என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இந்து மகா சபா மாநில செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லங்கம் என்ற மாத இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் நாகராஜ், அந்த பகுதியில் உள்ள அனுமந்த நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பின்னால் காரில் வந்த 4,5 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் திடீரென நாகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் நாகராஜை தாக்கினர். இதனால் சுதாரித்து கொண்ட நாகராஜ், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினார். சுமார் 500 மீட்டர் வரை அவர் உயிர் தப்பிக்க தலைக்கெறிக்க ஓடினார்.

    ஆனால் விடாமல் துரத்திய மர்ம கும்பல், நாகராஜை மடக்கி பிடித்து வெட்டினர். இதில் தலை, இடுப்பு, கை, கால்களில் பலத்த வெட்டுப்பட்ட நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதன்பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகராஜ் வெட்டி கொலை செய்யப்படுவதை கண்ட சிலர், அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் போலீஸ் டி.எஸ்.பி.முரளி, இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொலை செய்யப்பட்ட நாகராஜிக்கு மஞ்சுளா (37) என்ற மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.

    நாகராஜை வெட்டி கொன்ற மர்ம கும்பல் குறித்து ஓசூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக நாகராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ஓசூரில் இந்து மகா சபா மாநில செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). ஜவுளி வியாபாரி. அச்சமங்கலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வந்தார். மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மனமுடைந்து ஓட்டலிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட படப்பள்ளி ஊராட்சி சரட்டூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 2020-2021-ல் ஜண்டாமேடு, புலியூர் சாலை முதல் கஞ்சனூர் சாலை வரை ரூ.92 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோன்று படப்பள்ளியில் ரூ.6 லட்சத்தில் ஓரடுக்கு ஜல்லி மற்றும் தார்சாலை அமைக்கப்படுகிறது. படப்பள்ளி ஊராட்சி பெருமாள் குப்பத்தில் ரூ.2 லட்சத்தில் மழைநீர் சேகரிப்பு தனி நபர் நிலத்தில் மண் வரப்பு அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மிட்டப்பள்ளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.8½ லட்சத்தில் கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். வேளாண்மை உழவர் உற்பத்தியாளர் குழு திட்டத்தில் டிராக்டர் வாங்க ரூ.5 லட்சம் மானியத்திற்கான ஆணையை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்.

    தோட்டக்கலைத்துறை சார்பாக நீர்வள மற்றும் நிலவள திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டின் மஞ்சள் பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.12 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார். ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணையதளம் மூலம் படிவம் பதிவேற்றம் செய்யும் பணிகளை அவர் பார்வையிட்டார். போச்சம்பள்ளியில் வேளாண்மை துறை சார்பில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் காய்கறிகள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குனர் ஜெயராமன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்முருகன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, மகேஷ்குமரன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி பொறியாளர்கள் பூம்பாவை, ஜமுனா, கூட்டுறவு சங்க தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதாய் மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் நவாப், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் மற்றும் நிர்வாகிகள் திருமலை செல்வன், ஆறுமுகம், வேல்மணி, தினேஷ், சவுந்தரராஜன், வெங்கட்ராமன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலு ரெட்டி, திவாகர், கணேசன், நாகன், பேரூர் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூரில் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து சத்யா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஊத்தங்கரையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், நகர செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், ஜோக்கர் பாய், தீபக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இதேபோன்று ஊத்தங்கரையில் பாம்பரணை-மரம்பட்டி பிரிவு சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து போச்சம்பள்ளி 4 ரோட்டில் தி.மு. க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த மறியலில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி குப்பம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மாவட்ட பிரதநிதி மாதேஸ்வரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்றபட்டது. தொடர்ந்து தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சாமல்பட்டி அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள முக்கரபள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 21). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஊர்மிளா. கடந்த 13-ந் தேதி திருப்பதியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடினர்.

    அப்போது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவர் துரைராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துரைராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்விவரம் வருமாறு:-

    எனக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனக்கும் ஒரு பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. நாங்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த நிலையில் எனது கள்ளக்காதலிக்கு திருப்பதியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்து நான் திருப்பதியை கண்டித்தேன். ஆனால் அவர் என்னை திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த நான் கடந்த 13-ந்தேதி திருப்பதியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினார். கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்கு 30 யானைகள் வந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    ராயக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருகின்றன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு விவசாய பயிர்களை நாசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    கடந்த மாதம் 100 யானைகள் கர்நாடக வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக-கர்நாடக எல்லையான தளி அருகே வனப்பகுதிக்குள் வந்தன. அந்த யானைகளை வனத்துறையினர் தமிழக வனப்பகுதிக்குள் வராமல் இருப்பதற்காக தடுத்து வைத்து இருந்தனர். இதற்காக 20 பேர் கொண்ட வன குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர்.

    மேலும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கல் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதையும் மீறி 30 யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்தன. நேற்று முன்தினம் அந்த யானைகள் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காட்டிற்கு வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த யானைகள், சினிகிரிப்பள்ளி வனப்பகுதி வழியாக உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டிற்குள் நுழைந்தன.

    தற்போது சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ஆழியாளம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி பயிரிட்டுள்ளனர். அறுவடை செய்ய கூடிய இந்த நேரத்தில் யானைகள் வந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் சானமாவு காட்டில் இருந்த யானைகள் நேற்று மாலை ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர்பள்ளம் காட்டிற்கு வந்தன. உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், வீடுகளின் முன்பு விளக்குகளை எரிய விடுமாறும், இரவு நேரங்களில் நிலங்களில் யாரும் காவலுக்கு இருக்க வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவருடைய மகன் சேகர்(வயது 26), கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(25). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். 

    அப்போது சின்னபெண்ணங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் காய்கறி ஏற்றி வந்த சரக்குவேன் பஞ்சராகி சாலையோரத்தில் நின்று இருந்தது. இந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    மஞ்சுநாத் படுகாயமடைந்தார். மேலும் வேன் டிரைவர் சங்கர், கிளீனர் சையத்மொயின் ஆகியோரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களின் வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் சிலர் அதீத ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.

    பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து விட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என கவனிப்பதில்லை. பெற்றோர்கள் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி இழப்பு அந்த குடும்பத்திற்கே.

    கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். உங்கள் குழந்தைகளையும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருபரப்பள்ளி அருகே பட்டப்பகலில் ராணுவவீரரிடம் கத்தியை காட்டி செல்போனை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன் (வயது 30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி அருகே சாலையில் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் முககவசம் அணிந்தவாறு மல்லிகார்ஜூனனை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.7ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகார்ஜூனன் இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ராணுவ வீரரிடம் கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பேரிகை அருகே பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பேரிகை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோடியப்பா (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள சிவப்பா என்பவரது நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்தது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோடியப்பா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேருக்கு ரூ.22¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேருக்கு ரூ.22¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையாக தலா ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுள்ள கட்டுப்பாட்டு பகுதியை மீறி வெளியே சென்றவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அமைப்புகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத 10 ஆயிரத்து 103 பேரிடம் இருந்து இதுவரை ரூ.22 லட்சத்து 77 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேரு மற்றும் போலீசார் ஊத்தங்கரை முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படப்பள்ளியை சேர்ந்த செல்வம் (வயது 50) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    ×