என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • நாட்டில் நல்ல மழை பொழியவும்‌, விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.‌

     பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடாலயத்தினர் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நாட்டில் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து திருமுருக கிருபானந்த வாரியர் சாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. தீப ஆராதனை, சாதுக்கள் வழிபாடு மற்றும் அருளாசி வழங்குதலும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. விழாவில் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மடாலயத்தினர் மற்றும் அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், இருக்கூர், கபிலக்குறிச்சி , பெரியசோளிபாளையம், தி. கவுண்டம்பாளையம் ,திடுமல், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர், கொத்தமங்கலம் ,குறும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி , சோழசிராமணி ,சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி குப்பரிக்காபாளையம், மணியனூர், நல்லூர், குன்னமலை, மாணிக்கநத்தம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று சனிக்கிழமை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

    சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

    • வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8).
    • இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8). இந்த சிறுவன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் . நேற்று இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது. இதில் விஷம் ஏறி மயங்கி கிடந்த சிறுவன் ஹரீஷை மீட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இச்சம்பவம் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ேமலும் சிறுவனை கடித்த பாம்பை கண்டுபிடித்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

    • ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது.
    • ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனவராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன் (40). கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை அரியலூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு சேலம் நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் இரவு 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் அவர்கள் வந்த ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது. இதில் ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் எதற்காக சேலம் சென்றார்கள்? விபத்தான ஜீப்பை ஓட்டி வந்தது மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜனா? அல்லது வேறு யாராவது ஓட்டி வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது.

    எருமப்பட்டி:

    நாமக்கல் அடுத்த எருமப்பட்டி வரகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணிகண்டனை ஒரு கும்பல் பின் தொடர்ந்து வந்தது.

    வெட்டிக் கொலை

    பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது. தொடர்ந்து அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குைலந்த வக்கீல் மணிகண்டன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழந்தார்.

    இதையடுத்து அந்த மர்ம கும்பல் மீண்டும் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் வக்கீல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

    போலீசுக்கு தகவல்

    இதுப்பற்றி தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், டி.எஸ்.பி. தனராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் போலீசார் கொலைசெய்யப்பட்ட வக்கீல் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வக்கீல் மணிகண்டன் கொலை செய்து போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் ரியல் எஸ்டேட் தகராறில் ெகாலை செய்யப்பட்டாரா, அல்லது வேறுகாரணமாக என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
    • கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது செம்மடையில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது. இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த அங்கம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் படுகாயமடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளசில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து கனமழை கொட்டியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர், கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளசில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து கனமழை கொட்டியது.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • கார் டிரைவரான இவரை நேற்று முன்தினம் பொட்டிரெட்டிப்பட்டி வாரச்சந்தை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
    • இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24).

    கார் டிரைவரான இவரை நேற்று முன்தினம் பொட்டிரெட்டிப்பட்டி வாரச்சந்தை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொட்டிரெட்டிப்பட்டி வாரசந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அலங்காநல்லத்தை சேர்ந்த சரவணன்(32), விஜய் (27), ஹரிகரன்(43), கருப்பையா(42), நவீன் குமார்(26), கிருஷ்ணமூர்த்தி(32) ஆகியோர் சேர்ந்து ராஜேஷை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    • தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு சைபர்மெத்ரின் 3 சதம் மற்றும் குயினால்பாஸ் 20 சதம் ஈசிகலந்த 500 மில்லி ரசாயன மருந்து கலவையை 120 லிட்டர் தண்ணீருடன் செடியில் மருந்து ஒட்டுவதற்கு 25 மில்லி சிலிகான் ஒட்டும் திரவம் கலந்து உடனே தெளிக்குமாறு விவசாயிகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அறிவுறுத்தியுள்ளார்.

      பள்ளிபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி பகுதியில் ெரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இதன் வழியாக நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கொக்கரா யன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.

      குளம்போல்...

      மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியின் வந்து சேரும். இவ்வாறு வரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. மழை நீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

      தானியங்கி மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக மோட்டார்சைக்கிள், வாகனங்களில் சென்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

      மழை நின்றவுடன் சாலை பணியாளர்கள் வந்து சாதாரண மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றி சரி செய்தனர்.

      • பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது.
      • மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது. வேலூர் பேரூராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் 30- க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான கடைகள் திறப்பதில்லை. அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து பூ கடை, வாழைத்தார் கடை, வெற்றிலைக் கடை, தின்பண்டங்கள் கடை, மளிகை பொருட்கள் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.

      மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

      பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைக்காரர்கள் பயணிகள் நிற்கும் இடம் வரை கடைகளை விரிவுபடுத்தி இருப்பதால் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் உள்ளே, வெளியே வரும் வழியில் ஆக்கிரப்பு கடையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பரமத்திவேலூர் அரசு கால்நடை மருத்துவமனை நுழைவாயில் இருபுறமும் கடையில் ஆக்கிரமிப்பு செய்து வாடகைக்கு விடுகின்றனர். இங்கும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

      ×