என் மலர்
நாமக்கல்
- செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.
- செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.
மனைவி கொலை-கணவன் தற்கொலை
இந்த நிலையில் நேற்று செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் போது அவர்களது மகன், மகள் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது.
இது பற்றி அக்கம் பக்கத்தி னர் மங்களபுரம் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான தகவல்கள்
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து மனைவியை செல்வராஜ் எதற்காக கொலை செய்தார்? என விசாரணை நடத்தியதில் உருக்கமான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
கொலையுண்ட ராஜாமணியின் மகன் கார்த்திக் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜாமணியின் அண்ணன் தேவேந்திரன் என்பவரின் மகள் மகேஸ்வரிக்கும், கார்த்திக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ராஜாமணி முன்னின்று நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் செல்வ ராஜுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் மனைவி ராஜாமணி யிடம் எனது மகனுக்கு ஏன் உன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்தாய்? என்று அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து செல்வராஜ் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்றும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வராஜ் அவரது மனைவி ராஜாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதில் கடும் கோபம் அடைந்த செல்வராஜ் மனைவி என்றும் பார்க்காமல் ராஜாமணியின் கழுத்தை சேலையால் இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.
சோகம்
தொடர்ந்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது.
- மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காவேரி, ஆவாரங்காடு, வெப்படை, ஆலாம்பாளையம், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைசுமார் 4 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
வழக்கமாக பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் அந்த மழை தண்ணீர் பள்ளிபாளையத்தில் உள்ள வடிகால்கள் மூலம் காவிரி ஆற்றில் கலக்கும். தற்போது பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வடிகால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தண்ணீர் செல்ல குழாய் மட்டும் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக இன்று அதிகாலை 3 மணி முதல் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மழை வெள்ளம் புகுந்தது.
அதிகாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் பள்ளிபாளையம் பகுதிக்கு வந்தது. பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. தொடர்ந்து பஸ் செல்ல முடியவில்லை. இதையடுத்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாகதீயைணப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்த பயணிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே தொடர்ந்து மழை வெள்ளம் ஆறாக ஓடிக் கொண்டு இருப்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. காலை 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி சென்றனர். மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-10, குமாரபாளையம்-74, நாமக்கல்-6, புதுச்சத்திரம்-2.30, ராசிபுரம்-23, சேந்தமங்கலம்-20, திருச்செங்கோடு-80, கொல்லிமலை செம்மேடு-21.
- காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
- கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் ஊராட்சி, காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும் 63,328 எருமையினங்களுக்கு என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி பணி 15 ஊராட்சி ஒன்றியங்களில் 105 குழுக்கள் ஏற்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசிப் பணியினை மேற்கொள்ள உள்ளது.
இந்த வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் கிராமம், காட்டுப்பாளையத்தில் இன்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இளநகர் ஊராட்சியில் நடைபெறும் முகாமில் 7 கிராமங்களை சேர்ந்த 348 பசுக்கள், 173 எருமைகள் என மொத்தம் 521 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருமை ஆகிய கால்நடைகள் இன்று முதல் 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களில் நடைபெறும். பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து தெரிவிக்கப்படும்.
எனவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.
இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு டாக்டர் நடராஜன், துணை இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, உதவி இயக்குநர் டாக்டர் மருதுபாண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது.
- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாள பேட்டை பகுதியில் வசிப்பவர் விமலா, மாதேஸ்வரன் தம்பதி. இவர்களது 2 வயது மகள் ஹரிணி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியை முகத்தில் கடித்தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இதேபோல் நேற்று இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:-
வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
- விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார்.
- இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி விஜயகுமார் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள்.
- கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
நாமக்கல்:
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள். இதனால் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
சி.சி.டி.வி கேமிரா
அதில் கடைகளின் உள்ளே அதிகமாக பணம் ஏதும் வைத்திருக்க கூடாது. நகராட்சி விதிப்படி சி.சி.டி.வி. கேமிராக்களை கடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்திருக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா இல்லை என்றால் தற்காலிகமாக பாதுகாவலர்களை போட வேண்டும்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நகை, பணம், செல்போன் மற்றும் அவரது உடைமைகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக வரும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அவர்களை செல்போனில் படம் எடுத்து போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
கடைகளை பூட்டும் போது ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும். அவ்வாறு பூட்டாமல் விட்டால் திருடர்கள் உள்ளே புகுந்து திருட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயமாக ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும்.
திருடர்கள் கடை உரிமையாளர்களையோ வாடிக்கையாளர்களையோ திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பணியா ளர்களுக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் காவல் அறிவுறுத்தலை தெரிவிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் போக்குவ ரத்திற்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த விழிப்புணர்வு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பரமத்திவேலூர் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
- முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், இருக்கூர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி குப்பரிக்காபாளையம், மணியனூர், நல்லூர், குன்னமலை, மாணிக்கநத்தம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
- மஞ்சுளா சென்ற மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 56). இவருடைய மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
விபத்து
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மஞ்சுளா சென்ற மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் கண், சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவரது உடல் அனுப்பப்பட்டது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு மரியாதையுடன் மஞ்சுளாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசு மரியாதை
இதனை தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் நேற்று அவருடைய சொந்த ஊரான குச்சிபாளையம் வெள்ளக்கல்காடு கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பங்கேற்று மஞ்சுளாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உதவி கலெக்டர் சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அரசு அதிகாரிகள் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கலெக்டர் உமா, மஞ்சுளாவின் கணவரிடம் வழங்கினார்.
மஞ்சுளாவின் கணவர் ஈஸ்வரன் கூறுகையில் எனது மனைவி விபத்தில் மூளை சாவடைந்து 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி உள்ளார். எனது மனைவியின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆய்வு
இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருந்தி வாழ அறிவுரை
அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.
அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் பாதுகாப்பினை உறுதி செய்யவும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு கூட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில் குழந்தை தொழிலாளர்களை கடையில் ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகள் தீப்பற்றாத கட்டிடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள உரிமம் பெற்ற தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை வாங்க வேண்டும். பட்டாசு இருப்பு விவரங்களை அதிகாரிகள் கேட்கும் போது பதிவுகளை காண்பிக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
- முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
- விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இதன் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த முட்டைக்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 3-ந் தேதி முதல் 89 ரூபாயாகயும், முட்டை கோழி விலை 102 ரூபாயாகவும் நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.






