search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    போச்சம்பள்ளி அருகே இன்ஸ்பெக்டர் அழைப்பதாக கூறி கோவில் பூசாரியை கடத்தி ரூ.3 லட்சம் பறித்த கும்பல்

    போச்சம்பள்ளி அருகே பரபரப்பு இன்ஸ்பெக்டர் அழைப்பதாக கூறி கோவில் பூசாரியை கடத்தி ரூ.3 லட்சம் பறித்த கும்பல் போலீஸ் உடையில் வந்து கைவரிசை தருமபுரி-01

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51) அப்பகுதியில் காளி கோவில் கட்டி, தினமும் பூஜை செய்து, ஜோதிடம் பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு போலீஸ் உடையில் வந்த வாலிபர், பாரூர் ஸ்டே‌ஷனுக்கு உங்களை இன்ஸ்பெக்டர் வர சொன்னார் என கூறி பெருமாள் மற்றும் அவரிடம் ஜோதிடம் படிக்க வந்த கோபால் (வயது 35) ஆகியோரை ஒரு காரில் அழைத்து சென்றார்.

    போலீஸ் உடையில் இருந்தவருடன், மேலும் 3 பேர் சாதாரண உடையில் காரில் பயணம் செய்தனர். போலீசார் தான் தங்களை அழைத்து செல்வதாக நினைத்த பெருமாள் மற்றும் கோபால், காரில் புறப்பட்டு சென்றனர்.

    குடிமோனஹள்ளியில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் கார் சென்ற போது அவர்கள் இருவரையும் கட்டையால் தாக்கினர். மேலும் காவேரிப்பட்டணம் அருகே பையூர் பாலத்தில் கோபாலை இறக்கி விட்டு பெருமாளை மட்டும் காரில் கடத்தி சென்றனர்.

    இதையடுத்து வீட்டிற்கு வந்த கோபால் கொடுத்த தகவலின் படி, பாரூர் ஸ்டே‌ஷனில் பெருமாள் உறவினர்கள் திரண்டனர். விசாரணைக்கு யாரையும் அழைத்து வரவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் மர்ம கும்பல் பெருமாளை கடத்தி சென்றது உறவினர்களுக்கு தெரியவந்தது.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் வைத்து பெருமாளை சரமாரியாக தாக்கிய கும்பல், ரூ.25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என அவர் கூறியதால், கடைசியாக 3 லட்சம் ரூபாய் தருமாறு மர்ம கும்பல் கேட்டது.

    இதையடுத்து, செல்போன் மூலமாக தன் மகன் ஜானகி ராமனை தொடர்பு கொண்ட பெருமாள் 3 லட்சம் ரூபாய் எடுத்து வருமாறு கூறினார். இதைத்தொடர்ந்து அவரது மகன் ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு மர்ம கும்பலிடம் அவதானப்பட்டி கோவில் அருகே கொடுத்துள்ளார். இதையடுத்து மர்ம கும்பல் பெருமாளை விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக பாரூர் போலீசில் பெருமாள் புகார் செய்தார். மேலும், தன்னை மிரட்டி பணம் பறித்ததாக சவுட்டஹள்ளியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை அடையாளம் காட்டினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, சவுட்டஹள்ளி பஞ்சாயத்து தலைவர் ஆனந்தன் என்பவர் தான், தன்னை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுக்குமாறு கூறியது தெரிந்தது.

    இதனால் தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவர் ஆனந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×