என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    தேன்கனிக்கோட்டை அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தனியார் பஸ் நேற்று ஓசூர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சின்னபெண்ணாங்கூர் என்ற இடத்தில் பஸ் ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் தேவர்உலிமங்களம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் அம்ப்ரீஷ் (வயது 31) என்பவர் படுகாயம் அடைந்தார். அதேபோல பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சாப்ராணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார் டிரைவர் அம்ப்ரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் காயம் அடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியில் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதாக, சேலம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கோபி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் தலைமையிலான குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள ஒரு வீட்டில், ரகசியமாக ரைஸ் மில் இயங்குவதும், அங்கு ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஓட்டல்கள் மற்றும் அரிசி மண்டிகளுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் பாலாஜி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, பாலிஷ் போட்டு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.52 வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2,500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே உள்ள காடுகெம்பத்பள்ளியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). கார் டிரைவர். இவர் தனது தாயார் ராணி (57), மகள் ஜெபிஸ்ரீ (4) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாரிமுத்து லேசான காயம் அடைந்தார். அவருடைய தாயார் ராணி, மகள் ஜெபிஸ்ரீ ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிறுமி ஜெபிஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வடமலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கந்திகுப்பம் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள சூலமலை குறும்பர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). பெயிண்டர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று மீண்டும் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எலசட்டியை சேர்ந்தவர் சின்னபிட்டப்பா (வயது 50). அதேபகுதியை சேர்ந்தவர் தொழிலாளி திவாகர் (25). மது போதையில் இருந்த திவாகருக்கும் சின்னபிட்டப்பாவிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சின்னபிட்டப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவர் கொடுத்த புகாரில் திவாகர் மீது தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் திவாகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவாகர் உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து அவரது உடல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் திவாகர் மரண வழக்கை போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனையில் திவாகர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது தந்தை சின்னபிட்டப்பாவை திவாகர் தாக்கியதை அறிந்த அவரது மகன் சந்தோஷ் (26) , எலசட்டியை சேர்ந்த ஆனந்த் (20) மற்றும் கெலமங்கலம் அடுத்த சக்கிலிபாளையத்தை சேர்ந்த மாதேஷ் (33) ஆகியோருடன் சேர்ந்து, திவாகரை கட்டி வைத்து அடித்ததும், அதில் படுகாயம் அடைந்த திவாகர் உயிரிழந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து சந்தோஷ், ஆனந்த், மாதேஷ் ஆகிய 3 பேரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாலமரத்துப்பட்டி பக்கமுள்ள குருகப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கெரிகேப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (40) என்பவர் மொபட்டில் அந்த வழியாக வந்தார். சாலமரத்துப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இளங்கோவன், செல்வம் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்து குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப் பகுதிகளில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப் பெயர்ச்சியாகி முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் கூட்டம் பல குழக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன.

    ஓசூர், சானமாவு, ஊடே துர்க்கம், தேனிக்கனிக் கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் பகல் நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.

    இந்த நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி சாலையை கடந்து சென்றன.

    இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இடைவெளி விட்டு கடந்து சென்றன.

    இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத் துறையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    இதனால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அஞ்செட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 34). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அஞ்செட்டி போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் மற்றும் போலீசார் காந்தி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர்.
    கெலமங்கலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள யூ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா. விவசாயி. இவருடைய மகன் அரிஷ் (வயது 22). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    கந்திகுப்பம் அருகே கோழிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே உள்ள சின்ன ஒரப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் தனது வீட்டின் பின்புறம் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ணைக்கு வந்த வாலிபர் ஒருவர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்த பெரியசாமி அந்த வாலிபரை பிடித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி குப்பன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் (21) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    ×