search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன் மற்றும் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன் மற்றும் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் - 500 பேர் கைது

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் நவாப், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் மற்றும் நிர்வாகிகள் திருமலை செல்வன், ஆறுமுகம், வேல்மணி, தினேஷ், சவுந்தரராஜன், வெங்கட்ராமன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலு ரெட்டி, திவாகர், கணேசன், நாகன், பேரூர் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூரில் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து சத்யா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஊத்தங்கரையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், நகர செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், ஜோக்கர் பாய், தீபக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    இதேபோன்று ஊத்தங்கரையில் பாம்பரணை-மரம்பட்டி பிரிவு சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து போச்சம்பள்ளி 4 ரோட்டில் தி.மு. க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த மறியலில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி குப்பம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மாவட்ட பிரதநிதி மாதேஸ்வரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்றபட்டது. தொடர்ந்து தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×