என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் சிலம்பரசன். காவேரிப்பட்டணம் பேரூர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது அது திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிலம்பரசன் நேற்று கே.ஆர்.பி. டேம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அஞ்செட்டியில் ரேஷன் அரிசி கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி போலீஸ் நிலையம் முன்பு உள்ள சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அதில் 9 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தியதாக சேசுராஜபுரம் அருகே உள்ள சிவலிங்கபுரத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி பாப்பம்மா (வயது 40) என்பவரை கைது செய்தனர். 450 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை அருகே மனைவியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (38), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகேசன் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். பவித்ரா, ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். முருகேசன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டாராம். இதனால் கோபித்துக்கொண்டு பவித்ரா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று மாலையில் பவித்ரா வேலையை முடித்து விட்டு சாலையில் நடந்து சென்ற போது திடீரென முருகேசன் அவரை வழிமறித்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ஆத்திரம் அடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவித்ராவின் இடுப்பு பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
    கந்திகுப்பம் அருகே மதுபோதையில் டிரைவர் கொலை செய்யப்பட்டார். கிணற்றுக்குள் தள்ளிவிட்ட நண்பர் கைது செய்யப்பட்டார்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 36). கார் டிரைவரான இவரும், இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த திலீப்குமார் (40), மனோகரன் (30), பிரதீஷ் (22) ஆகியோர் ஒரப்பம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திலீப்குமார், ரஷீத்தை கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக தெரிகிறது. 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த ரஷித் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ரஷித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரஷித்தை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை அருகே அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை வட்டம் தளியில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையில் கொரனூர் கிராமம் அருகில் ராஜேஷ் (வயது 19), சதீஷ் (22), அப்பு (17) ஆகியோர் ஒரு வாகனத்தில் அரிசி கடத்தி வந்தனர். உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மூட்டை அரிசி பறிமுதல் செய்தனர்.
    பர்கூர் அருகே மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை விற்பனை செய்த எம்.ஜி. என்பவரையும், தம்மகவுண்டனூர் பகுதியில் கஞ்சா விற்ற பவுனம்மாள் என்பவரையும் கைது செய்தனர். 

    மேலும் ஜெகதேவி பகுதியில் அன்வர் (வயது 65), அஜித்குமார் (25) ஆகியோர் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 825 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

    மேலுமலை அருகில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி தாலுகா மேலுமலை ஊராட்சியில் பி.ஜி.துர்க்கம் என்று அழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோவில் மலையடிவாரத்தில் ஆய்வு செய்தது.

    அப்போது பெரிய பாறையில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு இருப்பதை ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    ஒரு பெரிய பாறை முழுவதும், ஒரே கல்வெட்டு 3 இடங்களில் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒவ்வொரு பக்கத்துக்கும் பக்க எண் கொடுப்பது போல 1, 2 மற்றும் 3 என எண் கொடுத்து அதன் கீழே வெட்டி உள்ளனர். செப்பேடுகளில் ஒவ்வொரு பக்கத்திலும் எண்கள் உள்ளன. இந்த கல்வெட்டு ஒய்சாள மன்னர்களில் கடைசி மன்னனான 3-ம் வீரவல்லாளனின் காலத்தைச் சேர்ந்தது.

    இவரது காலத்திய கல்வெட்டுக்களை அத்திமுகம், மல்லப்பாடி, பி.ஜி.துர்க்கம் என 3 இடங்களில் கண்டறிந்துள்ளோம். பி.ஜி.துர்க்க கல்வெட்டின் தொடக்கத்தில் பெரிய அளவிலான கோட்டுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. நடுவில் சக்கரமும், இடப்பக்கம் மனித உருவிலான கண்டப்பேருண்ட பறவையும், வலப்பக்கம் புலியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. அருகில் குடை, சாமரம், சூரியன், சந்திரன் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.

    கல்வெட்டின் முடிவில், பூர்ணகும்பம் மற்றும் குத்துவிளக்குகள் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கி.பி. 1339-ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதி கோவிலின் மடத்துக்கு இங்குள்ள ஒரு ஊர் தானம் அளிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது அக்காலத்திலேயே திருப்பதி புகழ் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கணேசன், ஆசிரியர் ரவி, விஜயகுமார், மாருதி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
    மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 55). இவருடைய மகன் குமார் (32). இவர்கள் இருவரும் காரிமங்கலத்தில் இருந்து காவேரிப்பட்டணத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். காவேரிப்பட்டணம் பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த முனியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் முனியம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஊத்தங்கரை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரையை அடுத்த எக்கூரை சேர்ந்த விவசாயி மணி (வயது 58). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த விவசாயி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள கவர்னர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கவுசிகாஸ்ரீ (வயது 18). சம்பவத்தன்று இவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுசிகாஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பொம்மேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் இவர் நேற்றுமாலை கிருஷ்ணா வரம் கூட்டுச்சாலை பகுதியில் விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம் மண்ணை ஏற்றி கொண்டு கொட்டி விட்டு சென்றார். அப்போது அப்பகுதியில் சென்ற போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை தாறுமாறாக ஓடியது. இதில் சாலையோரம் உள்ள தண்ணீர் இல்லாத 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் பாய்ந்தது. இதில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த வாலிபர் சங்கர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் பாய்ந்து இறந்த சங்கரின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி தாமதமானதால் பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிரேன் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் வாலிபர் சங்கர் உடலையும், டிராக்டரையும் மீட்டனர்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    டிராக்டருடன் கிணற்றில் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் மத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




    தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலகுண்டன் (வயது 31), விவசாயி. இவரை அந்த பகுதியை சேர்ந்த பச்சியப்பன் மற்றும் அவரது தம்பிகள் மன்னார் (43), மாதப்பன் (40) ஆகியோர் தாக்கினர். இது குறித்து அஞ்செட்டி போலீசில் பாலகுண்டன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பச்சியப்பன், மன்னார், மாதப்பன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ×