என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையில் குற்றவாளிகளை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    சூளகிரி:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, கடந்த மாதம் 21-ந் தேதி கிருஷ்ணகிரி வழியாக மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சூளகிரி அருகே மேலுமலை பக்கமாக சென்ற போது அதை பின்தொடர்ந்து லாரிகளில் வந்த கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியை வழிமறித்தனர்.

    பின்னர் லாரி டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அதில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி 4 போலீஸ் தனிப்படைகள் மத்திய பிரதேச மாநிலத்திற்கு கடந்த 21-ந்தேதி புறப்பட்டு சென்றனர். கொள்ளை நடந்து 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. அதே போல செல்போன்களும் மீட்கப்படவில்லை.

    கொள்ளையர்களை பிடிப்பதில், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு மத்திய பிரதேச மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு அருகே ராமாபுரத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் 6 ஆயிரத்து 300 பவுன் நகைகளை வட மாநில கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.

    வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டியை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து நடந்த இந்த கொள்ளையில் 5 மாதங்களுக்கும் மேலாக தனிப்படை வட மாநிலங்களில் முகாமிட்டு குற்றவாளிகள் சிலரை பிடித்தனர். அந்த வழக்கிலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு வட மாநில போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை. அதே போல தற்போதும் நடந்துள்ளது. இதனால் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பட்டாளம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ரகு (வயது 55), ஏழுமலை (31), தேவேந்திரன் (41), புஷ்பராஜ் (58) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போச்சம்பள்ளி போலீசார் தனியார் பாலிடெக்னிக் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய நாராயணன் (26), ரகுநாத் (29), பொன்னன் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேடி மற்றும் போலீசார், பீமனூர்-சுருளிஅள்ளி சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் காரிமங்கலம் அருகே உள்ள பூசாரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேல்மணி (வயது 32), உரிமையாளர் பாலக்கோடு சதாசிவம் டிரைவர் (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்
    ஓசூரில் தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதல் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மகேஷ்வர் (வயது 27), சரத்பேரா (35), தாசா நத்தா மாலிக் (50) உள்ளிட்டோர் ஒரு தொட்டியில் பழைய இரும்பு குழாய்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி கொண்டிருந்தனர்.

    அப்போது பழைய தொட்டி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மகேஷ்வர், சரத்பேரா உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் மகேஸ்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மற்ற 2 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த தனியார் நிறுவனத்திற்கு சென்று சுவர் இடிந்து விழுந்து இறந்த மகேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஓசூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கந்தன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 40). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முருகம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் போலீசார், அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 46) என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் போச்சம்பள்ளி போலீசார், சந்தை வாசல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற, வடமலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரமேஷ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் சலவை தொழிலாளிகள் 2 பேர் பலியாகினர்.
    காரிமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 53). இவருடைய உறவினர் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (56). சலவை தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தராஜ் ஓட்டி சென்றார். பின்னால் ரங்கநாதன் அமர்ந்து இருந்தார். அப்போது காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் அவர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் ரங்கநாதன், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்த தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உறவினர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அடுத்த நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பையா (வயது 54). இவரிடம் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ், (54), அவரது மகன் அழகேசன் (25) ஆகிய 2 பேரும் தகராறு செய்தனர். 

    அதை தட்டிக்கேட்ட அப்பையாவின் மகள் அலமேலுவை, தங்கராஜ், அவருடைய மகன் 2 பேரும் தாக்கினார்கள். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் அலமேலு புகார் செய்தார். 

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜ், அவரது மகன் அழகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    காவேரிப்பட்டணம் அருகே மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டணம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பேடரஅள்ளியைச் சேர்ந்தவர் சின்னவன் (வயது 50). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சின்னவனின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சின்னவன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த சின்னவன், நாகரசம்பட்டி அருகே உள்ள செலசனம்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் மந்தாரகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவர் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

    இந்த நிலையில் வாலிபர் பிரபாகரன், சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார். அவர் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    பர்கூர் போலீசார் கோதிஅழகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பர்கூரை சேர்ந்த ரவி (வயது 65), செட்டி (61), சீனிவாசன் (47) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தளி போலீசார் சூளகுண்டா வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகுண்டா சோமசேகர் (25), மாருப்பள்ளி சிவண்ணா (75), ராஜசேகர் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மத்தூர் போலீசார் சின்ன அல்ரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாதுஷா (50), முருகன் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 26). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் மணிவாசன்(20), நாட்டான்கொட்டாய் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(27). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் கிருஷ்ணகிரி டேமில் இருந்து, டேம் கூட்ரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள தனியார் கம்பெனி அருகே சென்ற போது, எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நாராயணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த மணிவாசன், பிரசாந்த் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டேம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இறந்த நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×