என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோகூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையில் டாக்டர்கள் முருகேஷ் குமார், பிரபு, கயல்விழி, விக்னேஷ், தீபிகா, ஜனனி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வடகரை, கோகூர், ஆணைமங்கலம், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 693 பேர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி உறுப்பினர்கள். சுகாதார ஆய்வாளார்கள், கிராம செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே ஏரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் பகுதியில் சாராயம் விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உத்தமசோழபுரம் புகழேந்தி தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் சக்திவேல் (வயது21) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கோட்டைவாசல்படி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் நாகை கோட்டை வாசல் பகுதியில் இருந்து தம்பிதுரை பூங்கா வரை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேதாரண்யம் அருகே போலி மது தயாரிப்பு கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கார்-மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி, முதல்நிலை காவலர் பால்ராஜ் மற்றும் போலீசார் வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பகுதியில் போலி மதுபானம் தயாரித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு 35 லிட்டர் கொண்ட 2 ஸ்பிரிட் கேன்களும், 703 போலி மது நிரப்பப்பட்ட பாட்டில்களும், ஏராளமான காலி பாட்டில்களும், மது நிரப்பி பாட்டில்களுக்கு மூடிபோடும் எந்திரமும், மதுபாட்டில்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றும் இருந்தது தெரிய வந்தது.

    போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பியோடி விட்டனர். கார் டிரைவர் நெய்விளக்கு கீழக்காடு இளையராஜா(வயது 36) என்பவர் பிடிபட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகை உள்பட 29 தபால் அலுவலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது என கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அஞ்சலக கண்காணிப்பாளர் அஜாதசத்ரு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.அதி்ல் கூறியிருப்பதாவது:-

    நாகை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நாகை தலைமை தபால் அலுவலகம், திருவாரூர் தலைமை தபால் அலுவலகம்,, மஞ்சக்கொல்லை துணை தபால் அலுவலகம், சிக்கல் துணை தபால் அலுவலகம், கீழ்வேளூர் துணை தபால் அலுவலகம், கூத்தூர் துணை தபால் அலுவலகம், திருவாரூர் கலெக்டர் அலுவலக தபால் அலுவலகம், காரைக்கால் துணை தபால் அலுவலகம்,, ஏனங்குடி துணை தபால் அலுவலகம் உள்பட 29 தபால் அலுவலகங்களில் வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி 27-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் புதிய ஆதார் அட்டை பெறலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி, புகைப்படம், செல்போன் எண், பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம். பிறந்த குழந்தைகள் முதல் ஆதார் பதிவு செய்யும் வசதி இந்த முகாமில் உள்ளது.

    புதிய ஆதார் பதிவு செய்ய, முகவரி உள்ளிட்ட மாற்றம் செய்ய பான்கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன்கார்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், அஞ்சலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்த படிவம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேதாரண்யம் அருகே வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, மூலக்கரை, ஓரடியம்புலம், பஞ்சநதிக்குளம் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்றும் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
    நாகப்பட்டினம் அருகே வருவாய்த்துறை அலுவலர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேதையன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

    மாவட்டங்களில் அதிகளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மேலப்பிடாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேளாங்கண்ணி:

    பெட்ரோல்-டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழையூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.விவசாய சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் வெங்கட்ராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராமலிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    நாகையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை நீலா தெற்கு வீதியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் பாது கூறியதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்று சிறப்புமிக்க துறை. மனிதர்களின் ஒழுக்கம், பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை எடுத்து சொல்லி மற்றவர்களுக்கு கொண்டு செல்லும் துறை ஆகும்.

    உலகபுகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை மாமன்னர் ராஜராஜசோழன் நிர்மானம் செய்துள்ளார். அதை பார்க்கும் போது தமிழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை உணரமுடிகிறது.

    இந்துசமய அறநிலையத்துறைக்கு சொத்துக்கள் நிறைய உள்ளன. ஆனால் இதன் மூலம் வரும் வருமானம் கேள்விக்குறியாக உள்ளது. வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக தான் நாகை, திண்டுக்கல், கடலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர் உள்பட 9 இடங்களில் புதிய இணை ஆணையர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மண்டலத்துடன் இருந்த திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரிய கோவில்கள் 388, சிறிய கோவில்கள் 2ஆயிரத்து 400 என மொத்தம் 2 ஆயிரத்து 788 கோவில்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட நாகை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் மட்டும் இன்றி பள்ளிகள், கல்லூரிகளும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவில் சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கிரிதரன், இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர்கள் ராணி (நாகை), ஹரிஹரன் (திருவாரூர்), செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிக்கல்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர், மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், மாநில குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், சந்திரசேகர், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல சிக்கல். கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபா‌‌ஷ் சந்திரபோஸ், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

    வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கோவை. சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வெற்றியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகூரைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவருடைய மகன் பொன்னியின் செல்வன் (வயது28). இவர் நாகை-திருவாரூர் சாலையில், நாகை பெருமாள் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச்செல்ல முயன்றாா். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பொன்னியின் செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்னியின் செல்வன் உயிரிழந்தார். பொன்னியின் செல்வன் பஸ்சில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என நாகை டவுன்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×