என் மலர்tooltip icon

    மதுரை

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
    • இந்த போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி முற்றுகையிட்டனர்.

    அவனியாபுரம்

    பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

    இந்த போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இரு பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் இரு பிரிவுகளும் நீதிமன்றம் சென்றனர்.

    நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 4 ஆண்டுகளுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இரு பிரிவினர்களையும் அழைத்து கலெக்டர் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பலனில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக இருதரப்பினரும் கலெக்ட ரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒருதரப்பினருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அதிகாரி செயல்படுவதாக கூறி இன்று அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டியினர் முற்றுகையிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்துள்ளனர்.
    • இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் முத்துகுமார், ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் ஆன்மீக மையமாக கருதப்படும் மதுரை கோவில்கள் அதிகம் உடைய மாநகரமாகும். இங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் புராதன பெருமைகள் உடையது. இங்கு நடக்கும் திருவிழாக்கள், திருவிளையாடல் லீலைகள் பிரசித்தி பெற்றது.

    ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தெப்பத் திருவிழா, புட்டு திருவிழா, நரியை பரியாக்கிய லீலை, மண்டூக முனிவருக்கு சாப விமோசன லீலை சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலின் வலைவீசி மீன் பிடி திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

    இதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரி எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் வலைவீசி தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் அரசியல்வாதிகள் தற்போது காங்கிரீட் கட்டிடம், ெசட் அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள்.

    இந்த தெப்பக்குளம் அந்த பகுதிக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ளது. இங்கு கட்டிடம் கட்டுவதால் மீன் பிடி திருவிழாவை பக்தர்கள் காண முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர தெப்பக்குளத்தை சுற்றி கட்டிடம் கட்டுவது, நீர்வள ஆதார அமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது இந்த வலைவீசி தெப்பக்குளம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை இந்து சமய அறநிலைய துறையும் கண்டு கொள்ளவில்லை.

    ஆறு,ஏரி,குளங்களை ஆக்கிரமிக்கவோ, கட்டிடங்கள் கட்டவோ கூடாது. அப்படி கட்ட அனுமதித்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மதுரை வலைவீசி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி கட்டிடம் கட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    • மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டிப்போ முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (29-ந் தேதி) அரசை கண்டித்து மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அந்த அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்புள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மாநில தலைவர் கிருஷ்ணன், துணை பொது செயலாளர் தேவராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் பிச்சைராஜன், மாவட்ட செயலாளர் பால்முருகன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    மாதந்தோறும் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 86 மாத அகவிலைப்படி உயர்வு தொகை நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் காரணமாக இன்று காலை பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

    மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தலைமைக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பேட்டியளித்துள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரையில் அதிமுக ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அவர் இல்லாத அ.தி.மு.க.வை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் பலன் அளித்துள்ளது. அவர் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி பிரயோகித்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியை விட்டு பலர் விலக முடிவு செய்துள்ளனர். அதனை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியானவர் அல்ல. அ.தி.மு.க. பிளவால் தி.மு.க. தேர்தல்களில் வெல்லும் என்பது வரலாறு, உண்மையில் தி.மு.க.வுக்கு மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி உதவி செய்து வருகிறார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பேட்டியின் போது மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ,தேர்தல் பிரிவு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன், சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா,கண்ணன், பவுன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை பசுமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 93-வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை முனியாண்டிபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இவர்கள் பலகாலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பசுமலையில் மதுரை திருமங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் பொதுமக்களிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.மறியலால் சுமார் அரை மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆலோசனை படியும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை Labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதனை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம்.

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் சந்தேகங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் 04562-252130 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • பொதும்பு ஊராட்சியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
    • வடக்கு வருவாய் கோட்டத்தில் உள்ள 33 கிராமங்கள் பதிவு எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாக உட்படுத்தப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட சேவை மைய கட்டிடத்தில் புதிய சார்பதி வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதும்பு சார்பதிவாளர் அலுவலகமாக வடக்கு வருவாய் கோட்டத்தில் உள்ள 33 கிராமங்கள் பதிவு எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாக உட்படுத்தப்பட்டுள்ளது.

    • கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
    • கொலைக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மதுரை:

    மதுரை விளாங்குடியை அடுத்த கரிசல்குளம் அண்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் பூமன்காளை என்பவரின் மகன் பூமிநாதன் (வயது 19). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    அப்போது அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து பூமிநாதன் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்றனர்.அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக கரிசல்குளம் அய்யர் தெருவை சேர்ந்த திருவேட்டை என்பவரின் வீட்டுக்குள் பூமிநாதன் புகுந்தார்.

    இருந்தபோதிலும் அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொலைக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பூமிநாதன் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் அந்த பகுதியில் ரவுடி போன்று திரிந்து உள்ளார்.

    இந்த நிலையில் கரிசல் குளத்தை சேர்ந்த ஜீவா (21) என்பவரை பூமிநாதன் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர், அவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி ஜீவா தனது நண்பர்களான ஜீவமணி (25), அவரது சகோதரர் ராஜா (22), நவீன்பிரசாத் (24) ஆகியோர் உதவியுடன் நேற்று மாலை பூமிநாதனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து ஜீவா, ஜீவமணி, ராஜா, நவீன்பிரசாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் போலீசாரின் பிடியில் இன்று சிக்கினர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார்.
    • புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

    மதுரை:

    புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

    இந்தநிலையில் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

    ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

    • திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிரா மத்தில் 1914 -ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கே யநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவ லகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவுக்கு காங்கேயநத்தம், நக்க லக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்ன ம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை செயல்பட்டு வந்த சிந்துபட்டி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல ம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்ல ம்பட்டிக்கு செல்ல வேண்டும்.

    இந்த நடைமுறைக்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இட மாற்றம் செய்வதால் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி கோவிலில் த.மா.கா.வினர் வழிபாடு செய்தனர்
    • வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி.யின் 58-வது பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், மகபூப்பாளையத்தில் மாநில சிறப்பு அழைப்பாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    தெற்கு வாசல் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகையும், 47-வது வார்டு தலைவர் லியாகத் அலி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆபீக், உசேன் ஏற்பாட்டில் கொடியேற்றியும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தூய மரியன்னை தேவாலயத்தில் மதுரை மாவட்ட துணை தலைவர் சூசை ஏற்பாட்டில் சிறப்பு பிராத்தனை நடந்தது. மாநில இணை செயலாளர் பிரேம் குமார் ஏற்பாட்டில் காமராஜர் சாலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    மதுரை ஆவின் பால்பண்னை பாட்ஷா, சேகர், மாரிச்சாமி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    புதூரில் 11-வது சர்க்கிள் தலைவர் மாணிக்கவாசகர், 14-வது வார்டு தலைவர் புதூர் பாண்டி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு 64-வது வார்டு தலைவர் செல்வம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் இடும்பன் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் பைரவ மூர்த்தி, மைதீன்பாட்ஷா, நடராஜன், மணி, சீனிவாசன், பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் மீது தி.மு.க. அரசு பொருளாதார தாக்குதல் நடத்துவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
    • ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் 43 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்துள்ளனர். இதை நம்பி ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் இதை அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்போடு மக்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் கரும்பை விதைத்து வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்பட்டது. வருகிற பொங்கலுக்கு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

    மிகப்பெரிய பொரு ளாதார பாதிப்பில் கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கி றார்கள். பொருளாதார தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

    கரும்பு ஏன் வழங்கவில்லை என்று சொன்னால் அதற்கா கத்தானே பணம் தருகிறோம். வாங்கிக் கொள்ளுங்கள் என்று தி.மு.க. அமைச்சர்கள் விளக்கம் தருகிறார்கள்.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பொங்கல் தொகுப்பில் ரூ.2,500 ரொக்கம், அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, ஒரு கரும்பு 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த பொங்கலுக்கு தி.மு.க. ஆட்சியில் 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டதாக சொல்லி அதில் எத்தனை புகார்களை இந்த அரசு சந்தித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கிறது.

    இந்த பொங்கலில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டாமா? இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் வேதனையில் இருக்கிறார்களே? கரும்பு கொடுப்பதனால் உங்களுடைய பட்ஜெட்டில் என்ன துண்டு விழுவா போகிறது? துண்டு கரும்பு கொடுப்பதால் பட்ஜெட்டில் துண்டு விழுவதாக தெரியவில்லை.

    இந்த கரும்பை கொள்முதல் செய்தாலே விவசாயியின் கண்ணீரைத் துடைக்கும் நல்ல காரியம் அல்லவா நடைபெறும்? அதில் உங்களுக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை.

    இந்த அரசை நம்பி விதைத்திருக்கிற கரும்பை கொள்முதல் செய்வதற்கு தி.மு.க. அரசு முன் வரவேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு தொகையுடன், கரும்பை இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×