search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.3¾ லட்சம் பறிமுதல்

    ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி. ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெருமளவில் பெற்று வருவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசார் அலுவலகத்தின் கதவை மூடி விட்டு சோதனை நடத்தினர். மேலும் சார் பதிவாளர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இணை சார்பதிவாளர் நேரு மற்றும் சார்பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து, 86 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

    பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்பதை போலீசார் உறுதி செய்து அவற்றை எடுத்து சென்றனர். கணக்கில் வராத பணம் வைத்திருந்த இணை சார்பதிவாளர் நேரு மற்றும் சார்பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×