என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
    X

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

    • ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன.
    • சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடும் குளிரை போக்க 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கோடியக்கரை பகுதிகளில் மழை பெய்து மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.

    குறிப்பாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன. மேலும் கோடியக்கரையில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.

    மேலும் கொசு உள்ளான், பட்டாணி உப்புக்கொத்தி, மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், பூநாரை, செங்கால் நாரை, கரண்டி மூக்கன், வெண்கொக்கு, நீர் காகம், மீசை ஆலா, பருத்த அலகு ஆலா, ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளன.

    இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×