என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு, காரணமாக பூக்கள் பறிக்காமல் செடிகளில் காய்ந்து வருகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் வேதனையில் வாடுகின்றனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில், 1,500 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா, கிர சாந்திமம், ஜெர்புரா, கார்னேசன் போன்ற அலங்கார கொய் மலர்களும், திறந்த வெளியில், 5,000 ஏக்கரில் செண்டு மல்லி, சாமந்தி, பட்டன் ரோஜா போன்ற பல்வேறு மலர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. ஆனால், பூக்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகினர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்ப முடியாமல் போனது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு பூக்கள் விற்பனை தொடங்கியது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பில் இருந்து, விவசாயிகள் மீண்டு வரலாம் என நினைத்திருந்த நேரத்தில், கொரோனா 2-ம் அலை காரணமாக, ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், சாகுபடி செய்த பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு மீண்டும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை சந்தைப்படுத்த முடியாமல், செடிகளில் இருந்து பறிக்காமல் விட்டுள்ளனர். சிலர் செடிகளை காப்பாற்ற, பூக்களை பறித்து சாலையோரம் கொட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக ஓசூர் விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விவசாயிகளுக்கு மட்டும், 350 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
தற்போதும் பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியவில்லை. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தான் சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும். அந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பூக்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
பசுமை குடில்களில் உள்ள செடிகளை பராமரிப்பு செய்யாவிட்டால் வீணாகி விடும். அதனால், அவற்றை பாதுகாக்க மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாயும், திறந்த வெளி செடிகளை காக்க, 30 ஆயிரம் ரூபாயும் செலவு செய்து வருகிறோம்.
ஆனால், ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை, கடன் வாங்கி செடிகளை பராமரிக்கிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தையே ஈடுகட்ட முடியவில்லை. நடப்பாண்டும் பூக்கள் வீணாகி வருவதால் வேதனையில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது :-
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, 28,000 தடுப்பூசிகள் நேற்று வந்துள்ளன. நாளை (இன்று) முதல் தடுப்பூசிகள் செலுத்தப்படும். உலகத்திலேயே, ஆட்சிக்கு வந்தவுடன் போர்கால அடிப்படையில், எந்த அரசும் இது போன்று வேலைகளை செய்ததில்லை.
ஆனால், முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு சிறிய குறை இருந்தாலும் அதை கேட்டு நிவர்த்தி செய்வதற்கு தான், முதல்- அமைச்சர் எங்களை அனுப்பி வைத்துள்ளனார். தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் முதல்- அமைச்சருக்கு உள்ளது.
கடந்த 7-ந் தேதி தான் ஆட்சி பொறுப்பேற்றோம். அதற்குள் இவ்வளவு வேலைகள் நடக்கிறது என்றால் உலக அளவில் பாராட்ட வேண்டும். கொரோனா இவ்வளவு பரவியதற்கு என்ன காரணம். கடந்த ஆட்சியாளர்கள் 2 மாதமாக ஏதாவது செய்தார்களா? தேர்தல் நேரத்தில் இருந்து எதுவும் செய்யாததால் தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதையெல்லாம் நாங்கள் வெளியே கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51) அப்பகுதியில் காளி கோவில் கட்டி, தினமும் பூஜை செய்து, ஜோதிடம் பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு போலீஸ் உடையில் வந்த வாலிபர், பாரூர் ஸ்டேஷனுக்கு உங்களை இன்ஸ்பெக்டர் வர சொன்னார் என கூறி பெருமாள் மற்றும் அவரிடம் ஜோதிடம் படிக்க வந்த கோபால் (வயது 35) ஆகியோரை ஒரு காரில் அழைத்து சென்றார்.
போலீஸ் உடையில் இருந்தவருடன், மேலும் 3 பேர் சாதாரண உடையில் காரில் பயணம் செய்தனர். போலீசார் தான் தங்களை அழைத்து செல்வதாக நினைத்த பெருமாள் மற்றும் கோபால், காரில் புறப்பட்டு சென்றனர்.
குடிமோனஹள்ளியில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் கார் சென்ற போது அவர்கள் இருவரையும் கட்டையால் தாக்கினர். மேலும் காவேரிப்பட்டணம் அருகே பையூர் பாலத்தில் கோபாலை இறக்கி விட்டு பெருமாளை மட்டும் காரில் கடத்தி சென்றனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த கோபால் கொடுத்த தகவலின் படி, பாரூர் ஸ்டேஷனில் பெருமாள் உறவினர்கள் திரண்டனர். விசாரணைக்கு யாரையும் அழைத்து வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் மர்ம கும்பல் பெருமாளை கடத்தி சென்றது உறவினர்களுக்கு தெரியவந்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் வைத்து பெருமாளை சரமாரியாக தாக்கிய கும்பல், ரூ.25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என அவர் கூறியதால், கடைசியாக 3 லட்சம் ரூபாய் தருமாறு மர்ம கும்பல் கேட்டது.
இதையடுத்து, செல்போன் மூலமாக தன் மகன் ஜானகி ராமனை தொடர்பு கொண்ட பெருமாள் 3 லட்சம் ரூபாய் எடுத்து வருமாறு கூறினார். இதைத்தொடர்ந்து அவரது மகன் ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு மர்ம கும்பலிடம் அவதானப்பட்டி கோவில் அருகே கொடுத்துள்ளார். இதையடுத்து மர்ம கும்பல் பெருமாளை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக பாரூர் போலீசில் பெருமாள் புகார் செய்தார். மேலும், தன்னை மிரட்டி பணம் பறித்ததாக சவுட்டஹள்ளியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை அடையாளம் காட்டினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, சவுட்டஹள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆனந்தன் என்பவர் தான், தன்னை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுக்குமாறு கூறியது தெரிந்தது.
இதனால் தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவர் ஆனந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள பெல்லூரை சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் லோகேஷ் என்கிற புல்லட் லோகேஷ் (வயது 36). பெயிண்டிங் காண்டிராக்டர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்தவர் எதுபூஷன் ரெட்டி (32). இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. லோகேசும், எதுபூஷன்ரெட்டியும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் லோகேஷ் தனது வீட்டில் இருந்தார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு ரவுடி எதுபூஷன் ரெட்டி, ஓசூர் பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (34) மற்றும் மேலும் 2 பேர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் லோகேசை வீட்டில் இருந்து வெளியே அழைத்தனர். அப்போது வெளியே வந்த அவரிடம் பேசிய எதுபூஷன்ரெட்டி, நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன். எனக்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. எனவே பணம் தருமாறு கேட்டார்.
ஆனால் லோகேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதுபூஷன்ரெட்டி தன்னுடன் வந்த ரவுடி கஜா மற்றும் மேலும் 2 பேர் உதவியுடன், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் (பிஸ்டல்) லோகேசின் இடதுபுற நெற்றியில் சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் சரிந்து விழுந்தார்.
அவரை சுட்டதும் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது. இந்த நிலையில் லோகேசின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி ஜெயந்தி (30) மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் லோகேசை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கொலையாளிகள் தப்பித்து செல்ல முடியாதபடி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே காரில் வந்த எதுபூஷன்ரெட்டி, கஜா ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான ரவுடி கஜா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓசூரில் கொலை முயற்சியில் தப்பியவர். அந்த நேரம் அவருடன் இருந்த அவரது நண்பர் மகேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரி என்பவரை ஓசூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நேரு நகரில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தனர்.
அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓசூர் தி.மு.க. பிரமுகர் மன்சூரை பண விவகாரத்தில் ரவுடி கஜா மற்றும் அவரது கூட்டாளிகள் அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெட்டிக்கொலை செய்தனர்.
2 கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கஜா, ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். ஓசூர் டவுன் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலில் அவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு லோகேஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் ஒரு காரில் 4 பேர், லோகேஷ் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லோகேசை, எழுப்பினர். நிலம் விற்பனை சம்பந்தமாக பேச வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த லோகேஷ் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். உடனே மர்ம கும்பல், திடீரென லோகேசை தாக்கினர்.
மேலும் அவர்கள் கைத்துப்பாக்கியால் லோகேசை சுட்டனர். இதில் மார்பில் குண்டுபாய்ந்து அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த லோகேசின் மனைவி ஜெயந்தி, துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு லோகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மின்னல் வேகத்தில் மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் லோகேஷ் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
நிலம் விற்பனை தொடர்பாக லோகேசுக்கும், குருபரப்பள்ளியை சேர்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் லோகேஷ் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பலமுறை ரெட்டி, லோகேசிடம் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால் லோகேஷ் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரெட்டி , தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து நள்ளிரவு லோகேசை கைத்துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர் என்று தெரிய வந்தது.






