என் மலர்
நாமக்கல்
- தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள்.
- கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
நாமக்கல்:
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள். இதனால் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
சி.சி.டி.வி கேமிரா
அதில் கடைகளின் உள்ளே அதிகமாக பணம் ஏதும் வைத்திருக்க கூடாது. நகராட்சி விதிப்படி சி.சி.டி.வி. கேமிராக்களை கடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்திருக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா இல்லை என்றால் தற்காலிகமாக பாதுகாவலர்களை போட வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நகை, பணம், செல்போன் மற்றும் அவரது உடைமைகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக வரும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அவர்களை செல்போனில் படம் எடுத்து போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
கடைகளை பூட்டும் போது ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும். அவ்வாறு பூட்டாமல் விட்டால் திருடர்கள் உள்ளே புகுந்து திருட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயமாக ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும்.
திருடர்கள் கடை உரிமையாளர்களையோ வாடிக்கையாளர்களையோ திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பணியா ளர்களுக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் காவல் அறிவுறுத்தலை தெரிவிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் போக்குவ ரத்திற்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த விழிப்புணர்வு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பரமத்திவேலூர் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
- முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், இருக்கூர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி குப்பரிக்காபாளையம், மணியனூர், நல்லூர், குன்னமலை, மாணிக்கநத்தம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
- மஞ்சுளா சென்ற மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 56). இவருடைய மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
விபத்து
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மஞ்சுளா சென்ற மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் கண், சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவரது உடல் அனுப்பப்பட்டது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு மரியாதையுடன் மஞ்சுளாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசு மரியாதை
இதனை தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் நேற்று அவருடைய சொந்த ஊரான குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று மஞ்சுளாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி கலெக்டர் சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அரசு அதிகாரிகள் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கலெக்டர் உமா, மஞ்சுளாவின் கணவரிடம் வழங்கினார்.
மஞ்சுளாவின் கணவர் ஈஸ்வரன் கூறுகையில் எனது மனைவி விபத்தில் மூளை சாவடைந்து 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி உள்ளார். எனது மனைவியின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆய்வு
இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருந்தி வாழ அறிவுரை
அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.
அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில் குழந்தை தொழிலாளர்களை கடையில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகள் தீப்பற்றாத கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு இருப்பு விவரங்களை அதிகாரிகள் கேட்கும் போது பதிவுகளை காண்பிக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
- முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
- விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இதன் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 3-ந் தேதி முதல் 89 ரூபாயாகயும், முட்டை கோழி விலை 102 ரூபாயாகவும் நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காட்டை சேர்ந்த வர்கள் சண்முகம் (70)-நல்லம்மாள் (65) தம்பதி. கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி அதிகாலையில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி சண்முகத்தையும், குரல்வளையை அறுத்து நல்லம்மாளையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகையும் திருடி சென்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனால் கொலையான தம்பதியின் உறவினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறுகையில், இறந்த சண்முகத்தின் குடும்பத்தாருக்கு எதிரிகளே இல்லாத சூழ்நிலையில் வீடு மாறி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் கொலை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.
- காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அனுமதியின்றி டெம்போ வாகனத்தில் மணல் எடுப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காவிரி ஆற்றில் டெம்போவில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதனையடுத்து போலீசார் டெ ம்போ வாகனத்தை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ய அனிச்சம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
இரவு முழுவதும்
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.
அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வானம் பகல் ேநரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் ரோடு, கோட்டை ரோடு, நேதாஜி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் ரோட்டில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து குளிர் காற்று வீசியது.
இந்த ஆண்டு பருவமழை உரிய பெய்யாததால், மானாவரி பயிர் விதைப்பு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது காலம் கடந்து உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் விபரம் வருமாறு:-
நாமக்கல் 58, எருமப்பட்டி 60 , குமாரபாளையம் 85.40 , மங்களபுரம் 34.60, மோகனுர் 77, பரமத்தி வேலூர் 60, புதுச்சத்திரம் 14.40 , ராசிபுரம் 18, சேந்தமங்கலம் 39, திருச்செங்கோடு 15, கொல்லிமலை (செம்மேடு) 27.
மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 488.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
- கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ரெயிலில்...
விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைது
சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.






