என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கந்திகுப்பம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). ஊறுகாய் வியாபாரம் செய்து வந்தார். அவரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பசவண்ணகோயில் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரராவ் (57) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று ஊறுகாய் வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார்சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டினார். மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து கந்திகுப்பம் போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 28). கடந்த 15-ந் தேதி முருகன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்றபோது, அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கேட்பாரற்று 3 பைகளில் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கிடந்தது. இது தொடர்பாக போலீசார் செல்போன் ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணிகளில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பைகள் கிடந்தன. அந்த பைகளை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. பைகளில் இருந்த 56 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

    அந்த கஞ்சாவுடன் உள்ளே ஒரு செல்போனும் இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் மூலமாக கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய பைகளை போட்டு சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போச்சம்பள்ளி அருகே புதுகாரை ஓட்டி பழகிய போது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்:

    தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 44). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஆசிரியை அமராவதி கடந்த சில நாட்களுக்கு முன் புது காரை வாங்கினார். இதனால் ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி, தினமும் தருமபுரியில் இருந்து, புதுகாரில் போச்சம்பள்ளிக்கு ஆசிரியை அமராவதி சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து ஆசிரியை அமராவதி வெளியே வந்தார். அப்போது கார் டிரைவர் கடைக்கு சென்று விட்டார்.

    இதனால் டிரைவர் வரும்வரை ஆசிரியை அமராவதி, காரை ஓட்டி பழகலாம் என்று எண்ணினார். அதன்படி புது காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினார்.

    அப்போது காரை கிளம்பிய போது திடீரென அவர் பிரேக்குக்கு பதிலாக கிளட்சை மிதித்து விட்டார். இதில் சீறிபாய்ந்த கார், வேகமாக பள்ளி கட்டிடத்தின் மீது மோதியது. இதில் ஆசிரியை அமராவதி, பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவரை சக ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஆசிரியை அமராவதி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விபத்தில் பலியான ஆசிரியை அமராவதிக்கு சக்திவேல் என்ற கணவரும், 12 வயதில் இரட்டை மகன்களும் உள்ளனர். சக்திவேல் கும்பகோணத்தில் டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
    இரும்பு கம்பிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தளி அட்கோவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓசூரில் மத்தம் சாலையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த நபர் இரும்பு கம்பிகளை திருட முயன்றார். இதை கவனித்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள உலகநந்தஅள்ளியை சேர்ந்த சின்னசாமி (வயது 27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் கூட்டுச் சாலையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
    மத்தூர்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, கல்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 பெண்கள் சுற்றுலாவாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வேனில் வந்தனர். கல்பெருபாக்கம் பகுதி சேர்ந்த சுசிந்திரன் (வயது 27) என்பவர் வேனை ஓட்டினார்.

    நேற்று மாலை ஒகேனக்கல்லில் குளித்து விட்டு புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தருமபுரி ஊத்தங்கரை செல்லும் நெடுஞ்சாலையில் போச்சம்பள்ளி அருகே உள்ள மாவத்தூர் கூட்டுச் சாலை பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே வாத்து கூட்டம் நடந்தது. இதனால் வேன் டிரைவர் பிரேக் போட்டார்.

    இதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையில் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தமிழ் பாரதி (24), அமுதா (40), வினிதா (24), அமலா (35), ஐஸ்வர்யா (18), அலமேலு (32), செவ்வந்தி (23), சுஜாதா (34), டிரைவர் சுசேந்திரன் (27) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்த தொழிலாளி பெரியண்ணன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.900 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெரியண்ணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    குருபரப்பள்ளி அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள வி.மாமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 51). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்காக குருபரப்பள்ளி பகுதிக்கு வந்திருந்தார். இவரும், குள்ள கருப்பன் (45) என்பவரும் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே புலியரசி மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குள்ள கருப்பன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று இறந்த மாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்தமிழ் செல்வராசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 42 ஆயிரத்து 633 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 315 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உள்ளது.
    ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ராம்நகர் மாரியம்மன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராம் நகர் நூர் முகமது (வயது38), அவ்வை நகர் சங்கர் (40), பாகலூர் ஹவுசிங் போர்டு சிவக்குமார் (34), கோவிந்த அக்ரஹாரம் முரளி (28), ராம்நகர் நூருல்லா (38), ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு மஞ்சுநாத் (33), பேரண்டப்பள்ளி ஹரீஷ்குமார் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4,390 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
    சூளகிரி அருகே கார் கவிழ்ந்து புதினா வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகில் உள்ள சூழல்தின்னா பகுதியை சேர்ந்தவர் மணி (வயது24). புதினா வியாபாரி. சம்பவத்தன்று இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். அப்போது இம்மிடிநாயக்கனூர் அருகே மேம்பாலத்தின் சுவரில் கார் மோதியது. இதில் கார், சாலையோரம் இருந்த தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் தண்ணீரில் மூழ்கியதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஓசூரில் பா.ஜனதா நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சீனிவாசன் என்பவருக்கு மர்மநபர் ஒருவர் போன் மூலம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அவர் ஒசூர் ஏ.எஸ்.பி.யிடம் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளார்.

    ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 55) இவர் பா.ஜ.க.வில் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக பதவியில் உள்ளார்.

    இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் அவரிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டி படுகொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

    ஓசூரில் இதுவரை நடந்த கொலைகளை விட மிகவும் பயங்கரமான முறையில் கொலை செய்து விடுயவதாக மிரட்டியதால் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.

    இதையடுத்து அவர், பாஜ.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் ஓசூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×