search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி
    X
    கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி

    ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை- குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு பின்னடைவு

    சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையில் குற்றவாளிகளை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    சூளகிரி:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, கடந்த மாதம் 21-ந் தேதி கிருஷ்ணகிரி வழியாக மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சூளகிரி அருகே மேலுமலை பக்கமாக சென்ற போது அதை பின்தொடர்ந்து லாரிகளில் வந்த கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியை வழிமறித்தனர்.

    பின்னர் லாரி டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அதில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி 4 போலீஸ் தனிப்படைகள் மத்திய பிரதேச மாநிலத்திற்கு கடந்த 21-ந்தேதி புறப்பட்டு சென்றனர். கொள்ளை நடந்து 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. அதே போல செல்போன்களும் மீட்கப்படவில்லை.

    கொள்ளையர்களை பிடிப்பதில், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு மத்திய பிரதேச மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி குந்தாரப்பள்ளி கூட்டுரோடு அருகே ராமாபுரத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் 6 ஆயிரத்து 300 பவுன் நகைகளை வட மாநில கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.

    வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டியை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து நடந்த இந்த கொள்ளையில் 5 மாதங்களுக்கும் மேலாக தனிப்படை வட மாநிலங்களில் முகாமிட்டு குற்றவாளிகள் சிலரை பிடித்தனர். அந்த வழக்கிலும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு வட மாநில போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை. அதே போல தற்போதும் நடந்துள்ளது. இதனால் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×