என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    பாகலூர் போலீசார் வெங்கடேசபுரம் - அத்திமுகம் சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பிக்கிலி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 28), கணேஷ் (38), ஆஞ்சி (27), வெங்கடேசபுரம் ஆஞ்சிசெட்டி (42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல், உத்தனப்பள்ளி போலீசார், சாமனப்பள்ளி ஓடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாமனப்பள்ளி கிருஷ்ணன் (51), கோவிந்தராஜ் (45), சீபம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (30), பங்கநத்தம் சீனிவாசன் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பக்கமுள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 46). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் சாமல்பள்ளம் அருகில் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி, பரந்தாமன் ஓட்டிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தளி அருகேகுட்டையில் மூழ்கி விவசாயி பலியான சம்பபம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பெத்தேராஜ் (வயது 44). விவசாயி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள குட்டையில் மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பையனப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான ‘வளம்’ செயலியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டத்திற்கான ‘வளம்’ செயலியை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வாழ்வாதார திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், தாசில்தார் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர் அம்சாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அமீர்ஜான், வட்டார அணி தலைவர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் வட்டாரத்தில் 36 ஊராட்சிகளிலும், காவேரிப்பட்டணம் வட்டாரத்தில் 36 ஊராட்சிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 30 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை அடையாளம் கண்டு அவர்களே திட்டம் தீட்டலாம்.

    கிராமத்தில் உள்ள பிரச்சினைகள், எந்த இடத்தில் முதலீடு ஈட்ட வேண்டும் என பொதுமக்களே முடிவு செய்து மாவட்ட அளவில் நிதி திரட்டி செய்ய முடியும். மகளிர் சுய உதவிக்குழு மூலமாக இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சமுதாய வல்லுனர்கள் மற்றும் கிராமப்புற பிரதிநிதிகளால் இதற்காக ‘வளம்’ செல்போன் செயலி மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும். கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வளர்ச்சியடைய இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஓசூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் சாந்தபுரத்தை சேர்ந்தவர் எல்லப்பா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகிறது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லட்சுமி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லட்சுமி பரிதாபமாக இறந்தார். திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
    ஊத்தங்கரை:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி உமாசங்கரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு வைஷ்ணவி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உமாசங்கரிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீடான சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டஅள்ளி காமராஜர் நகருக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த உமாசங்கரி, விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உமாசங்கரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி கனகா(25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த கனகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தசாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 30). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் ஓசூரில் வேலை முடிந்த பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். உத்தனப்பள்ளி-சின்னலட்சுமிபுரம் அருகே வந்த போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கோனப் நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 36). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் மருந்து கடை நடத்தி வந்தார். அதன் பின்புறம் கிளினிக் தொடங்கி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பூபதி மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் நேற்று மருந்து கடை மற்றும் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது மக்களுக்கு பிரசாத் மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. இது குறித்து அவர்கள் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் பிரசாத்தை கைது செய்தனர். தொடர்ந்து கிளினிக் மற்றும் மருந்து கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் கே.ஏ.மனோகரன் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயவாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க செயலாளர் அனுமப்பா, முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் சேகர், வெங்கடேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். வருமான வரி செலுத்துவோர் குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக்கி தொழிலாளர்களுக்கு தலா ரூ.400 கூலி வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும் சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு விற்பதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரவிராகுல் (வயது 23). இவர் ஓசூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி ஓசூரில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரவு 9.30 மணியளவில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் மேம்பாலத்தில் சென்றபோது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென பிரேக் போட்டதில், இவர் அந்த வாகனத்தின் பின்புறம் மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பாகலூர் செல்லும் சாலையில் புதிய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களிடம் புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 698 சிக்கியது.

    கணக்கில் வராத பணம் இருந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம், துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கணவர், குழந்தைகள் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சகிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருடைய மனைவி சத்யா என்ற சசிகலா (வயது 27). கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் நாகேந்திரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்யாவின் 2 குழந்தைகளும் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சத்யா, தனது தாயுடன் தட்டக்கல் கிராமத்தில் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 குழந்தைகள் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த சத்யா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×