என் மலர்
நாகப்பட்டினம்
- ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன.
- சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடும் குளிரை போக்க 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கோடியக்கரை பகுதிகளில் மழை பெய்து மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.
குறிப்பாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன. மேலும் கோடியக்கரையில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.
மேலும் கொசு உள்ளான், பட்டாணி உப்புக்கொத்தி, மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், பூநாரை, செங்கால் நாரை, கரண்டி மூக்கன், வெண்கொக்கு, நீர் காகம், மீசை ஆலா, பருத்த அலகு ஆலா, ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
- நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
- கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப் பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் கடந்த 18-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால் நாகை மீனவர்கள் இன்று 7-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை கரையோர பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.50 லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
- திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது.
- அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, திட்டச்சேரி, திருமருகல், திருப்புகலூர், தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, சியாத்தமங்கை, வாஞ்சூர், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் ஆங்காங்கே குடைப்பிடித்தபடி நடந்து சென்றததை பார்க்க முடிந்தது.
திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது. இதையடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குறுவை அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்யவும், ஈரப்பத அளவை 25 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகை கலெக்டர் அலுவலகம் அருகே பழைய நாகூர் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள நாகை மீனவர்கள் 21-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மேலும் கரையில் உள்ள மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். போதுமான மீன்வரத்து இல்லாத காரணத்தால் நாகை துறைமுகத்தில் மீன்களின் விலையும் உயர்ந்தது.
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்):-
நாகப்பட்டினம்-82.02, திருப்பூண்டி-84, வேளாங்கண்ணி-47.06, திருக்குவளை-63.08, தலைஞாயிறு-45.20, வேதாரண்யம்-42.02, கோடியக்கரை-40.08. அதன்படி மொத்த மழை அளவு-394.06 மி.மீட்டர், சராசரி மழை அளவு-56.37 மி.மீட்டராகவும் பதிவாகி உள்ளது.

கோட்டூர் அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதேபோல் தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜி ராஜபுரம், மருவத்தூர், மன்னார்குடி, பரசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக கோட்டூர் அருகே புழுதிகொடி பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி குமார் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வேதாரண்யத்தில் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது.
- மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உணவுக்கு தேவையான உப்பும், 6 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி பணிகள் ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல் ஜனவரி மாதம் தொடங்கிய உற்பத்தி பணிகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த 8 மாதங்களில் உணவு தேவைக்கான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 4 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த மழையால் உணவு தேவைக்கான உப்பு 50 ஆயிரம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

அகஸ்தியன்பள்ளியில் இருப்பு உள்ள உப்பு பனை மட்டை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.
மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து, உப்பு மழையில் கரைந்து விடாமல் இருக்க பனைமட்டை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தான் உப்பு எடுக்க இயலும். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவு பெற்றது. குறைந்த அளவே உணவுக்கு தேவையான உப்பு இருப்பு இருந்தாலும் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகிறது. உப்பு உற்பத்தியும் குறைந்து, உப்புக்கான விலையும் அதிகரிக்காதது மிகவும் கவலை அளிக்கிறது என்றனர்.
- 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
- படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகர ணங்களை பறித்த இலங்கை கடற் கொள்ளையர்கள் 8 பேர் மீது கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகானந்தம் (38), அருண் (27) ஆகிய 6 மீனவர்களும், நாகை நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ் (19) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நம்பியார் நகர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது 2 படகுகளில் வந்த 8 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சுற்றி வளைத்தனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், எஞ்ஜீன், செல்போன், ஜி.பி.எஸ். கருவி, லைட் பேட்டரி, வாக்கி-டாக்கி, 500 கிலோ மீன் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பு உபகரணங்களை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த 11 மீனவர்களும் நேற்று காலை நம்பியார் நகர் துறைமுகம் வந்தனர். இதுகுறித்து பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அனைவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிவசங்கர் என்பவர் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
- காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்..,
- மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, இவர் ஈழத்தமிழகர்கள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக விஜய் பேசியதாவது:-
மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்.., அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்கான குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா?
மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், விஜய் வாகனம் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.
விஜய் வேலை பெற்றுக் கொண்டு தொண்டர்களிடம் காண்பித்தபடி கையசைத்தார்.
- பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க.
- இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க..,
நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதவாது:-
மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். அந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. இந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. அதற்கான காரணங்களை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைத்தும் சொத்தையாக இருக்கும். அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது. ஐந்து நிமிடம்தான் பேசனும், 10 நிமிடம்தான் பேசனும்..,
நான் பேசுறதே 3 நிமிசம்தான். அந்த நேரத்தல நான் அத பேசக்கூடாது, இத பேசக் கூடாதுன்னு சொன்னா? நான் எதைத்தான் பேசறது? அரியலூருக்கு போகும்போது, ஒரு ஏரியாவுக்குள் நுழையும்போதே மின்சாரம் தடை. திருச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்பீக்கருக்கு சென்ற வயர் கட்.
உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் இங்கே வருகிறார் என்று வச்சிக்கோங்க., பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க. இதேபோன்ற கண்டிஷன் போடுவீங்க.., இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க.., கட் பண்ணிதான் பாருங்களேன். முடியாதுல... பேஷ்மென்ட் அதிரும்ல. நீங்கதான் மறைமுக உறவுக்காரர்கள் ஆயிற்றே. பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
நேரடியாகவே கேட்கிறேன். CM சார் மிரட்டு பார்க்கிறீங்களா?. அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். கொள்கையை பேருக்கு வச்சிக்கிட்டு, குடும்பத்தை வச்சி கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமான உழைச்சி சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?.
இவ்வாறு விஜய் ஆவேசகமாக பேசினார்.
- தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.
அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-
உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






