என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுமி கடத்தியது தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி வேப்பனப்பள்ளி அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தீர்த்தம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோருடன் அந்த சிறுமி இருந்துள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தனது மகளை, வேப்பனப்பள்ளி அருகே உள்ள தரணிசந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பூபதி (வயது 23) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தங்களது மகளை மீட்டு தருமாறு கூறி இருந்தனர். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து, பூபதி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.
    காவேரிப்பட்டணம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும், தொட்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த அறிவுநிதி (வயது 25) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது அறிவுநிதி, அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறிய போது, அறிவுநிதி மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவேரிப்பட்டணம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, அறிவுநிதியை கைது செய்தார்.
    சூளகிரி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சூளகிரி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 26). இவருக்கு ஈரோட்டில் சொந்தமாக சர்க்கரை ஆலை உள்ளது. தொழில் அதிபரான இவர் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கரும்பு தோட்டத்தை பார்வையிடுவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் ஈரோட்டில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் புறப்பட்டார். மேலும், காரை தினேஷ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பக்கமுள்ள கொல்லப்பள்ளி அருகே சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்த அவருடைய நண்பர்கள் கோவிந்தராஜ் (40) உதயகுமார் (26), பிரபு (40), யுவராஜ் (28) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த பிரபு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து சென்று இறந்த தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் மாதன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பழனி, வட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடத்தில் முன்னுரிமை அடிப்படையில் 4 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
    கிருஷ்ணகிரி:

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக 1,860 வாக்குப்பதிவு எந்திரங்கள் (வி.வி.பேட். 1,300, கன்ட்ரோல் யூனிட் 560) கொண்டு வரப்பட்டன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி, தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள பேலட் யூனிட் 2,567, கன்ரோல் யூனிட் 422, வி.வி.பேட். 459 என மொத்தம் 3,448 வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியை பெல் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்கொண்டனர்.
    சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.
    ஓசூர்:

    காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த மாதம் லாரி சென்றபோது, மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் டிரைவர்களை தாக்கி விட்டு, செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு செல்போன்கள் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம் சென்ற தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து செல்போன் கொள்ளையில் தொடர்புடைய பரத் தேவாணி (வயது 37) என்ற முக்கிய குற்றவாளியை டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார் கூறுகையில், செல்போன்கள் கொள்ளை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும், செல்போன்களை வங்காளதேசத்திற்கு விற்பனை செய்யும் முகவர்கள் ஆவார்கள்.

    தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓரிரு நாட்களில் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் தான் இந்த கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று கூறினர்.
    கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் 10 ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் வித்யா (வயது 16). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். 

    இதில் படுகாயம் அடைந்த அவரை, பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பாகலூர் போலீசார், வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பிகிலி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா (வயது 37), சங்கரப்பா (45), ராமமூர்த்தி (36), எல்லப்பன் (31), நரசிம்மன் (27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    பாகலூர் போலீசார் வெங்கடேசபுரம் - அத்திமுகம் சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பிக்கிலி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 28), கணேஷ் (38), ஆஞ்சி (27), வெங்கடேசபுரம் ஆஞ்சிசெட்டி (42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல், உத்தனப்பள்ளி போலீசார், சாமனப்பள்ளி ஓடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாமனப்பள்ளி கிருஷ்ணன் (51), கோவிந்தராஜ் (45), சீபம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (30), பங்கநத்தம் சீனிவாசன் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சூளகிரி அருகே லாரிகள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பக்கமுள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 46). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் சாமல்பள்ளம் அருகில் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி, பரந்தாமன் ஓட்டிச் சென்ற லாரி மீது மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த பரந்தாமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே உள்ள சிக்கேகவுண்டனூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் பீமன். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. 

    சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். 

    அதன் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோழிப்பண்ணை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையில் வேலை செய்யும் மதன்(25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு போகலாம் வா என அழைத்து கொண்டு சென்றார்.

    அப்போது போகும் வழியில் உள்ள தானம்பட்டி மலைப்பகுதிக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதே போல் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தற்போது மதன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறார்.
    ×