என் மலர்
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). இவர் தனது மொபட்டில் தனது ஊரிலிருந்து ராயக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கெலமங்கலம் - ராயக்கோட்டை ரோட்டில் திம்ஜேப்பள்ளி பிரிவு சாலையில் எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரான ரத்தினகிரியை சேர்ந்த பீமன் மகன் வேலு (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிகோட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிகோட்டை:
தேன்கனிகோட்டை அருகே உள்ள ஜவளகிரி பகுதியில் தளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவளகிரி கிராமத்தை சேர்ந்த சீனிவாஷ் (வயது 34), சீத்தாராம் (39) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
குருபரப்பள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சம்பத் (வயது 20). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதன்காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சம்பத் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா விழிப்புணர்வு நாடகம், நாதஸ்வரம், தவில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம், உறுமி சேவையாட்டம், காளி அம்மன் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள் நல அறக்கட்டளையின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் தொடங்கி வைத்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில், கொரோனா விழிப்புணர்வு நாடகம், நாதஸ்வரம், தவில், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம், உறுமி சேவையாட்டம், காளி அம்மன் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர். வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த சினிமா பின்னணி பாடகரும், நாடகக்கலைஞருமான பெருமாள் மற்றும் போளூர் கிராமிய பாடகர் மகேந்திரன் ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களை பாடினர்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நகராட்சி ஆணையர் சந்திரா மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியின் போது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும். கண், மூக்கு, வாய் பகுதிகளை கைகளால் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் இருந்து காந்தி சாலை வழியாக ஊர்வலமாக சென்று பழையபேட்டை டவுன் பஸ் நிலையத்தில் பிரசாரத்தை முடித்தனர்.
சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஓசூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. கடந்த மாதம் 21-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்றபோது பின்னால் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள், டிரைவர்களை தாக்கி விட்டு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மத்தியபிரதேசம் மாநிலம் இண்டூர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான பரத்தேஜ்வாணி (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் போலீசார் நேற்று பரத்தேஜ்வாணிக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை ஓசூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பரத்தேஜ்வாணிக்கு 13 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சூளகிரி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார், பென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோகுல் நகரை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), சின்னபென்னாங்கூர் பெருமாள்(43), ஆசாத் தெரு நூருல்லா(54) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், பீமனூர் அருகே உள்ள மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்த ரூ.12,720-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் என 9 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த காவேரிப்பட்டணம் பாபு(வயது 42), ராஜா(23), மகேந்திரமங்கலம் சக்கரவர்த்தி(44), கட்டிகாரன்கொட்டாய் மணிகண்டன்(21), ஜிட்டாண்டஅள்ளி சின்னராஜ்(47), தேவர்முக்குளம் பாண்டுரங்கன்(59), அருள்மணி (45), பாப்பாரப்பட்டி மணிகண்டன்(36) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல், மத்தூர் போலீசார், சின்னஅள்ளேரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கல்குவாரி அருகே பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(40), ஜமால்பாஷா(50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 38 யானைகள் இடம் பெயர்ந்து ஓசூர் அருகே சானமாவு காட்டில் பதுங்கின. நேற்று முன்தினம் இரவு அந்த யானைகள் அருகிலுள்ள பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் புகுந்து ராகி, கொள்ளு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் ராமாபுரம், குக்கலபள்ளி, சானமாவு, பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், காட்டு பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து ஓட்டி செல்லக்கூடாது, இரவு நேரங்களில் வீட்டை விட்டு தனியே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 38 யானைகள் இடம் பெயர்ந்து ஓசூர் அருகே சானமாவு காட்டில் பதுங்கின. நேற்று முன்தினம் இரவு அந்த யானைகள் அருகிலுள்ள பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் புகுந்து ராகி, கொள்ளு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் ராமாபுரம், குக்கலபள்ளி, சானமாவு, பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், காட்டு பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து ஓட்டி செல்லக்கூடாது, இரவு நேரங்களில் வீட்டை விட்டு தனியே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்த லோகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தனர். அதில் ஊத்தங்கரை நாராயணன் நகரை சேர்ந்த சேட்டு (38) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே வழிப்பறி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த, 2018-ம் ஆண்டு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, வாலிபர் ஒருவர் நகையை பறித்து சென்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க, சாமல்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜல்லியூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஊத்தங்கரை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திலிப், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேசிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, விக்னேஷ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி. ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெருமளவில் பெற்று வருவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் அலுவலகத்தின் கதவை மூடி விட்டு சோதனை நடத்தினர். மேலும் சார் பதிவாளர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இணை சார்பதிவாளர் நேரு மற்றும் சார்பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து, 86 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்பதை போலீசார் உறுதி செய்து அவற்றை எடுத்து சென்றனர். கணக்கில் வராத பணம் வைத்திருந்த இணை சார்பதிவாளர் நேரு மற்றும் சார்பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






