என் மலர்tooltip icon

    மதுரை

    • துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
    • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.

    இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    இதற்காக நேற்று மாலை மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

    நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

    இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசை முதலமைச்சர் வழங்கினார்.

    அவருடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உடன் இருந்தனர்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என்று தெரிவித்து உள்ளார்.

    • நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.
    • முதல்வர் ஸ்டாலின் இரவில் புறப்பட்டு நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    தமிழகம் வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவுக்கு பின் கோயம்பத்தூர் விமானம் நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார்.

    நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நாளை மதியம் 12 மணியளவில் மீண்டும் டெல்லி செல்கிறார். இன்று தென்காசி, நெல்லையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

    • இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாக வேள்வியுடன் தொடங்கியது.

    பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.

    நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவின் துணை ஜனாதிபதிகாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக நாளை பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    இதற்காக இன்று மாலை மதுரை வருகை தரும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் நாளை காலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

    மீண்டும் அதே ஹெலிகாப்டரில் மதுரை திரும்பும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

    அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் கோவில்பட்டி சென்றார். இன்று காலை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் இரவு மதுரை வருகை தரும் அவர் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அண்ணா நகர் வழியாக சென்று தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

    இதேபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.

    39 தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    துணை ஜனாதிபதி, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

    மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள வக்கீல் புதுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் ரூபிணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனது பெரியம்மா செல்வராணியுடன் அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்த பணத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரிபார்த்தபோது, அதில் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது.

    அந்த பணம் யாருடையது, எதற்காக சாலையில் வீசிச் சென்றார்கள், ஹவாலா பணமா அல்லது எங்கிருந்தாவது திருடி கொண்டு வரும்போது பயத்தில் அந்த இடத்தில் விட்டுச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வுடன் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை போலீசாரை அழைத்து ஒப்படைத்த மாணவி பொன் ரூபிணிக்கும், அவரது பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

    • எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.
    • ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். முதலில் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வரும் வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நடைமுறைப்படுத்த கூடாது. பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போல் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திரள வேண்டும்.

    பல்கலைக்கழக மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தொடர்ந்து பா.ஜ.க.வின் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் போனதால் விரக்தி அடைந்துள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக அவதூறாக பேசிவருகிறார். எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.

    ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. புதிய சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற தமிழக முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. ஆணையம் இல்லாமலேயே மசோத சட்டம் கொண்டு வரலாம். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுயில் எதாவது ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு நடைபெறும்போது முடிவு செய்யப்படும் என்றார்.

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
    • கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் ஆறாத காயம் வடு ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பரபரப்பு இப்போது ஆரம்பித்துவிட்டது. மாலை நேரங்களில் அரசியல் விவாதங்கள், நாள்தோறும் சுவாரசியமான பரபரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது.

    கலை உலகில் மின்னும் நட்சத்திரமான விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார். கரூரில் 7 மணி நேரம் கூட்டம் காத்திருந்தது குறித்து அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்துவிடும் என்று யூகித்து, சரியான முறையில் கையாண்டிருக்கலாம்.

    அதிகமான கூட்டம் குறித்து அவருக்கு முன்னால் இருக்கக்கூடிய இயக்கத்தினர்கள் சொல்லி கூட்டம் அதிகமான தகவலை விஜய்க்கு தெரிவித்து இருக்கலாம். கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய அந்தப் பதட்டத்தில் விஜய் சென்னை சென்றுவிட்டார்.

    திருச்சியில் விடுதியில் தங்கியிருந்து ஒரு நாள் கழித்து கூட உயிர் பலியான குடும்பத்தினருக்கு நேரடியாக அவர் சென்று இரங்கல்களை தெரிவித்திருக்கலாம். 1994-ல் சென்னையில் நாங்கள் நடத்திய பேரணி கூட்டத்தில் உயிர் சேதம் நடந்துவிடக்கூடாது என்ற பயமிருந்தது. அதனை கட்டுக்கோப்பாக நடத்தினோம். லட்சக்கணக்கான தொண்டர்களை பாதுகாக்க 3000 தொண்டர் படைகளை உருவாக்கினோம்.

    ஆனால் கரூரில் 7 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் பொதுமக்கள் குழந்தைகள் கீழே மயங்கி விழுந்துள்ளனர். ஆதவ் அர்ஜூன், ஆனந்த் ஆகியோர் இது நடந்திருக்காமல் பார்த்து இருக்கலாம். அதிக கூட்டம் கூடும் இடங்களில் குழந்தைகளை கொண்டு போகாமல் தாய்மார்கள் தவிர்த்திருக்கலாம்.

    கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் ஆறாத காயம் வடு ஏற்பட்டுள்ளது. கருரில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அடுத்து இதுபோன்று இனிமேல் நடக்கும் கூட்டத்திற்கு பாதுகாப்பு முன்னேற்பாடு செய்ய வேண்டும்.

    தேர்தலில் இந்த சம்பவம் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கேட்கிறார்கள். என்ன சொன்னாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வரப்போகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எந்தஒரு பாதிப்பும் தி.மு.க.வுக்கு வராது. இப்போது நடத்தப்படும் யூகங்கள், கணக்கெடுப்பு போன்று தேர்தல் நடக்காது. புதிதாக வந்தவர் (விஜய்) பெருமளவு வெற்றி பெற்று விடுவார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

    காசா- பாலஸ்தீன போர் குறித்து டிரம்ப் பொய் சொல்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக பேரணிகள் நடத்தியுள்ளனர். நான் நாடாளுமன்றத்தில் பலமுறை பாலஸ்தீன மக்களுக்காக வாதாடியுள்ளேன். காசா படையெடுப்பு தாக்குதலை நிறுத்தவும், உக்ரைன் போர் தாக்குதலை நிறுத்தவும் வேண்டும்.

    தேஜஸ்வி இந்தியா கூட்டணியின் சார்பில் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய கூட்டணியில் இருந்து ஒருவர் விலகி உள்ளார். அதனால் பீகார் தேர்தலில் இந்த முடிவுதான் வரும் என யூகித்து சொல்ல முடியவில்லை.

    நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அவர் எதன் அடிப்படையில் தெரிவித்தார் என்று தெரியவில்லை. தினம் ஒரு அறிக்கை விடுகிறார். அவரது அறிக்கைக் கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது.
    • அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    31 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சாமானியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க.

    மகளிருக்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் தி.மு.க.வில் பிரிந்த அ.தி.மு.க. இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது.

    எங்கள் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.

    வைகை கரையில் சாலைகள் அமைத்து அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைப் படைத்தோம். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.

    170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், தி.மு.க. ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடையவில்லை.

    மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது தி.மு.க.

    இன்று ஊழல் வழக்கில் மேயர் இந்திராணி ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. இந்த புகாரில் மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது தி.மு.க. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 தி.மு.க. கவுன்சிலர்கள் இருந்தும், தி.மு.க.வால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.

    இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சியாக தி.மு.க.. இருக்கிறது. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்.

    தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்காக அலையவில்லை. அ.தி.மு.க. எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை.

    எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம்.

    அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம்.

    ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அ.தி.மு.க. வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
    • மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் மதுரை தல்லாகுளம் பகுதியில் எல்.கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். இதற்காக வாங்கிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு, நான் கொடுத்த ஆவணங்களை தர மறுக்கின்றனர். அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது போன்ற புகார்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும் என தெரிவித்த நீதிபதி, முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு, காவல் அதிகாரி சம்மன் அறிவிப்பு அனுப்ப இயலாது.

    முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.

    பிரிவு 173(3)-ன் கீழ் எந்தவொரு விசாரணையும், துணை போலீஸ் சூப்பிரண்டின் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் அதன் முடிவு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
    • நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சிறுவர்கள் காற்றில் பலூனை பறக்க விடுவார்கள். பட்டங்களை பறக்க விடுவார்கள். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் சிறு குழந்தை போல கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட அவல நிலையைதான் ஒவ்வொரு பிரிவினரும் வேதனையோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவேன் என்று கூறிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்து வாய் திறக்க மறுத்தார்.

    எதிர்க்கட்சி தலைவராக ஓடோடி சென்று ஆறுதல் கூறிய அவர், இப்போது வாய் திறக்க மறுப்பதன் விபரம் என்ன என்று தெரியவில்லை.

    தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்று கூறி வருகிறார்கள்.

    புதிய டி.ஜி.பி. நியமனத்தில் தாமதம் ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்கள்.

    ஒன்றரை மாதம் கழித்து அமைச்சர் ரகுபதி, டி.ஜி.பி. நியமனத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்கள்.

    மதுரையில் ராஜினாமா செய்த மதுரை மேயருக்கு பதிலாக புதிய மேயரையும் தேர்வு செய்ய முடியவில்லை. டி.ஜி.பி.யையும் நியமனம் செய்ய தமிழக அரசால் முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையும் தர முடியவில்லை.

    ஆகவே இயலாத அரசு இருக்க வேண்டுமா? என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

    தஞ்சாவூர் நெல் கொள்முதல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். எத்தனை லட்சம் டன் நெல் வீணானது என்று நமக்கே தெரியவில்லை.

    வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று முன்கூட்டிய கணித்த பிறகும், இன்றைக்கு நெல்மணிகளை ரோட்டிலே போட்டு வைத்து, விவசாயிகளின் வயிற்றிலே அடித்துள்ளது இந்த அரசு.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், காவல்துறையினர் என்று எல்லோருமே இந்த அரசு மீது அதிர்ச்சியில் இருக்கின்ற காரணத்தினாலே மக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு 2026-ல் முகூர்த்தம் குறித்துள்ளார்கள்.

    விவசாயிகளின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த பருவமழை காலத்தில் முதலிலே களத்திற்கு சென்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.

    இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

    • தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
    • கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ராட்சத பலம் வாய்ந்த தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும்.

    * அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.

    * தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.

    * தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது.

    * சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார்.

    * பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வராக உள்ளார்.

    * சரியான முடிவை எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    * கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது.

    மதுரை:

    நெல்லை அலவந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வின் அந்தோணி, தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழக முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு ஏற்றம் செய்திருந்தனர். அந்த வீடியோ எனக்கும் வந்திருந்தது. இந்த சர்ச்சைக்குரிய மிரட்டல் வீடியோவை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் டேக் செய்து வைத்திருந்தேன். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். அந்த வீடியோவை நான் எடிட் செய்து பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.சதீஷ், பி.மோனிடா கேத்தரின் ஆகியோர் ஆஜராகி, இந்த வீடியோ பதிவேற்றம் செய்த நடவடிக்கைக்கும் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு மனுதாரர் வழங்குவார். மேலும் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கும் மனுதாரர் கட்டுப்படுவார் எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினர்.

    அதைத் தொடர்ந்து, மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது. இந்த மனு குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    ×