என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ராயக்கோட்டை அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெரியகோடி பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 21). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் காடு செட்டிப்பட்டியில் இருந்து டிப்பர் லாரியை ஓட்டிக்கொண்டு ராயக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த லாரியும், டிப்பர் லாரியும் காடுசெட்டிப்பட்டி பகுதியில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முத்துகுமார் மற்றும் மற்றொரு லாரி டிரைவர் சந்தோஷ் (27) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முத்துகுமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.
    சசிகலா காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற அவருக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
    ஓசூர்:

    பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்' ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார்.

    இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார்.

    சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினர்.

    அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.

    சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இந்நிலையில் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

    தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ் தரப்படும். அவகாசம் வழங்கிய பிறகும் காரில் இருந்து  கொடியை அகற்றாவிடில் அடுத்த வரவேற்பு இடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முத்துமாரியம்மன் கோவில் அல்லது ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சகிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்படும்.

    இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.
    தளி அருகே வனப்பகுதியில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே பேளக்கரை வனப்பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஆடு மேய்க்க சென்றவர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள கரகனப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 61). சம்பவத்தன்று இவர் சின்னார் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அசோக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீசார் எ.டி.முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய களிச்சேரி கோவிந்தராஜ் (வயது 29), எ.டி.ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (39), அலேநத்தம் கோபி (37), ரங்கப்பா (33), பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (28), மாதேஷ் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல், தேன்கனிக்கோட்டை போலீசார், சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எஸ்.காருபட்டி வெங்கடேஷ் (45), அரதகூர் பீமன் (27), லக்கசந்திரம் நாகேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், வேப்பனப்பள்ளி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டோம். அந்த தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதற்கு காரணம் யார் என உங்களுக்கே தெரியும். அவர்களின் உட்கட்சி பூசலால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

    ஆனால் அவர்கள் இன்று ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டார்கள். இந்த முறை நாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதே தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவோம். நாம் மக்களை நேரடியாக சந்திக்கிறோம். ஆனால் சிலரோ தோட்டத்திலே இருக்கிறார்கள். தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது.

    தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு எடுப்போம். நாம் இருக்கும் கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடந்து எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறுகையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான எங்களின் பணியை நாங்கள் தொடங்கி உள்ளோம். கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவை தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி தொடர்பாக எந்த கட்சியிலும் இதுவரை பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. பா.ம.க.வுடன் அ.தி.மு.க. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகவே பேச்சு வார்த்தையிலேயே பங்கேற்று வருகிறது என்று கூறினார்.
    பர்கூர் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாயின.
    பர்கூர்:

    திருப்பூரில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பீகார் மாநிலம் ரூபீடகா கிராமத்தை சேர்ந்த மகபூப் மகன் சவுகின்(வயது27) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த நிலையில் கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் அருகிலுள்ள துரைஏரி பஸ் நிறுத்தம் அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரியின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த லாரியில் இருந்து புகை வருவதை பார்த்து, லாரியை முந்திச்சென்று டிரைவரிடம் கூறினார்கள். இதையடுத்து லாரியை ஓட்டி சென்ற சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தி பார்த்த போது, கண்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வந்து கொண்டிருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் இரு வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் துணிகள் முழுமையாக எரிந்து நாசம் ஆனது. இதில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் சேதம் அடைந்தது.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், கக்கனூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அகில்குமார் (வயது67). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பிரீத்தி (60).

    இந்த நிலையில் அதிகாலையில் அவரது வீட்டு மாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 3 மர்மநபர்கள், கணவன் -மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களின் கை. கால்களை கட்டிப்போட்டனர்.

    இதையடுத்து வீட்டின் அறையில் இருந்த, பீரோவை உடைத்து அதில் இருந்த 24 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கைகள் கட்டப்பட்ட நிலையில் கணவன்- மனைவி இருவரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து இருவரையும் மீட்டு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்ளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற கொள்ளையர்கள் 3 பேரும் முகமூடி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் என்று தெரிகிறது.

    வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே சின்ன எலசகிரி முல்லைவேந்தன் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 55). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    3 வயது பெண் குழந்தைக்கு 50 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான குப்பநத்தம் கிராமத்சை சேர்ந்தவர் துரைராஜ் (வயது50).

    இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தையிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த துரைராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    3 வயது பெண் குழந்தைக்கு 50 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி ஒருவர் உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    பெங்களூரு விஜய்நகரை சேர்ந்த பத்மநாபன் (வயது 40) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வரட்டனப்பள்ளி பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு நடந்த எருது விடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று பத்மநாபனை முட்டியது.

    இதனால் கீழே விழுந்த அவரின் காலில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு சிக்கி சிறிது தூரம் அவரை இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த பத்மநாபன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    எருது விடும் விழாவில் காயம் அடைந்த சிறுவனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக கூறி, ஊழியரை தாக்கிய சிலர் வாகனத்தையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எருது விடும் விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி கிராமத்தில் 53-ம் ஆண்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இந்த போட்டிக்காக வரட்டனப்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, சிந்தகம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.

    இந்த போட்டியில் பங்கேற்ற காளைகளில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடியில் கடந்த காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் சில இளைஞர்கள் காளைகள் முட்டி காயம் அடைந்தனர். இதே போல் வரட்டனப்பள்ளி மேல் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 15) என்ற சிறுவனும் காயம் அடைந்தான். அவனை அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு அப்பகுதியில் சிலர் தகவல் தெரிவித்தனர். அந்த நேரம் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக அங்கிருந்த சிலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கினார்கள். இதில் பக்கவாட்டில் இருந்த வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

    மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் டிரைவர் சின்ராயன் (40) என்பவரையும் சிலர் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஒரப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எருது விடும் விழாவில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் தாக்கப்பட்டு, வாகனம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பர்கூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×