என் மலர்tooltip icon

    கரூர்

    • நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.
    • பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கரூர்:

    கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனைவியிடம் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் திருமண தகவல் மையம் மூலம் 2-வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார்.

    அப்போது நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் வரன் தேடி ஆன்லைனில் பதிவிட்டு இருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார்.

    பின்னர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் தனது பெயர் ரவிச்சந்திரன் என்றும் மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா என சகட்டு மேனிக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

    அவரது பந்தாவான தோற்றம், சொகுசு கார்கள் போன்றவை அந்த கைம்பெண்ணை நம்ப வைத்தது. பின்னர் உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    அவரது பேச்சில் உருகிய அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதித்து செல்போன்களில் அடிக்கடி பேசி வந்தனர்.

    பின்னர் ஒரு நாள் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் பணம் தேவைப்படுகிறது என கேட்டார்.

    அந்த பெண்ணும் வருங்கால புருஷன் தானே கேட்கிறார் என்று தன்னிடம் இருந்த 167 சவரன் நகைகளை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்தார். பின்னர் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண் பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அவரது செல்போன் டவரை வைத்து தேடியதில் கரூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

    போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது ஒரு பெண்ணும் அவருடன் இருந்தார். விசாரணையில் கரூரை சேர்ந்த அந்த பெண் பல் டாக்டராக இருப்பது தெரியவந்தது.

    திருச்செங்கோட்டை சேர்ந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு கரூரில் உள்ள பல் டாக்டருக்கு வலைவீசி பேசியுள்ளார்.

    வழக்கம்போல் திருமண ஆசை காட்டி அவரையும் மயங்க செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பெண் டாக்டரை ஏமாற்றி கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். எப்போதும் வீட்டில் நிரந்தரமாக ரவிச்சந்திரன் தங்குவதில்லை.

    அவ்வப்போது அந்த பெண் டாக்டரை பார்க்கச் செல்லும் அவர், தனது மோசடி அம்பலமாகிவிடும் என கருதி லாட்ஜ் மற்றும் விடுதிகளிலேயே தங்கி வந்துள்ளார்.

    மேலும் கரூர் பெண் பல் டாக்டரிடம் இருந்து வாங்கிய பணத்தில் இரண்டு சொகுசு கார்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பெண்களை குறி வைத்து அவர்களிடம் பணம் நகைகளைப் பெற்றுக் கொண்டு வேறு பெண்களுடன் இருந்ததும் அம்பலமாகி உள்ளது.

    ரவிச்சந்திரனின் வலையில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் சில பெண்கள் விழுந்து நகை பணத்தை தொலைத்து இருக்கிறார்கள்.

    ஆனால் குடும்ப கவுரவம் கருதி அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் கரூர் மற்றும் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கிரீஸ் சுற்றுப் பயணம் நேற்று முடிவடைந்து இந்தியா புறப்பட்டார்
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்க இருக்கிறார்

    பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார்.

    இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''சந்திரயான்-3 வெற்றியின் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • வளர்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
    • தீபாராதனை நடந்தது

    கரூர்

    தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது பூஜையில் பக்தர்கள் தங்களிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்களை கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண் சாமி தரிசனம் செய்தனர்.

    • வாகன விபத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் பலியானார்.
    • மொபட் மீது கார் மோதியது

    கரூர்

    கரூர் வாங்கல் குப்புச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 42). இவர் கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கரூர்-வாங்கல் சாலையில் வேட்டைகாரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (42) சேலத்தில் இருந்து வாங்கல் வழியாக கரூரை நோக்கி காரில் வந்தார்.

    அப்போது அந்த கார், மலர்கொடி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
    • மரங்கள் பராமரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது

    கரூர்

    தோகைமலை வட்டார வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வனத்துறை சார்பாக விவசாயிகள் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது எப்படி, தமிழ்நாடு அரசு சார்பாக இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள், இலவச மரக்கன்றுகளை பெறுவது எப்படி இதற்கான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் சிறுதானிய பொருள் மதிப்பு கூட்டுதல், வணிக கடனை விவசாயிகள் பயன்பெறுவதற்கான ஆவணங்கள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தோட்டக்கலைத்துறை சார்பாக இடுபொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வனத்துறை வனகர் பழனிச்சாமி, வேளாண் வணிகம் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உதவி தோட்டக்கலை அலுவலர் லெனின் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    • தம்பதியை தாக்கிகொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்

    கரூர் குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழியான் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி (35). இந்த தம்பதியின் மகள் ஸ்ரீதியா (15), உறவினர்களான நடராஜன் (57), கீர்த்தனா (28). இவர்கள் 5 பேரும் கோவிலுக்கு செல்வதற்காக தங்களது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் அவரது மனைவி புவனேஸ்வரி, கனகராஜ் அவரது மனைவி மேகலா ஆகியோர் கனிமொழியான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்து அவர்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த கனிமொழியான் உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கனிமொழியான் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் சதீஷ்குமார், புவனேஸ்வரி, கனகராஜ், மேகலா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது
    • மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது

    கரூர்

    தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசித்தலை மேம்படுதற்காக ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கலந்து கொண்டு, பயிற்சிகளை மேற்பார்வை செய்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சிறப்பு கருத்தாளர் சாந்தி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை தோகைமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மலையாளம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சந்திராயான்-3 நிலவில் தரை இறங்கியதை கரூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள்நேரில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்
    • பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கல்லூரி மாணவிகள் நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தவுட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்
    • அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் அரவக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் பகுதிக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுப்பதற்கு காவிரி ஆற்றில் 50 அடிக்குமேல் குழி தோண்டியுள்ளனர். இதனால் தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூர் பகுதிகளில் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், உயர் அதிகாரிகள் வரை மனு கொடுத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் வைக்கப்பட்டுள்ள மிக அதி நவீன ராட்சத மின்மோட்டருக்கு மின் சப்ளை பற்றாக்குறையாக இருப்பதால், நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையத்திற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு ரட்சத மின்மோட்டோருக்கு புதிதாக மின் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரை அந்தப் பகுதியில் மின் சப்ளை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட குவிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். அப்புறப்படுத்தும் போது பொதுமக்கள் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள் . அப்போது குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணனிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரவு நேரம் ஆனதன் காரணமாகவும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கட்டிபாளையம் ,தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூர் ,அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி குடிநீர் திட்ட பணிகளை நிறுத்துவதற்கான கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • கரூர் கசப்-இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • இ-சலான் மிஷினை சேதப்படுத்தியதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு

    கரூர்

    கரூர், எல்.ஜி.பி., நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார் (வயது 28) இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், மனோகரா கார்னர் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., சண்முக வடிவேல், அபராதம் விதித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சரவண குமார், எஸ்.ஐ., சண்முக வடிவேலுவை, பணி செய்ய விடாமல் தடுத்து, இ-சலான் மெஷினை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, எஸ்.ஐ., சண்முகவடிவேல் கொடுத்த புகார்படி, சரவணகுமார் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • கரூர் மாவட்ட எறிபந்து அணிக்கு அரவக்குறிச்சி அரசு கலலூரி மாணவி நந்தீஸ்வரி தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை, முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

    கரூர்,

    தமிழ்நாடு எறிபந்து கழக அனுமதியுடன், சேலம் மாவட்ட எறிபந்து விளையாட்டு சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி நத்தீஸ்வரி தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • குளித்தலை அடுத்த சூரியனூரை சேர்ந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • தாயை காப்பாற்ற சென்றதால் மகனுக்கு அரிவாள் வெட்டு காயம்

    கரூர்

    குளித்தலை அடுத்த, சூரியனுாரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). விவசாயி கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த பாரிவேந்தன் (32), கூலி தொழிலாளி. பாரிவேந்தன், விஜயை தகாத வார்த்தை பேசி திட்டியுள்ளார். இது குறித்து விஜய் அவருடைய தாயிடம் தெரிவித்தார்.

    இது குறித்து தட்டி கேட்க வந்த விஜய் தாயை , பாரிவேந்தன் அரிவாளால் வெட்ட முயலும் போது, அதை தடுத்த விஜயின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் விஜய்க்கு ரத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விஜயை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளித்தலை போலீசார், பாரிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ×