அந்த மாணவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மற்றொரு மாணவியின் உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சம்பவம் நடந்த கடந்த 6-ந்தேதி கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றும், பள்ளிக்கூட பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

    மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் தொடர்பாக ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
    • வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.

    சமவெளி பகுதிகளில் தற்போது மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியை விட்டு வைக்காததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நீலகிரி மாவட்ட வன எல்லைக்கு படையெடுக்க தொடங்கிய உள்ளன. இவைகள் மேட்டுப்பாளையம், குன்னூர் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதி வழியாக இடம்பெயர்ந்து வருகின்றன.

    இவ்வாறு இடம்பெயர்ந்த குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு இருந்த முட்டைகோஸ்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துயது. இதனை விரட்டும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்து வருகின்றன. தற்போது குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் 5 யானைகள் முகாமிட்டு உள்ளது. அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது. எனவே இரவு நேரத்தில் ஒற்றையடி பாதையில் பொதுமக்கள் யாரும் நடந்து செல்ல வேண்டாம். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு சிறந்த சேவை மற்றும் பணியாற்றிய பெண்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தமிழக அரசு மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு கடன் உதவியும் வழங்கி வருகிறது.

    தமிழகத்தில் 8 லட்சத்து 23 ஆயிரத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44.840 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் 6 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. பல்வேறு தொழில் தொடங்க இதுவரை ரூ.300 கோடி அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளி ருக்கு கடன் வாங்கியதில் சென்னைக்கு அடுத்து நீலகிரி 2-ம் இடத்தில் உள்ளது.

    காலை சிற்றுண்டி திட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரத்தில் 63 பள்ளியில் தொடங்கப்பட்டு 3,500 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை தொ டருவதற்கு மாதந்தோறும் ரூ.1000-மும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் நீலகிரியில் 383 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

    பெண்களுக்கு சம உரிமை அளித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு. சுதந்திரம் பெரும் முன்னரே இங்கு பெண்களுக்கு ஓட்டு ரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே பெண்கள் பல தடைகளையும் தகர்த்தெ றிந்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வன அலுவலர் கவுதம், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் என்ற மாயன், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சிறுவர் மன்றத்தில் போலீசார் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.

    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வாறு உலா வரும் கரடிகள் குடியிருப்புகள் மற்றும் கடைகளை உடைத்து சேதம் செய்வது மட்டுமல்லாமல் பொது மக்களை தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலடா பகுதியில் நேற்று மாலை கரடி ஒன்று சுற்றி திரிந்தது.அந்த கரடி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கழிவு பொருட்களை சாப்பிட்டது.

    இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் பார்த்து, கரடியை விரட்ட முயற்சித்தனர். ஆனால் கரடி செல்லாமல் அங்கேயே நின்று உணவு கழிவு பொருளை தின்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அரவேனு, கேசலடா குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் வழங்கினார்
    • மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி காரபிள்ளு கிராம மக்கள் 40 பேர் மினி பஸ்சில் சென்றபோது பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரபிள்ளுவை சேர்ந்த பாஞ்சாலி என்பவர் உயிர் இழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத் காரபிள்ளு கிராமத்திற்கு நேரில்சென்று விபத்தில் பலியான பாஞ்சாலி குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் கடநாடுகுமார், முன்னால் ஒன்றிய செயலாளர் குண்டன், பாசறை மாவட்ட தலைவர் சுரேஷ், ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் ஆகிேயார் உடன் இருந்தனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் உள்ளது மாணிக்கல்லாடி கிராமம்.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (45). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவியுடன் அந்த பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை போட்டதாகவும் தெரிகிறது. அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கண்ணதாசனின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து கண்ணதாசன் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கண்ணதாசனும் கடந்த சில நாட்களாகவே சோகத்துடன் காணப்பட்டார்.

    யாரிடமும் சரியாக பேசாமல் மவுனமாகவே இருந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை 2 மணிக்கு கண்ணதாசனின் வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகி ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் கண்ணதாசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர் எப்படி இறந்தார் என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கண்ணதாசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரிடம் நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×