என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே ஊர்காவல் படை வீரரின் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் கத்தரிப்புலம் கிராமம் பனையடிகுத்தகை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் மணிவண்ணன் (வயது30). இவர் வேதாரண்யம் ஊர்க்காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.
இவருக்கு சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு கூரை வீடுகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் தனது சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக அருகிலுள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவில் உணவு பரிமாறுவதற்கு தங்கள் வீட்டில் உள்ள வாழை மரத்தில் இருந்து வாழை இலை எடுக்க வந்துள்ளார். அப்போது தனது 2 கூரை வீடுகளும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.
இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவினால் விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது வீட்டுக்கு தீவைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் தாசில்தார் முருகு மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை வழங்கினர்.
நாகை அருகே ரேஷனில் வழங்கிய விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரிசி மூட்டையை சாலையில் வீசி சென்றனர். தொடர்ந்து இதேபோல் அரிசி வழங்கினால் கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே டாடா நகர், சேவாபாரதி மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். டாடா நகரில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் விலையில்லா அரிசியில் புழுக்கள் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டனர். அதற்கு அவர், அடுத்த மாதம் வழங்கப்படும் அரிசியில் புழுக்கள் இருக்காது என்று கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த அரிசியை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த ரேஷன் கடையில் வழங்கிய விலையில்லா அரிசியில் அதிக அளவில் புழுக்கள் இருந்தது. மேலும் துர்நாற்றம் வீசியது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மீண்டும் ரேஷன் கடை ஊழியரிடம் இது தொடர்பாக புகார் கூறினர். அவர் சரியாக பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை மூட்டையுடன் சாலையில் தூக்கி வீசினர்.
தொடர்ந்து இதேபோல் பயன்படுத்த முடியாத பொருட்களை மீண்டும் வினியோகம் செய்தால் ரேஷன் கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரித்து விட்டு பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
ரேஷனில் வழங்கிய அரிசியில் புழுக்கள் கிடந்தால் அரிசி மூட்டையை பொதுமக்கள் சாலையில் வீசிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி விட்டு உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை செம்மரக்கடை தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(வயது 52). இவர், தோணித்துறை சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை மூடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிவாஸ்(26) என்பவர், தனது நண்பருடன் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். பின்னர் அவர்கள் ஆம்லெட் தரும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு ஜாகிர் உசேன், ஓட்டலில் எல்லாம் முடிந்து விட்டது. வியாபாரம் நடக்கும் இடத்தில் வைத்து மது குடிக்கலாமா? என்்று கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற நிவாஸ் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து ஓட்டலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் ஜாகிர் உசேன மற்றும், ஓட்டல் கணக்காளர் அப்துல்லா கான் ஆகிய 2 பேரையும் கட்டையாலும், பாட்டிலாலும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவாஸ் மற்றும் அவர்கள் நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மது குடித்ததை தட்டி கேட்டவரை தாக்கி, ஓட்டலை அடித்து நொறுக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு குடிமுறை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) வீரசோழன் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து விளக்கி் பேசினார். தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், தடுப்பூசி போடும் முறை, தடுப்பூசி போட்ட பின்னர் அரைமணி நேரம் ஓயவு எடுக்க சொல்லுதல் ஆகியவை குறித்து செவிலியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கொரோனா மருத்துவ பயிற்சியாளர்கள் ராகவன், அருண்பிரசாத், திட்ட அலுவலர் வீரச்செல்வன் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
சீர்காழி:
சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் சீர்காழிக்கு வந்தது. அப்போது தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளின் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயத்தை பாதிக்கும் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழக அரசு உடனடியாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் முருகன் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுவதை நிறுத்தி் கொள்ள வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
அப்போது விவசாய சங்க தலைவர்கள் விசுவநாதன், சிவப்பிரகாசம், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாகையில் மகளை திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தையல் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைகுளம் கீழ்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது50). இவர் மேலகோட்டைவாசல் பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவரது மகளை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்வேளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
அக்கரைகுளம் அண்ணாநகரைச் சேர்ந்த கமல்நாத் (28) என்பவர் ஏன் உனது மகளை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தாய் என்று கேட்டு கார்த்திகேயனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் டெய்லர் கடையில் இருந்தார். அப்போது கமல்நாத் மற்றும் அவரது நண்பர் நாகை மருந்து கொத்தளரோடு பகுதியைச் சேர்ந்த சிவா (29) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கார்த்திகேயனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமல்நாத், சிவா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையில் சிவசேனா கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர தலைவர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் அணி மாநில செயலாளர் சிங்கார வடிவேலன், மண்டல தலைவர் வின்சென்ட், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்து மதம் குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிமாநில மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த தங்கையன் மனைவி மீனா(வயது45) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாவை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதை போல கோவில் கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நாகை நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி தேடாசெல்வம்(63), சங்கமங்கலம் சுடுகாடு அருகே சாராயம் விற்ற குற்றம்பொருத்தானிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர் பணி வழங்க வேண்டும் என எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆலைவளாகத்தில் நேற்று 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி மற்றும் 94 ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாகை அரசு மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நாகை அரசு மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவரின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யப்பட்டது.
தொற்றுக்குள்ளாவர்களை காத்திருப்போர் அறையில் தங்க வைத்து பின்னர் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஓய்வறையில் வைத்து கண்காணிப்பது என 4 நிலைகளாக இந்த ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் நர்சுகள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களின் என தலா 25 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம், மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் லியாகத் அலி மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.
வேதாரண்யம் பகுதியில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கலையை இலவசமாக முதியவர் ஒருவர் கற்றுத்தருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் கோபால் (வயது65). இவர் பிறந்த தினத்தன்று புயல் வீசியதால் இவரை அந்த பகுதி மக்கள் புயல் கோபால் என்று அழை த்து வருகின்றனர். சிலம்பம் கலையில் கைதேர்ந்த இவர் பல்ேவறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பாட்டம் அழிந்து விடாமல் பாதுகாக்க கோபால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் இலவசமாக 10 ஆண்டுகளாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து கோபால் கூறியதாவது:-
தற்போது இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க இளைஞர்களுக்கு சிலப்பாட்டத்தை கற்று கொடுத்து வருகிறேன். தங்களை பாதுகாத்து கொள்ள பெண்களுக்கும் இந்த கலையை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் சிலம்பம் கற்று கொள்ள வருகின்றனர் என்றார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் அழிந்து விடாமல் மாணவ-மாணவிகளுக்கு மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் கோபாலை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அஜிதா, மாவட்ட ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
சோழன் கஜா புயலின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சவுக்கு மரங்கள் மற்றும் பணப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் இதுநாள் வரை நிவாரணம் வந்து சேரவில்லை. எனவே பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கணேசன்:- பழைய கல்லார், பரவை ஆகிய 2 இடங்களில் அமைந்துள்ள சந்தை பகுதியில் சோலார் வசதி கொண்ட உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
சரபோஜி:- நாகை-தேமங்கலம் இடையே சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமாமகேஸ்வரி (தலைவர்):- உறுப்பினர்கள் பதவி ஏற்று ஒரு ஆண்டு காலம் நிறைவு பெற்று விட்டது. நாகையில் இருந்து மங்கநல்லூர் செல்லும் சாலையில் பள்ளிகள், கோவில்கள் உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையிடம் தெரிவித்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வேகத்தடை அமைக்கவில்லை. விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்திற்கு முறையாக பயனாளிகளை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






