என் மலர்tooltip icon

    கரூர்

    • புகழூர் நகராட்சி கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார் .துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-புகழூர் நகராட்சிக்குட்பட்ட அன்னை நகர் தெருவில் உள்ள மண் சாலையை ரூ35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். புகழூர் நகராட்சிக்குட்பட்ட மாரியப்ப பிள்ளை காலனியில் மண் சாலையை ரூ61 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். சிந்து நகர் பகுதியில் மண்சாலையைரூ 28 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். ஹை ஸ்கூல் வீதி, பசுபதி நகர் , செம்படாபாளையம், சக்தி நிலா கார்டன் உள்ளிட்ட பகுதியில் ரூ39 அச்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளை புதுப்பித்தல். பாறை வீதி, கௌதமபுரம், பாரதி நகர் காந்தி நகர் ,முருகம்பாளையம் ,நாடார் தெரு, புகழூர் நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரஊ27 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகளை புதுப்பித்தல். குறிஞ்சி நகர், மாரிஸ் கார்டன், கே சி ஆர் நகர் பகுதிகளில் உள்ள மண்சாலையை ரூ 57 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். பரணி நகர், காயத்திரி நகர் பகுதிகளில் உள்ள மண் சாலையை ரூ18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக மாற்றுதல். புகழூர் நகராட்சி கலைமகள் நகர் முதல் உழவர் சந்தை வரை ரூ37 லட்சம் மதிப்பீட்டில்மழை நீர் வடிகால் அமைத்தல். சுந்தராம்பாள் நகர் பகுதியில் ரூ 4.70 லட்சம் மதிப்பீட்டில் பகிர்மான குழாய் விஸ்தரிப்பு செய்தல்,ரூ 18.50 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மராமத்து செய்தல். குமரன் நகர் மற்றும் வாட்டர் டேங்க் சந்து பகுதியில் ரூ23 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மராமத்து செய்தல். உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
    • ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    கரூர்,

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கோயம்பத்தூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உடன் இணைந்து ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி கிராம மக்களின் நலனுக்காக இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தியது. டிஎன்பிஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை, நிறுவனத்தின் செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) மற்றும் நிலைத்தன்மை அதிகாரி சீனிவாசன், பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், கோயமுத்தூர். ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மாதேஷ்வரன், தலைமையில் 24 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மூளை மற்றும் நரம்பியல், முதுகு தண்டுவடம், சிறுநீரகம், வயிறு, நுரையீரல், இருதயம், எலும்பு, தோல், குழந்தைகள் நலம், மகப்பேறு, கர்ப்பப்பை, காது, மூக்கு, தொண்டை, புற்றுநோய், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் அறிகுறிகளுக்கும் பொது மருத்துவர், மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த சுமார் 692 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தப் பரிசோதனை, பி.எம்.டி. பி.எப்படி., ஈ.சி.ஜி. பரிசோதனையும் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. காகித நிறுவனத்தின் சார்பாக முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காலை சிற்றுண்டி மதிய உணவு. தேநீர் மற்றும் பேருந்து வசதி அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது.

    இச்சிறப்பு மருத்துவ முகாமினை காகித நிறுவனத்தின் மனித வளத்துறை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமையில் மனித வளத்துறை அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
    • முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

    தொட்டியம்:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.

    பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.

    இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.

    பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.

    முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.

    கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.

    தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • புரோகீதர்கள் மீது குற்றச்சாட்டு

    கரூர்,

    கரூர் மாநகரின் மையப்பகுதியில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெளிப் பிரகாரத்தில் உள்ள நால்வர் அரங்கம், புகழ்ச்சோழர் மண்டபங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தனிநபர் ஒருவரின் 60-ம் கல்யாணம், அம்பாள் சன்னதியின் முன்புறம் கலசங்கள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவனடியார்கள் பள்ளியறை நிகழ்விற்குப் பிறகு அம்பாள் சன்னதி முன்பு திரண்டு நடையை சாத்தவிடாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, அதற்கான தொகை செலுத்தி பூஜை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால், இது போன்ற நிகழ்வுகள் இக்கோவிலில் இதுவரை நடந்தது இல்லை எனக் கூறிய சிவனடியார்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக செயல் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இரவில் நடந்த சிவனடியார்களின் இந்தப் போராட்டம் காரணமாக கோவிலின் நடை சாத்த 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • ஓடும் ஆம்புலன்சில் கல்லை கொண்டு தாக்கி உள்ளார்

    கரூர், 

    மரக்காணம் தாலுகா, கொங்கை நகரை சேர்ந்த உதயகுமார் (வயது 35), கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை, ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு, திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கருப்பத்துார் பஸ் ஸ்டாப் அருகே, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை ஒருவர் கல்வீசி உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தையில் திட்டி, தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து, டிரைவர் உதயகுமார் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார், கருப்பத்துார் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், (வயது 26), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • கார் விபத்தில் மூதாட்டி பலியானார்
    • ஏற்கனவே இருவர் மரணமடைந்த நிலையில் தற்போது மூதாட்டியும் உயிரிழந்துள்ளார்

    கரூர்,

    கரூர், திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). இவர் கரூரில் இருந்து ஹூண்டாய் காரில், தாய் மோகனா (வயது 65), அக்கா மகள் தருண், ஆகியோருடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி அருகே, ரங்கநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருப்பூரில் இருந்து, கரூர் நோக்கி சென்ற தனியார் பஸ், கார் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே ராம்குமார், தருண் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மோகனா, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனியப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
    • ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நடைபெற்றது

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரையில் முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .அதேபோல் அருகாமையில் உள்ள முனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு முனியப்பசாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தளவாபாளையத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து தளவாபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் நல்லசிவம் தலைமை வகித்தார். கரூர் மேற்கு ஒன்றிய பார்வையாளரும், மருத்துவ பிரிவு மாநில செயலாளருமான டாக்டர் அரவிந்த் கார்த்திக் தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கரூர் ஒன்றிய பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், தம்பிதுரை, ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், பிரச்சார பிரிவு தலைவர் சேனாபதி, ஐடி பிரிவு தலைவர் கவியரசு, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய மகளிரணி தலைவி பிரியா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விபத்து நடந்த பகுதியில் கைபற்றப்பட்ட நம்பர் பிளேட்டை வைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
    • விபத்தில் மரணம் என்று சாதாரணமாக முடித்த வழக்கு, உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தால் உண்மை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கரூர்:

    கரூர் மாவட்டம், வெள்ளி யணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 57). கதிரடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.

    நேற்று அதிகாலை இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது தோட்டத்திலிருந்து வீட்டிற்கு செனறு கொண்டிருந்தார்.

    கொறவப்பட்டி-தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் வந்த போது அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விபத்து என கருதி விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்து தங்கராஜின் மகன் மோகனசுந்தரம்(வயது 30), தனது மனைவியுடன் சென்று தந்தையின் உடலை பெற்றுக் கொண்டு கதறி அழுதார். இந்நிலையில் தங்கராஜின் உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விபத்து நடந்த பகுதியில் கைபற்றப்பட்ட நம்பர் பிளேட்டை வைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    அப்போது அந்த நம்பர் பிளேட் டேங்கர் லாரியினுடையது என்பது தெரிய வந்தது. அந்த டேங்கர் லாரி யாருடையது என்று போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த நெம்பர் பிளேட், இறந்த தங்கராஜின் மகன் மோகன சுந்தரத்துடையது என்பது தெரிய வந்தது.

    தந்தை உடல் முன்பு கதறி அழுது நாடகமாடி கொண்டிருந்த மோகன சுந்தரத்தை , தனியாக அழைத்து சென்று போலீசார் தங்களது 'ஸ்டைலில்' விசாரித்துள்ளனர்.அதில் தங்கராஜை கொன்றதை ஒப்புக்ககொண்டு மோகன சுந்தரம் கூறும் போது,

    எனது தாயார் அதாவது தங்கராஜின் மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து இருந்தார். எனக்கு 30 லட்சம் கடன் உள்ளது. இதனை அடைப்பதற்காக சொத்தை எழுதி தர கேட்டேன். ஆனால் அவர் எழுதி தர மாட்டேன் என கூறினார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    ஒரு கட்டத்தில் சொத்து எங்கே தன் கையை விட்டு, தந்தையின் கள்ளக்காதலிக்கு போய் விடுமோ? என்ற பயம் ஏற்பட்டது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதனை தனது மாமா உறவு முறையான மகாசாமி(45) என்பவரிடம் கூறினேன்.

    அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் கொறவப்பட்டி-தம்மநாய க்கன்பட்டி பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தை மீது டேங்கர் லாரியை மோத விட்டு கொன்றேன் இவ்வாறு கூறியுள்ளார். அவரின் வாக்கு மூலத்தை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து, மோகனசு ந்தரம், மகாசாமி இருவரையும் வெள்ளியணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    விபத்தில் மரணம் என்று சாதாரணமாக முடித்த வழக்கு, உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தால் உண்மை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கரூரில் புகையிலை விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
    • ஏராளமான புகையிலை பறிமுதல்

    கரூர் குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்களம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் தனது பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற அப்ரோஸ் (வயது 68) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் விற்பனைக்காக இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி சரோஜா (58). இவர்கள் இருவரும் வாங்கள் டூ கரூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் வெங்கடாசலம் என்பவர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் பட்டு இறந்து விட்டார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் அருகில் கிடந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த வெங்கமேடு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமணமான ஒரு மாதத்தில் காதல் கணவர் மாயமானார்
    • மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை

    தொட்டியம், 

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் கருப்பம்பாளையம், அபி பாளையம், மூப்பத்தெருவை சேர்ந்த மணி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது (22) இவருக்கும் கரூரைச் சேர்ந்த கோபிகா வயது (19) என்பவருக்கும் கடந்த மாதம் ஆறாம் தேதி நண்பர்கள் முன்னிலையில் காதல் திருமணம் நடைபெற்றது சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜய் என்பவரும் வழக்கு சம்பந்தமாக தொட்டியம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வருவதாக கோபிகாவிடம் சொல்லிவிட்டு வந்தனர் பின்பு வீடு திரும்ப காலதாமதம் ஆனதால் கோபிகா கிருஷ்ணமூர்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நானும், அஜையும், தொட்டியம் நீதிமன்றத்தில் இருப்பதாக கூறியுள்ளார் பின்பு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் கோபிகா அஜய் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நான் இருசக்கர வாகனத்தில் கரூருக்கு வந்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார் தனது கணவர் எங்கே? என்று கேட்டதற்கு கிருஷ்ணமூர்த்தி தொட்டியத்தில் இருந்து காரில் சென்று விட்டதாக அஜய் கூறியுள்ளார் திருமணமான ஒரு மாதத்தில் தனது கணவர் கிருஷ்ணமூர்த்தி தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்து வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×