என் மலர்tooltip icon

    மதுரை

    • அ.தி.மு.க. பிரிந்து கிடக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உள்ளோம்.
    • திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி திருப்பரங்குன்றத்தை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலர் வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. அரசு மக்க ளுக்கான திட்டங்களை செய்யாமல் விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. வருகிற 2024-ல் பாராளு மன்ற தேர்தல் நடை பெற உள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தலும் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தி.மு.க. உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அச்சப்படவில்லை.

    மீண்டும் தமிழகத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

    பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து உள்ளோம். மீண்டும் அவரது தலைமையில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆட்சி அமைய உறுதி ஏற்போம்.

    மதுரை மாநகராட்சியில் திட்டங்கள் எதையும் செயல்படுத்த நிதி இல்லை. தி.மு.க. மத்திய அரசோடு மோதல் மனப்பான்மையைக் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு எந்த நிதியும் பெறாமல் மக்கள் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. மொழியை வைத்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பூமிபாலன், மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், துணைச்செய லாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் நாகரத்தினம், பாலமுருகன், பாலா, மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், வேல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
    • புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இன்று கொட்டகை முகூர்த்தம் நடந்தது.
    • வருகிற 26-ந் தேதி சப்பர முகூர்த்த விழா நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டில் வரும் 26-ந் தேதி சப்பர முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், மாலை 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையில், கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் செய்துவருகின்றனர்.

    இந்த நிலையில் இதற்கான கொட்டகை முகூர்த்தம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த முகூர்த்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்

    இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

    • தி.மு.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து விட்டார்கள் என்றார்.

    திருமங்கலம்

    எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகியும் இதுவரை ரூ. 1000 உதவித்தொகை வரவில்லை. கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து விட்டார்கள்.

    மின்சார கட்டணத்தை உயர்த்தாத ஒரே அரசு ஜெயலலிதா அரசு. சொத்து வரி உயர்த்துகிறீர்கள் என கேட்டால் உடனே மத்திய அரசு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறபோது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. நீங்கள் சொத்து வரியை உயர்த்துங்கள் என்று சொன்னது இப்போது சொன்னதை போல தான் அப்போதும் சொன்னது. ஆனால் எடப்பாடி என் தாய் தமிழ்நாட்டு மக்கள் மீது சொத்து வரியை திணிக்க மாட்டேன். தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ளும் என்றார்.

    தமிழக சட்டசபையில் சட்டம் ஒழுங்கு சீரழிவு குறித்து எடப்பாடி பழனி சாமி ஆதாரபூர்வமாக எடுத்துரைத்துள்ளார். 50 ஆண்டு திராவிட ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதில் 32 ஆண்டு கால ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதால் தான்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறு தியை எப்போது நிறை வேற்றுவீர்கள் என்றால் பதில் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள்.

    தற்போது உள்ள மக்கள் விரோத அரசு . விளம்பர வெளிச்சத்தில் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது. நடுநிலையோடு இருக்கின்ற அரசு அலுவலர்களே தப்பு கணக்கு போட்டு விட்டீர்கள். தப்புதாளங்களை போட்டு விட்டு மாட்டிக் கொள்ளா தீர்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தே தீரும்.

    ஜனநாயக நாட்டில் மேடையில் பேசுவதற்கு நாங்கள் கூமுட்டைகள் அல்ல. காவல்துறை அதிகா ரிகளே ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் அடித்த சல்யூட்டால் நாங்கள் மயங்குபவர்கள் அல்ல. எல்லா சட்டமும் தெரிந்தவர்கள் நாங்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுக்கு மேடை போட அனுமதி தரவில்லை என்றால் அதற்கு கார ணமானவர்கள் வீட்டில் நிம்மதியாக உறங்க முடியாது. உங்கள் சட்டை யையும் தொப்பியையும் கழட்டும் வரை நாங்கள் போராடுவோம். அராஜ ஆட்சியை ஒழித்து மீண்டும் கோட்டையை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ வரியை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
    • பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் முத்துக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் மற்றும் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்க ராஜ், சில்வர் சிவா, ஜெயக்குமார், கண்ணன், குட்டி அந்தோணிராஜ், ஆனந்தன், சுருளிராஜன், பிச்சைபழம், சரவணன், தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    'டெஸ்ட் பர்ச்சேஸ்' வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், உணவுப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், மற்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், வாகன விதி மீறல் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல் நடவடிக்கையை தடுக்க வேண்டும்,

    மின் கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகிய எரிபொருட்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், மற்ற சுங்க சாவடியில் கட்டணத்தை குறைக்க வேண்டும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    • இடியும் நிலையில் உள்ள தொண்டி ஜெட்டி பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த வரும், மனிதநேய மக்கள் கட்சி வக்கீல் அணி துணை அமைப்பாளருமான கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் மீன்பிடி இறங்குதளம் சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொண்டி கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறிய ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. கடலில் இருந்து கொண்டு வரப்படும் பொருள்களை இறக்கி வைக்கவும், படகுகளை கட்டி வைத்துக் கொள்ளவும் இந்த பாலம் பயன்பட்டு வந்தது.

    சேது சமுத்திரத் திட்டம் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி சேதம் அடையத் தொடங்கியது. அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் கப்பல் படை வீரர்கள் இந்த பாலத்தை ஹெலிகாப்டர் இறங்குதளமாக பயன்படுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் கப்பல் படையும் அங்கிருந்து இடம் மாறியதால் மீண்டும் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி உள்ளது.

    தற்போது தொண்டி பகுதி மக்கள் பொழுதுபோக்கு இடமாக பயன் படுத்தி வருகின்றனர்.

    ஆனால் அந்த பாலம் தற்போது காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இந்த பாலம் அடைந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் ஜெட்டி பாலத்தை சீரமைத்து தொண்டி மக்களின் பொழுதுபோக்கு தளமாக ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சேத மடைந்த நிலையில் உள்ள பாலம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள், பாலத்தின் தன்மை குறித்து போலீஸ் மற்றும் உரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் யாரும் பாலத்தில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பாலத்தின் உறுதி தன்மையை ஆராயும் வரை அதை பொதுமக்கள் பயன்படுத்த க்கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி மர்ம நபர்கள் நகையை பறித்தனர்.
    • கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு காமாட்சி (34) என்ற மனைவியும், பார்த்தசாரதி (13) என்ற மகனும், தாரணி (10) என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகன் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு மனைவி, மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    திருமங்கலம் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர்.நாராயணசாமி நகர் பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த காமாட்சி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். நகை பறிப்பின்போது நிலைதடுமாறி முருகன், காமாட்சி, அவரது மகன், மகள், ஆகியோர் மோட்டார் ைசக்கிளில் இருந்து தவறி கீேழு விழுந்தனர்.

    இதில் காமாட்சி, தாரணி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது.

    குறிப்பாக திருமங்கலம் 4 வழிச்சாலையில் நாள்தோறும் நகை பறிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    மதுரை,

    மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
    • மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    மதுரை

    தேசிய கூட்டுறவு பயிற்சி நிறுவன நிதி இயக்குநர் டாக்டர் கோபால்சாமி, ஆர்.கே.22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் சமூக பொரு ளாதார வளர்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் மற்றும் இடு பொருட்கள் வழங்குவதன் மூலம் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த சங்கங்கள் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 3 அடுக்கு நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன்படி மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட அளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 13 கோடி விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். மற்ற 2 அடுக்குகள் அதாவது மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே நபார்டு வங்கி மூலம் தானியங்கப்படுத்தப்பட்டு, பொது வங்கி மென்பொருள் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இருப்பினும், பெரும்பா லான சங்கங்கள் இதுவரை முழுமையான முறையில் கணினிமயமாக்கப்பட வில்லை. இதனால் தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு வேகமான, துல்லியமான, திறமையான, நம்பிக்கை யான மற்றும் வெளிப்படையான உறுப்பினர் சேவைகள் புரிவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தனித்த மற்றும் பகுதியளவு கணினிமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் அகில இந்திய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்து டனும் இக்கடன் சங்கங்களை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இக்கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதிச் சேர்க்கை, விவசாயிகளுக்கு சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு சேவையை வலுப்படுத்துதல் மற்றும் உரங்கள், விதைகள், போன்ற இடு பொருட்கள் வழங்குவது ஆகியன உட்பட்ட முக்கிய சேவை மையங்களாக மாற இந்தத் திட்டம் உதவும்.

    மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகள் இத்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசாங்க திட்டங்களை (கடன்) மற்றும் மானியம் சம்பந்தப்பட்ட இனங்கள்) முன்னெடுப்பதற்கான முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இது கடன்களை விரைவாகச் செலுத்துதல், குறைந்த மாற்றச் செலவு, விரைவான தணிக்கை மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைக் உறுதி செய்யும்.

    இணைய பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பகம் அடைப்படையிலான ஒரே மாதிரியான மென்பொருளை உருவாக்கு தல், சங்கங்களுக்கு கணினி மென்பொருள் ஆதரவை வழங்குதல், பராமரிப்பு ஆதரவு மற்றும் பயிற்சி உட்பட ஏற்கனவே உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் நல்லுறவு விருதுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தொழிலாளர் துறை இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிர மணியன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமை க்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

    இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் இருந்து (http://www/labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப ங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விபரங்களையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டது. தற்போது மேற்படி விண்ணப்பங்களை பெற வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53). தொழி லாளியான இவர் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

    தனக்கன்குளம் 4 வழிச்சாலையை கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கணேசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரதீப் (23) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். பிரதீப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம், ஆஸ்டின் பட்டி, தனக்கன்குளம், கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதி களில் உள்ள நான்கு வழி் சாலைகளில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது எனவே போலீசார் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பகுதிகளில் விபத்து நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×