என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் அருகே பணியில் இருந்த மின் ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 59). இவர் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கராசு துணை மின் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தங்கராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த நெப்போலியன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நெப்போலியனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வேளாங்கண்ணி லாட்ஜில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கோவை மாவட்டம் வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50).

    இவர் கடந்த 27ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெற்கு தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவருடன் கோவை மாவட்டம் குப்பிபாளையம் செம்மண்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி ராணி (41) மற்றும் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், 10 வயது ஆண் குழந்தை, ஏழு வயது பெண் குழந்தை ஆகியோரும் அந்த அறையில் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் அறையின் கதவு நேற்று முழுவதும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது ராணி இறந்து கிடந்தார். அவருடன் கிருஷ்ணன், 2 குழந்தைகள், பெயர் தெரியாத நபரை காணவில்லை.

    இது குறித்து மேலாளர் வேளாங்கண்ணி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராணியின் மூக்கில் ரத்தம், வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பது தெரியவந்தது. தொடர்ந்து விடுதியில் போலீசார் விசாரித்தனர். அப்போது அறை எடுத்த கிருஷ்ணனை மட்டும் நேற்று காலையில் பார்த்ததாகவும் மற்ற நபர்களை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராணியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

    தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.இந்த ஆலயமானது வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் அழைத்து வருகின்றனர்.

    இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் இறைச்சி உண்ணாமல் இருந்து 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி தவக்காலம் தொடங்கியது. இந்த தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருந்து 35 பேர் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதால் வேளாங்கண்ணியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    மேலவாஞ்சூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    நாகூர்:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போலீசார், மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி யசோதா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இரவு நேரங்களில் சோதனை சாவடியில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணகளை சரிபார்த்து அனுப்பிவைக்கின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.
    நாகூர் அருகே ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழலக கட்டிடத்தின் மீது மோதியது.
    நாகூர்:

    திருவாரூரில் இருந்து ஒரு லாரி காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்ற வந்து கொண்டிருந்தது. அப்போது நாகூர் அருகே ஒக்கூரில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழலக கட்டிடத்தின் மீது மோதியது. இதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் பயணிகள் நிழலக கட்டிடமும், லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார பணிகள் திட்ட இயக்குனர் ராஜா, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, கல்வி துறை அலுவலகங்களில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு, தாசில்தார் மாரிமுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் அனைத்து துறை அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தச்சர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது64). இவர் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து. தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 85 சதவீத பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணபலன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    அதன்படி நாகை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி என 11 பணிமனைகளில் இருந்து 521 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 112 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் இருந்து 217 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தில் 85 சதவீத பஸ்கள் இயக்கப்பட வில்லை. அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 48 பஸ்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 14 பஸ்களும் மட்டுமே நாகைக்கு இயக்கப்பட்டது.

    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மண்டலத்தில் இருந்து 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. சொற்ப அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு வந்த பயணிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் ஆட்டோக்களில் சென்றனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து ெகாள்ள வந்தவர்கள் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர்.

    நாகையில் இருந்து புதுச்சேரி, சென்னை, மதுரை என நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பயணிகள் கூட்டமாக காணப்படும் நாகை பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.

    வேலை நிறுத்தம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பஸ் நிலையம் மற்றும் பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.. நாகையில் தனியார் பஸ்கள் வழக்கம் ஓடின.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் மாற்றுத் திறனாளிகள் அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதைப்போல் இங்கும் வழங்க கோரியும். தனியார் துறைகளில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கோரியும் சங்க தலைவர் சிக்கந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியல் செய்ய விடாமல் தடுத்தனர்.

    இதனால் சாலையின் ஓரமாக சுமார் 2 மணி நேரம் வெயிலில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகை மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த ஜே.பி.காலனி, வெளிப்பாளையம் அப்பாஸ் என்ற அருண்ராஜ் (வயது21), மற்றும் அக்கரை குளம், வெளிப்பாளையம் ஆனந்த்(25) ஆகிய இருவர் மீதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரைபடி கலெக்டர் பிரவீன் பி நாயர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து இருவரையும் மத்திய சிறையில் அடைத்தனர்.


    சிக்கலில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை அருகே சிக்கல் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிக்கல் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சிக்கல் கோவில் ஆர்ச் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நாகூர் சிவன் மேலவீதியை சேர்ந்த ஹசனா மரைக்காயர் (47) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.230 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    ×